states

அலிகார் பல்கலைக்கழகத்திற்கான சிறுபான்மை அந்தஸ்து செல்லும்

புதுதில்லி, நவ. 8 - அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழ கத்திற்கான சிறுபான்மை அந்தஸ்து  செல்லும் என, உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு, பெரும்பான்மையாக தீர்ப்பளித்துள்ளது. தலைமை நீதிபதி டி.ஒய். சந்திர சூட் தலைமையிலான அரசியல் சாசன அமர்வில் இடம்பெற்ற 7 நீதிபதிகளில், 4 நீதிபதிகள் “அலிகார் இஸ்லாமிய பல்கலைக்கு சிறுபான்மையினர் அந்தஸ்தை மறுக்க முடியாது” என்று ஒருமித்த தீர்ப்பையும், ஏனைய 3 நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்புகளையும் அளித்துள்ளனர். இந்தியாவின் புகழ்பெற்ற பல் கலைக்கழகங்களில் உத்தரப்பிரதேச மாநிலம் அலிகார் நகரில் உள்ள அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழக மும் ஒன்றாகும். 150 ஆண்டுகளுக்கு முன், 1875-இல், சர் சையது அகமது கான் என்பவரால் நிறுவப்பட்டது. ஒவ் வொரு ஆண்டும் சுமார் 45 ஆயிரம் மாணவ - மாணவியர் கல்வி பெறு கின்றனர்.  இந்த பல்கலைக்கழகம், இந்திய அரசியலமைப்புப் பிரிவு 30(1)-இன் கீழ் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவ ரால் நிறுவப்படவில்லை அல்லது நிர்வகிக்கப்படவில்லை என்பதால், இது சிறுபான்மை நிறுவனம் ஆகாது என்று நீதிபதி எஸ். அஸீஸ் பாஷா  தலைமையிலான உச்ச நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் அமர்வு கடந்த 1967-ஆம் ஆண்டு தீர்ப்பு வழங்கியிருந்தது. இந்நிலையில், அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் சட்டத்தில் 1981-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தின் அடிப்படையில், இந்தப் பல்கலைக்கழகம் இந்திய முஸ்லிம்களால் நிறுவப்பட்டது என்று கூறி, அதற்கு சிறுபான்மை அந்தஸ்து வழங்கப்பட்டது. ஆனால், 1967-ஆம் ஆண்டு தீர்ப்பைச் சுட்டிக் காட்டி, 2006-ஆம் ஆண்டில் அந்தத் திருத்தத்தை அலகாபாத் உயர் நீதி மன்றம் ரத்து செய்தது. எனவே, அலகாபாத் உயர் நீதி மன்றத்தின் இந்தத் தீர்ப்பை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. 2019-ஆம் ஆண்டு, அன்றைய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான 3 நீதிபதிகள் அமர்வு, இந்த வழக்கை 7 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றியது. அதன்படி தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், நீதிபதிகள் சஞ்சீவ்  கண்ணா, சூர்ய காந்த், ஜே.பி. பர்தி வாலா, தீபங்கர் தத்தா, மனோஜ்  மிஸ்ரா மற்றும் எஸ்.சி. சர்மா ஆகி யோர் அடங்கிய அமர்வு இவ்வழக்கை விசாரித்து வெள்ளிக்கிழமையன்று தமது தீர்ப்பை வழங்கியது. இதில், மத மற்றும் மொழிச் சிறு பான்மையினர் கல்வி நிறுவனங் களை நிறுவுவதற்கும் நிர்வகிப்ப தற்கும் அதிகாரம் அளிக்கும் அரசிய லமைப்பின் 30-ஆவது பிரிவின் கீழ் அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழ கம் சிறுபான்மை அந்தஸ்து பெற்றுள் ளதா என்ற சட்டரீதியான கேள்விக்கு நான்கு தனித்தனியான தீர்ப்புக்களை நீதிபதிகள் வழங்கியுள்ளனர். இதில், பெரும்பாலான நீதிபதிகள் அதாவது 4 : 3 என்ற விகிதத்தில்,  அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழ கத்துக்கு சிறுபான்மை அந்தஸ்து வழங்கியது செல்லும் என்று ஒருமித்த தீர்ப்பை வழங்கினர். “ஒரு கல்வி நிலையம், சிறு பான்மை நிறுவனமாக இருப்பதற்கு அது சிறுபான்மையினரால் நிறுவப் பட்டிருக்க வேண்டும். ஆனால், சிறு பான்மை உறுப்பினர்களால் மட்டுமே நிர்வகிக்கப்பட வேண்டும் என்பது அவசியமில்லை என்று நாங்கள் கருது கிறோம். ஒரு கல்வி நிறுவனம் ஒரு மத அல்லது மொழிச் சிறுபான்மையின ரால் நிறுவப்பட்டால் அது சிறு பான்மைக் கல்வி நிறுவனம் தான்.  சிறுபான்மை கல்வி என்பதை நிரூ பிக்க, நிர்வாகம் சிறுபான்மையின ரிடம் தான் இருந்தாக வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. அர சியலமைப்புப் பிரிவு 30(1)-இன் நோக்கமானது, சிறுபான்மையின ருக்கு சிறப்பு உரிமைகளை வழங்கு வது ஆகும். ஒரு சிறுபான்மை நிறு வனம் தனது நிர்வாகத்தில் மதச்சார்பின்மையைக் கடைப்பிடிக்க விரும்பலாம். அதன்படி ஒரு நிறு வனத்தில் முறையான நிர்வாகத்திற்கு, இவர்கள் தான் தகுந்தவர்கள் என்று கருதும் பிற சமூகத்தவரையும் கூட நிர்வாகத்தில் வைக்கலாம். அதற்கு அவர்களுக்கு உரிமை உள்ளது.  அதற்காக நிர்வாகம் சிறு பான்மையினரிடம் இல்லை என்றும், சிறுபான்மையினர் கல்வி நிறுவனம் இல்லை என்றும் ஆகி விடாது.  அதேபோல, காலனி ஆட்சிக்கால சட்டத்தின் கீழ் (1920 சட்டத்தின் மூலம்) அங்கீகரிக்கப்பட்டதால், அந்த கல்வி நிறுவனம் சிறுபான்மையினரால் நிறுவப்படவில்லை என்று முடிவுக்கும் வரமுடியாது. அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்த பிறகு நிறுவப்பட்ட நிறுவனங்களுக்கு மட்டுமே சிறுபான்மையினர் அந்தஸ்து பொருந்தும் என்றால், அரசி யலமைப்பின் 30-ஆவது பிரிவே நீர்த்துப் போகும்.  பல்கலைக்கழகத்தை அமைத்தது யார், அதன் பின்னணியில் உள்ளவர் யார் என்பதன் அடிப்படையிலேயே சிறுபான்மையினர் கல்வி நிறுவனம் என்பதற்கான வரையறையை முடிவு செய்ய முடியும்” என்று தீர்ப்பளித்த னர். அதேநேரம், நீதிபதிகள் சூர்ய காந்த், தீபங்கர் தத்தா மற்றும் எஸ்.சி. சர்மா ஆகியோர் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினர். இந்த தீர்ப்பின் மூலம், அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம் தமது இடங்களில் 50 சதவிகிதத்தை முஸ்லிம் மாணவர்களுக்கு ஒதுக்குவதற்கு மீண்டும் வழிவகை செய்துள்ளது.