states

ஒரே நாளில் ரூ. 5 ஆயிரம் கோடியை இழந்த அமேசான் நிறுவனம்!

புதுதில்லி, ஜன.7- 18 ஆயிரம் பேரை பணிநீக்கம் செய்யப்போவதாக அமேசான் அறிவித்த பின்னணியில், அந்த நிறுவனத்தின் சொத்து மதிப்பு ஒரே நாளில் சுமார் ரூ. 5 ஆயிரம் கோடி இழப்பைச் சந்தித்துள்ளது. 2023-24 நிதியாண்டில் உலகப் பொருளாதாரம் நெருக்கடியைச் சந்திக்கும் அபாயம் நிலவுவதால், அதனை எதிர்கொள்வதற்கு இப்போதே தயாராகிறோம் என்ற பெயரில் பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்கள் பலவும் ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் இறங்கி விட்டன.  இதில், இணையதள சில்லரை வணிக சேவையில் ஈடுபட்டு வரும் அமேசான் நிறுவனமும் அண்மையில் இணைந்தது. உலகம் முழுவதும் நூற்றுக்கணக்கான கிளைகளைக் கொண்டுள்ள இந்த நிறுவனம், ஒட்டுமொத்தமாக 18 ஆயிரம் பேர்களை வீட்டுக்கு அனுப்ப உள்ளதாக அறிவித்துள்ளது. குறிப்பாக, இந்தியாவில் அமேசான் நிறுவனத்தில் 10 ஆயிரம் பேர் வரை பணியாற்றி வரும் நிலையில், அவர்களில் 1000 பேர் வரை பணியிலிருந்து நீக்கப்படுவார்கள் என்றும் செய்திகள் வெளியாகின. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஜனவரி 18-ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் பணிநீக்க அறிவிப்பை வெளியிட்ட பின்னணியில் அமேசான் நிறுவனத்துக்கு ஒரே நாளில் 5330 கோடி ரூபாய் (675 மில்லியன் டாலர்) இழப்பு ஏற்பட்டுள்ளது. உலக பணக்காரர்கள் வரிசையில், 6-ஆவது இடத்தில் இருந்த அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸின் சொத்து மதிப்பும் 106 பில்லியன் டாலர்களாகக் குறைந்துள்ளது. இதன்மூலம் கடந்த 2022ஆம் ஆண்டில் மட்டும் அமேசான் நிறுவனத்துக்கு 834 மில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டுள்ளது.