states

தமிழக மீனவர்களின் துயரம் இன்னும் எத்தனை காலம்?

தில்லி, செப்.30- இலங்கை கடற்படையால் இன்னும் எத்தனை நாட்களுக்கு தமிழக மீனவர்கள் துயரங்களை அனுபவிப்பார்கள் என்றும், தமிழக மீனவர்களின் துயர் துடைக்க எடுத்த நடவடிக்கைகள் என்ன என்றும், ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. கே.கே.ரமேஷ் என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், “தமிழகத்தின் இராமேஸ்வரம், தூத்துக்குடி, நாகப்பட்டினம் மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுகின்றனர். இலங்கை சிறையில் 100-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் உள்ளனர். படகுகளும் சிறைபிடிக்கப்பட்டுள்ளது.  மீனவர்களை விடுவிப்பதுடன் இலங்கை அரசுடன் ஒன்றிய அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினரிடமிருந்து பாதுகாக்க சர்வதேச கடல் எல்லையில் இந்திய கடற்படை கப்பலை கண்காணிப்புக்கு நிறுத்த வேண்டும்’’ என வலியுறுத்தி இருந்தார்.

செப்டம்பர் மாதத் துவக்கத்தில், இந்த மனுவை விசாரித்த அனிருத்தா போஸ், விக்ரம் நாத் ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு, இவ்வழக்கில் பதில் மனு தாக்கல் செய்யுமாறு ஒன்றிய அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. இதனிடையே, வெள்ளிக்கிழமையன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான சி.ஆர்.ஜெய சுகின், மீனவர்கள் இன்னும் மீட்கப்படாமல் இருப்பது கவலையளிப்பதாக தெரிவித்தார்.  ஒன்றிய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் கே.எம்.நட்ராஜ், “இந்த ரிட் மனு தெளிவாக இல்லை. இருப்பினும், இந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் கேட்டு தெரிவிக்க கூடுதல் அவகாசம் தேவை” என குறிப்பிட்டார். இதைகேட்ட நீதிபதிகள், “இன்னும் எத்தனை நாட்களுக்கு தான்  தமிழக மீனவர்கள் துயரத்தை அனுபவிப்பார்கள்?. தமிழக மீனவர்க ளின் துயர் துடைக்க ஒன்றிய அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன?’’ என கேள்வி எழுப்பினர். பின்னர், ஒன்றிய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் கேட்ட கூடுதல் கால அவகாசத்தை வழங்கி, விரிவான அறிக்கையை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டனர். விசாரணை யையும் அக்டோபர் 14-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

;