states

img

‘விக்கிபீடியா’ தரவுகளையே ஆள்வைத்து திருத்திய அதானி..?

புதுதில்லி, பிப். 22 - அதானி குழுமம் குறித்த விக்கி பீடியா-வில் உள்ள தரவுகளில் மோசடி செய்யப்பட்டிருப்பதாகவும், அதானி குழுமமே 40-க்கும் மேற்பட்ட எடிட்டர்-களுக்கு பணம் கொடுத்து, மோசடியான தரவுகளை அரங்கேற்றியிருப்பதாகவும் புதிய குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  ‘விக்கி பீடியா’வால் நடத்தப்படும் ‘தி சைன்போஸ்ட்’ புலனாய்வு இதழ்தான் இந்த குற்றச்சாட்டை எழுப்பியுள்ளது. இதுகுறித்து சைன்-போஸ்ட் புலனாய்வு இதழ் வெளியிட்டிருக்கும் கட்டுரையில், “அதானி குழுமம் மற்றும் அவரது குடும்ப நிறுவனங்கள் குறித்து ஒன்பது விக்கிபீடியா பக்கங்கள் உருவாக்கப்பட்டுள்ளன” என்றும், “இந்த பக்கங்களில் உள்ள தரவுகளை, 40-க்கும் மேற்பட்ட விக்கிபீடியா எடிட்டர்களுக்கு பணம் கொடுத்து பலமுறை அதானி குழுமம் மாற்றியுள்ளது; பொய்யான தகவல்களை சேர்த்துள்ளது; இந்த விக்கிபீடியா எடிட்டர்களில் 25-க்கும் மேற்பட்டோரின் ஐ.டி. போலியானது அல்லது அதானி நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் செயல்படும் நபர்களைக் கொண்டே, தரவு மோசடிகளை செய்துள்ளது” என்று ‘தி சைன்போஸ்ட்’ தெரிவித்துள்ளது. மேலும், இந்த சாக்பப்பெட்ஸ் (sockpuppets) எனப்படும் பொய்யான தகவல்களைப் பரப்பும் வேலையை, கடந்த 10 வருடங்களாக அதானியும், அதானி குழும நிறுவனங்களும் செய்து வந்துள்ளன; இதற்காகவே தனியாக ஆட்களையும் (paid editor) பணியில் அமர்த்தியுள்ளன என்றும் ‘தி சைன்போஸ்ட்’ குறிப்பிட்டுள்ளது. “விக்கி பீடியாவின் தரக்கட்டுப்பாட்டு அமைப்புகளைத் தவிர்க்கும் அசாதாரண முறைகள் மூலம் எடிட்டிங் பற்றிய எச்சரிக்கைகள் அகற்றப்பட்டுக் கட்டுரைகள் உருவாக்கப்பட்டன” என்றும் கூறப்படுகிறது.

பணம் கொடுத்து, போலி ஐ.டி.க்கள் மூலம் தரவுகள் மாற்றப்பட்ட உண்மை தெரியவந்ததை அடுத்து “இந்தப் பக்கங்கள் விளம்பர நோக்கில் பதியப்பட்டவை” என்று குறிப்பிட்டு ‘விக்கிபீடியா’ நிர்வாகம் அந்தப் பக்கங்களை தற்போது முடக்கி இருப்பதாகவும் ‘சைன்-போஸ்ட்’ தெரிவித்துள்ளது. தனது குழும நிறுவனங்களின் சந்தை மதிப்பை உயர்த்திக் காட்டுவதற்கு அதானி குழுமம் பல்வேறு ஊழல் முறைகேடுகளை அரங்கேற்றி இருப்பதாகவும், பங்குச் சந்தை வர்த்தகத்தில் ரூ. 17 லட்சத்து 80 ஆயிரம் கோடி அளவிற்கு அதானி குழுமம் முறைகேடுகளை செய்து முதலீட்டாளர்களை ஏமாற்றி இருப்பதாகவும் அமெரிக்காவைச் சேர்ந்த ‘ஹிண்டன்பர்க் ரிசர்ச்’ கடந்த ஜனவரி 24 அன்று அறிக்கை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது. அதானி குழுமத்தின் இந்த மோசடிகளில், கவுதம் அதானியின் மூத்த சகோதரர் வினோத் அதானிக்கு இருக்கும் தொடர்பு, போலியான லெட்டர் பேடு நிறுவனங்களின் பெயர்களில் வெளிநாட்டு நிதி நிறுவனங்களில் கடன் பெற்று, அவற்றை அதானி குழும நிறுவனங்களுக்கு மடைமாற்றியது ஆகியவை குறித்து ‘போர்ப்ஸ்’ பத்திரிகை தனியாக ஒரு அறிக்கையை ஆதாரப்பூர்வமாக வெளியிட்டது.  இந்த அறிக்கைகள் ஏற்படுத்திய தாக்கத்தால், அதானி சாம்ராஜ்யமே தற்போது நிலைகுலைந்து நிற்கிறது. பங்குச்சந்தையில் தொடர் சரிவைச் சந்தித்து வருகிறது. இதுவரை 11 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கான சந்தை மதிப்பை அதானி குழுமம் இழந்துள்ளது. இந்தப் பின்னணியில் ‘விக்கிபீடியா’ தரவுகளை, எடிட்டர்களுக்குப் பணம் கொடுத்து, அதானி குழுமம் மோசடியாக திருத்திய குற்றச்சாட்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதானி குழுமம் எந்தளவிற்கு கேவலமான வேலைகளை எல்லாம் செய்திருக்கிறது என்ற உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது.