states

இந்தியாவிற்கே வழிகாட்டும் தமிழ்நாடு : கே.பாலகிருஷ்ணன் பெருமிதம்

கோயம்புத்தூர் ஜூன் 16- தான் என்கிற அகங்காரத்தோடு ஆட்சி நடத்திக் கொண்டிருந்த மோடி அரசுக்கு நெருக்கடியை உருவாக்கி இந்தியாவுக்கே தமிழ்நாடு வழிகாட்டிக் கொண்டிருப்பதாக சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பெருமிதத்துடன் தெரிவித்தார். கோவையில் திமுக சார்பில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பால கிருஷ்ணன் பேசுகையில், கோவையை மத வெறிக் காடாக மாற்ற முயன்ற பாஜகவுக்கு மக்கள் தக்க பதிலடி கொடுத்திருக்கிறார்கள். தமிழ்நாடு புதுச்சேரியில் 40க்கு 40-ம் இந்தியா கூட்டணி வசம் வந்துவிட்டாலும்,நாடு நம்மிடம் இல்லை என கூட்டணி கட்சித் தலைவர்கள் வருந்துகின்றனர்.  தான் என்ற அகங்காரம் கொண்ட மோடி அரசால் கூட்டணி ஆட்சியை நீண்ட காலம் நடத்த முடியாது. 40 நமக்கு உடனே கிடைத்துவிட்டது; நாடும் நமக்கு கிடைக்கும். சற்று தாமதமாக கிடைக்கும் அவ்வளவே. தேர்தல் ஆணையம் முறையாக செயல்பட்டிருந்தால், இன்று இந்தியா கூட்டணி தான் ஆட்சி அமைத்திருக்கும். தேர்தல் ஆணையத்தின் தவறால், தவறிழைத்தவர்கள் இன்று ஆட்சியில் அமர்ந்திருக்கிறார்கள். மோடி அரசு இனி நாடாளுமன்றத்தில் அராஜ கம் செய்ய முடியாத அளவுக்கு தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணிக்கு வெற்றி கிடைத்திருக்கிறது.

மோடி நினைத்ததை எல்லாம் இனி நிறைவேற்ற முடியாது. அரசியல் சட்டத்தை திருத்த முடியாது. அம்பேத்கர் இயற்றிய அரசியல் சாசனம் பாதுகாக்கப்படும் வகையில் இந்தியா கூட்டணி வெற்றியை பெற்றிருக்கிறது. விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணித்து இருக்கிறது. ஆனால் மக்கள் ஏற்கனவே அதிமுகவை புறக்கணித்து விட்டார்கள். தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணியின் வெற்றி  மதவெறி சக்திகளுக்கு முடிவு கட்டுகின்ற வெற்றியாக அமைந்திருக்கிறது. அனைத்து தொகுதிகளிலும் முதல்வர் ஸ்டாலின், தானே வேட்பாளராக நிற்பதைப் போல எண்ணி தேர்தல் பணியாற்றினார். அமைச்சர்கள் அனைவரும் தொண்டர்களைப் போல் பணியாற்றி வெற்றியைத் தேடித் தந்திருக்கிறார்கள். இந்தியாவுக்கே தமிழ்நாடு வழிகாட்டுகிற மாநிலமாக இருக்கிறது. மதவெறி சக்திகளுக்கு எதிராக இந்தியா கூட்டணிக்கு மக்கள் கொடுத்த வெற்றிக்காக தமிழ்நாட்டு மக்களை பாராட்டியே ஆக வேண்டும். தமிழ்நாட்டில் திமுக தலைமை யிலான கூட்டணியை 5 ஆண்டுகளாக சிறு பிசகும் ஏற்படாமல் முதல்வர் வழிநடத்தி வெற்றிக் கூட்டணியாக கொண்டு செல்கிறார். தமிழ்நாட்டின் வெற்றி, நாளை இந்தியாவில் வெற்றியாக பரிணமிக்கும். நாடே தமிழ்நாட்டின் பின்னால் நிற்கின்ற நாள் உருவாகும்” என்றார்.

;