states

img

7 மாநிலங்களில் ராஜபுத்திரர்கள் போர்க்கொடி

வட இந்தியாவில் ‘பாஜகவை  தோற்கடிப்போம்’ முழக்கம் 

குஜராத் மாநிலத்தில் கடந்த வாரம் பாஜக மூத்த தலைவரும், ஒன்றிய அமைச்சருமான ராஜ்கோட் தொகுதியின் வேட்பாளரான பர்ஷோத்தம் ரூபாலா, ”ராஜபுத்திர சத்திரிய வம்ச மன்னர்கள் இஸ்லாமியர்களுடன்நெருக்கமாக அடிமை போல இருந்தனர்.  இஸ்லாமிய மன்னர்கள் கொடுத்ததை வைத்து ஆட்சி செய்தனர். தங்கள் வம்ச பெண்களை கூட இஸ்லாமியர்களுக்கு மணம் முடித்துக் கொடுத்தனர்” என சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தார். ரூபாலாவின் கருத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த ராஜபுத்திரர்கள், பாஜக தனது அரசியல் ஆதாயத்திற்காக ராஜபுத்திரர்களை அவமதித்துள்ளது எனக் கூறி, குஜராத்தில் பிரம்மாண்ட போராட்டம் நடத்தினர். மேலும் குஜராத்தில் (ராஜ்கோட்) போட்டியிடும் பர்ஷோத்தம் ரூபாலாவை மாற்ற வேண்டும் என பாஜகவிற்கு எதிராக போர்க்கொடி தூக்கினர். பாஜக மேலிடம் இந்த விவகாரத்தை கண்டு கொள்ளாத நிலையில், குஜராத் மாநிலம் முழுவதும் ராஜபுத்திரர்களின் போராட்டம் தீவிரமடைந்தது. போராட்டக்களத்தில் பெண்கள் பலர் தீக்குளிக்க முயன்ற சம்பவங்களும் அரங்கேறியதால், ராஜபுத்திரர்களின் போராட்டம் வடமாநிலங்கள் முழுவதும் பரவியுள்ளது. உத்தரப்பிரதேசத்தில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் பாஜகவிற்கு எதிரான ராஜபுத்திரர்களின் போராட்டம் வடமாநிலங்களில் வலுப்பெறும் சூழலில், ஞாயிறன்று உத்தரப்பிரதேசத்தின் சஹாரன்பூர் மாவட்டத்தில் ராஜபுத்திரர்கள் ‘மகா பஞ்சாயத்து’ நடைபெற்றது. இந்த கூட்டத்தில் குஜராத், ராஜஸ்தான், உத்தரகண்ட், உத்தரப்பிரதேசம், ஹரியானா, தில்லி, பஞ்சாப் ஆகிய 7 மாநில ராஜபுத்திர நிர்வாகிகள், முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர்.   இந்த கூட்டத்தில் பாஜகவிற்கு எதிராக செயல்பட வேண்டும் என்றும், நாடு முழுவதும் உள்ள ராஜபுத்திர சமூக மக்கள் யாரும் பாஜகவிற்கு வாக்களிக்கக் கூடாது என தீர்மானம் நிறைவேற்றினர். மேலும் பாஜக வேட்பாளர்களைத் தவிர்த்து மற்ற தகுதியான வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள் என ராஜபுத்திர தலைவர்கள் தனது சமூக மக்களுக்கு வேண்டுகோளும் விடுத்துள்ளனர்.   இது பாஜகவிற்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ராஜபுத்திரர்களின் 2-ஆம் கட்ட பாஜக எதிர்ப்பு கூட்டம் ஏப்ரல் 16 அன்று  உத்தரப்பிரதேசத்தின் மீரட் மாவட்டத்தில் உள்ள சர்தானாவில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் யாருக்கு வாக்களிப்பது என்பது தொடர்பாக அறிவிப்பு தீர்மானம் நிறைவேற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.