states

முதல்வர் தமது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் ஆணவப் படுகொலைகளை தடுக்க தனிச் சட்டம் அவசியமே!

சென்னை, ஜூன் 28 - விருதுநகர் மாவட்டம் கோவிலாங் குளம் கிராமத்தைச் சேர்ந்த அழகேந்திரன் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட சம்பவ மானது, சாதி ஆணவப் படுகொலைகளுக்கு எதிரான தனிச் சட்டத்தின் அவசியத்தையே உணர்த்துவதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னியரசு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தமது ‘எக்ஸ்’ சமூகவலைத்தளப் பக்கத்தில் வன்னியரசு குறிப்பிட்டிருப்பதாவது: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை போகும் வழியில் உள்ளது கோவிலாங்குளம் கிராமம். இக்கிராமத்தைச்சார்ந்த ருத்ரப்பிரியா வும் அழகேந்திரனும் நீண்ட ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்கின்றனர். இந்நிலையில், ருத்ரப்பிரியாவின் உறவினர் பிரபாகர் அழகேந்திரனை தொலைபேசியில் அழைத்து, “உங்களுக்கு நான் திருமணம் செய்து வைக்கிறேன். உன்னோடு கொஞ்சம் பேசணும்” என மதுரை மாவட்டம் கள்ளிக்குடி அருகே உள்ள வேம்பலூர் கண்மாய்க்கு வரவழைத்துள்ளார். அங்கு தன்னுடைய கூட்டாளிகளுடன் காத்திருந்த பிரபாகர், அழகேந்திரனை, “ஏண்டா சக்கிலியப்பயலே உனக்கு தேவேந்திரகுலத்து பொண்ணு வேண்டுமா” என கழுத்தை அறுத்து வெறியாட்டம் போட்டுள்ளது அக்கொலைக்கும்பல். கடந்த ஜூன் 24 அன்று இரவு நடந்த இந்த  படுகொலை மறுநாள் தான் அழகேந்திரன் குடும்பத்துக்கு தெரியவந்தது. இப்போது அழ கேந்திரன் உடல் மதுரை அரசு மருத்துவமனை யில் வைக்கப்பட்டுள்ளது. பிரபாகர் அவராகவே சரணடைந்த பின் வியாழனன்று (ஜூன் 27) இரவு மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த மூன்று பேரும் அருப்புக்கோட்டை பகுதியைச்சார்ந்த முத்தரையர் சமூகத்தினராவர். பிரபாகர் உள்ளிட்ட இந்த கும்பல், யாதவ சமூகத்தைச் சார்ந்த ஒரு பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்த வழக்கு, விருதுநகர் மகளிர் நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கிறது. வழக்கு முடிந்து தண்டனை வழங்கும் தருவாயில், இந்த கொடூரத்தை அரங்கேற்றியுள்ளது இக்கொலைக்கும்பல். ஆகவே, இக்கொலை கூலிப்படைக் கும்ப லால் அரங்கேறியுள்ளது அம்பலமாகியுள்ளது. எனவே, காவல்துறையானது குற்றவாளிகளை உடனடியாக தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும். சம்பந்தப்பட்ட கொலையாளிகளை கூலிக்கு ஈடுபடுத்திய ருத்ரப்பிரியாவின் தாய் - தந்தை இரு வரையும் இந்த வழக்கில் கைது செய்யவேண்டும். அதுவரை உடல் மருத்துவமனையிலேயே இருக்கும் என அறிவிக்கப்பட்டு, கடந்த 3 நாட்களாக மருத்துவமனை முன் நடக்கும் போராட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகளும் பங்கேற்று வருகின்றனர். இக்கொலை நடந்த மறுநாளில் தான்,  மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் ஆணவப் படு கொலைகளுக்கு தனிச்சட்டம் தேவையில்லை என சட்டப்பேரவையில் அறிவித்தார். அறிவிப்பு வந்த நாளே ஆணவப்படுகொலை நடந்தேறி யுள்ளது. எனவே, முதல்வர் அவர்கள் தமது முடிவை மாற்றி ஆணவப் படுகொலைகளை தடுக்க தனிச்சட்டம் இயற்ற வேண்டும்” . இவ்வாறு வன்னியரசு பதிவிட்டுள்ளார்.

;