states

மோடி அரசு - கார்ப்பரேட் கொள்ளைக் கூட்டை அம்பலப்படுத்துவோம்! - நாகை மாலி எம்எல்ஏ பேச்சு

மதுரை, டிச. 20 - கார்ப்பரேட் முதலாளிகளின் கொள்ளைக் காக, மக்களின் வாழ்வாதாரத்தை- இயற்கைவளங்களை அழிக்கும் ஒன்றிய பாஜக அரசை அம்பலப்படுத்துவோம் என்று, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்றக்குழுத் தலைவர் வி.பி. நாகை மாலி எம்எல்ஏ கூறினார். டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்திற்கு எதிரான வாலிபர் சங்கத்தின் நடைப்பயணத்தைத் துவக்கி வைத்து, நாகை மாலி எம்எல்ஏ மேலும் கூறியதாவது: ஒன்றிய அரசு மக்களுக்கு விரோதமான செயல்களைத் தொடர்ச்சியாகச் செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாகத்தான் அரிட்டாபட்டி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை அழித்தொழிக்க டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்தின் மூலம் முயற்சி செய்து வருகிறது. நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள், இடதுசாரி உறுப்பினர்கள் அனைவரும் வலுவான எதிர்ப்புக் குரலை எழுப்பி வருகின்றனர். மதுரை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன், டங்ஸ்டன் சுரங்கத் திட்டம் இப்பகுதியில் அமல்படுத்தப்பட்டால் ஏற்படும் சீரழிவு குறித்து தீர்மானம் கொண்டு வந்து நாடாளுமன்றத்தில் வலுவாக வலியுறுத்தி வருகிறார். தமிழ்நாடு அரசும் கடந்த 9-ஆம் தேதி சட்டமன்றத்தில் டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்று முதலமைச்சர் அவர்கள் வலுவான தீர்மானத்தை நிறைவேற்றினார். நாங்கள் அனைவரும் அத்தீர்மானத்தை ஆதரித்து வழிமொழிந்தோம். இச்சட்டமன்றத் தீர்மானம் ஆளுநர் வழியாக ஒன்றிய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மக்கள் நலனுக்கு எதிரான திட்டம் மக்களுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய இத்திட்டத்தை ஒன்றிய அரசு கையில் எடுத்துள்ளது. ஒரு அரசு என்பது மக்களுக்கு நல்ல திட்டங்களை நிறைவேற்றக்கூடியதாக இருக்க வேண்டும். ஆனால் இன்றைய மோடி அரசாங்கம் ஏழை - எளிய மக்களுக்கான அரசாங்கமாக இல்லை. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் பன்னாட்டு முதலாளிகளுக்கும் ஆதரவான அரசாக செயல்படுகிறது.

இதே ஒன்றிய அரசுதான் மூன்று வேளாண் சட்டங்களை நாடாளுமன்றத்தில் கொண்டு வந்தது. இச்சட்டங்கள் அமல்படுத்தப்பட்டிருந்தால், நமது நாட்டின் விளைநிலங்கள் அனைத்தும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்குத் தாரை வார்க்கப்பட்டிருக்கும். விவசாயிகளையும், விவசாய நிலங்களையும் அழிக்கும் சட்டமாக அது இருந்தது. அச்சட்டத்தை எதிர்த்து இந்திய விவசாயிகள் ஓராண்டுக்கும் மேலாகப் போராடியதன் விளைவாக, மோடி அரசாங்கம் அச்சட்டத்தையே திரும்பப் பெற்றது. மக்கள் சக்தியின் முக்கியத்துவம் எந்தவொரு போராட்டமும் மக்கள் சக்தி இல்லாமல், மக்கள் போராடாமல் வெற்றி பெற முடியாது என்பதை இதன்மூலம் நாம் அறிந்து கொண்டோம். இதையே அரிட்டாபட்டி மக்களும் புரிந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இன்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் “விவசாயத்தைக் காப்போம்! இயற்கை வளங்களைப் பாதுகாப்போம்! கனிம வளங்களைப் பாதுகாப்போம்!” என்ற கோரிக்கைகளுடன் நடைப்பயணத்தைத் தொடங்கியுள்ளது. இச்சங்கம் இளைஞர்களின் பொழுதுபோக்குக்காக உருவாக்கப்படவில்லை. இந்திய இளைஞர்களின் எதிர்கால வாழ்க்கைக்காகப் போராடக்கூடிய, குரல் கொடுக்கக்கூடிய அமைப்பாகும். நாட்டு மக்களுக்கு எந்தப் பிரச்சனை ஏற்பட்டாலும், அதற்கு எதிராகக் களமிறங்கிப் போராடும் அமைப்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்.

சுரங்கத் திட்டத்தின் பாதிப்புகள்

இப்பகுதி மக்களின் நலன் மற்றும் வாழ்வாதாரம் கருதி, வாலிபர் சங்கத்தினர் இச்சுரங்கத் திட்டத்தின் பிரச்சனைகள் குறித்து நடைப்பயணத்தை மேற்கொண்டுள்ளனர். இத்திட்டம் வேதாந்தா என்ற கார்ப்பரேட் நிறுவனத்திடம் வழங்கப்பட்டுள்ளது. வேதாந்தா நிறுவனம் என்றால் நமக்கு நினைவுக்கு வருவது தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்காகப் போராடிய மக்களில் 14 பேர் சுட்டுக்கொல்லப்படுவதற்கு காரணமான நிறுவனம் தான். அதன் துணை நிறுவனமான ஹிந்துஸ்தான் சிங்க் நிறுவனத்திற்கு அரிட்டாபட்டியைச் சுற்றியுள்ள 11 கிராமங்களில் டங்ஸ்டன் கனிமம் எடுப்பதற்கான உரிமம் வழங்கப்பட்டுள்ளது. 5,000 ஏக்கர் நிலப்பரப்பில் சுரங்கம் அமைப்பதற்கு ஒன்றிய அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதில் 2,015 ஏக்கர் பரப்பளவு ஏற்கனவே அடையாளப்படுத்தி எல்லை வகுக்கப்பட்டுள்ளது. டங்ஸ்டன் சுரங்கம் இங்கு அமைந்தால், இப்பகுதி மக்கள் வாழ்வதற்குத் தகுதியற்ற பாலைவனமாக மாறிவிடும். இத்தகைய திட்டம் இந்த நாட்டிற்கு வேண்டுமா? இது யாருக்கான திட்டம் என்று பார்த்தால், கார்ப்பரேட் முதலாளிகளுக்கான திட்டம்! எனவே, இத்திட்டம் நிறைவேறக் கூடாது என்று ஒட்டுமொத்த தமிழகமும் இன்று திரண்டுள்ளது. ஒட்டுமொத்த தமிழக மக்களின் உணர்வுகளை எடுத்துச் செல்லும் பயணமாக இந்த நடைப்பயணம் அமைந்துள்ளது. காவல்துறை உதவ வேண்டும் இத்திட்டத்தை எதிர்த்து சட்டமன்றத்தில் முதலமைச்சர் அவர்கள் உணர்வுப்பூர்வமாகப் பேசி தீர்மானத்தை முன்மொழிந்துள்ள நிலையில், இந்த நடைப்பயணத்திற்கு முறையான அனுமதி பெறப்பட்டுள்ளது. நடைப்பயணத்தின் நோக்கம் மக்களுக்கு டங்ஸ்டன் சுரங்கம் குறித்து விளக்குவது மட்டுமே. காவல்துறை இந்த நடைப்பயணத்திற்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து தர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். கோரிக்கை வெல்லட்டும் அரிட்டாபட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராம பொதுமக்களிடம் நான் கேட்டுக்கொள்வது: இடதுசாரிகளும் வாலிபர் சங்கமும்தான் உண்மையான உணர்வோடு மக்கள் பிரச்சனைகளை கையிலெடுக்கக்கூடிய இயக்கம் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். ஒன்றிய அரசு டங்ஸ்டன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன், வாலிபர் சங்கத்தினர் நடத்தும் இந்த நடைப்பயணத்தின் நோக்கங்கள் வெற்றி பெற வேண்டும் என்று கூறி இந்த நடைப்பயணத்தைத் தொடங்கி வைக்கிறேன். இவ்வாறு வி.பி. நாகை மாலி எம்எல்ஏ பேசினார்.