உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி வெற்றி
உத்தரகண்ட் மாநிலத்துக்கு கடந்த பிப்ரவரி மாதம் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தோ்தலில், ஹதிமா தொகுதியில் போட்டியிட்ட புஷ்கா் சிங் தாமி தோல்வியைத் தழுவினார். பாஜக ஆட்சியைத் தக்க வைத்த நிலையில், அவரை மாநில முதல்வராக்க கட்சித் தலைமை முடிவு செய்தது. இதையடுத்து, தொடர்ந்து இரண்டாவது முறையாக அவர் பதவியேற்றார். அவ்வாறு பதவியேற்ற நிலையில், அடுத்த ஆறு மாதங்களுக்குள் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏ-வாக அவர் தேர்வாக வேண்டும். இந்தநிலையில், சட்டமன்றத் தேர்தலில் சம்பாவத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பாஜகவின் கைலாஷ் கெடோரி, தனது பதவியை ராஜிநாமா செய்தார். இதனால், அந்தத் தொகுதிக்கு மே 31-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் முதல்வர் புஷ்கர் சிங் தாமி வெற்றி பெற்றார்.
நிலக்கரி இறக்குமதி குறைந்தது
இந்தியாவில் நிலக்கரி உள்நாட்டு உற்பத்தி அதிகரித்துள்ள காரணத்தால், வெளிநாட்டு இறக்குமதி குறைந்துள்ளதாக ஒன்றிய நிலக்கரி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் 173 அனல்மின் நிலையங்களில் மின்சார உற்பத்திக்கு நிலக்கரிதான் ஆதாரமாக உள்ளது. இந்தியாவில் உள்ள நிலக்கரி சுரங்கங்களில் உற்பத்தி செய்யப்படும் நிலக்கரி தவிர, வெளிநாடுகளில் இருந்து நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. இதன்படி கடந்த 2019-20 ஆம் நிதியாண்டில் 24.8 கோடி டன் நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்ட நிலையில், 2020-21 ஆம் நிதியாண்டில் 21.5 கோடி டன் நிலக்கரி மட்டுமே இறக்குமதி செய்யப்பட்டது. இந்த நிலையில் 2021-22 ஆம் நிதியாண்டில், இந்தியாவின் நிலக்கரி இறக்குமதி 20.9 கோடி டன்னாக குறைந்துள்ளது. அதே சமயம் 2020-21 ஆம் நிதியாண்டில் 71.6 கோடி டன்னாக இருந்த அகில இந்திய அளவிலான நிலக்கரி உற்பத்தி, 2021-22 ஆம் நிதியாண்டில் 77.7 கோடி டன்னாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
நேஷனல் ஹெரால்டு: ராகுலுக்கு சம்மன்
நேஷனல் ஹெரால்டு வழக்கு விசாரணை தொடர்பாக நேரில் ஆஜராகும்படி ராகுல்காந்தி மற்றும் சோனியா காந்திக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. ஆனால், தான் வெளிநாட்டில் இருப்பதால் விசாரணைக்கு ஆஜராக கூடுதல் கால அவகாசம் வழங்கும்படி அமலாக்கத்துறையிடம் ராகுல்காந்தி கோரிக்கை விடுத்தார். இந்நிலையில், இவரின் கோரிக்கையை ஏற்று, விசாரணைக்கு ஜூன் 13-ஆம் தேதி நேரில் ஆஜராகும்படி ராகுல் காந்திக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
கேரளாவில் சிஏஏ அமலாகாது: பினராயி
குடியுரிமை திருத்தச் சட்டம் கேரளாவில் அமல்படுத்தப்படாது என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். ‘‘மதத்தின் அடிப்படையில் குடியுரிமையை தீர்மானிக்கும் அதிகாரம் இங்கு யாருக்கும் இல்லை. அண்மை காலமாக மதச் சார்பின்மையை அழிக்கும் முயற்சிகள் ஒன்றிய அரசால் எடுக்கப்பட்டு வருகிறது. குடியுரிமைச் சட்டம் குறித்த சரியான நிலைப்பாட்டை கேரள அரசு எடுத்திருக்கிறது. அதுவே தொடரும்’’ என்றும் பினராயி விஜயன் கூறியுள்ளார்.
பிரியங்காவுக்கும் கொரோனா
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு வியாழனன்று கொரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து, அக்கட்சியின் பொதுச் செயலாளரும் அரவது மகளுமான பிரியங்கா காந்தியும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றுக்கான விதி முறைகளை தான் பின்பற்றுவதாகவும் தன்னை வீட்டிலே தனிமைப்படுத்தி கொண்டதாகவும் பிரியங்கா கூறியுள்ளார்.
மக்களுக்கு உதவும் முயற்சியில் ரோபோக்கள்
பெங்களூர் கெம்பே கௌடா சர்வதேச விமான நிலையத்தில் பொதுமக்கள் மற்றும் பயணிகளுக்கு உதவும் வகையில் டெமி என்று அழைக்கப்படும் 10 ரோபோக்களை சோதனை அடிப்படையில் பயன்படுத்தவுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த ரோபோக்களை மக்களுக்கு உதவுவது, பயணிகளின் கேள்விகளுக்கு பதில் கூறுவது மட்டும் இல்லாமல் விமான நிலையத்தில் உள்ள பல்வேறு இடங்களை கண்காணிப்பதற்கும் பயன்படுத்தவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆர்.டி.ஐ. ஆர்வலர் மீது துப்பாக்கிச் சூடு
மத்தியப் பிரதேச மாநிலம் விதிஷாவில் ரஞ்சித் சோனி (36) என்பவர் பட்டப்பகலில் பொதுப்பணி துறை அலுவலகம் முன்பு அடையாளம் தெரியாத நபரால் தலையில் சுடப்பட்டு உயிரிழந்தார். பொதுப்பணித் துறையில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றும் இவர், தனது துறை சார்ந்த பணிகள் தொடர்பான தகவலை பெற தகவல் அறியும் உரிமை சட்டத்தில் மனு தாக்கல் செய்துள்ளார் என்று காவல் துறை தெரிவித்துள்ளது.
ஹிஜாப் : கல்லூரி மாணவிகள் இடை நீக்கம்
கர்நாடக மாநிலம் உப்பினங்காடி அரசுக் கல்லூரியில் ஹிஜாப் அணிந்ததற்காக 6 மாணவிகள் கல்லூரி நிர்வாகத்தினரால் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். வன்முறைகளை தவிர்ப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மதமாற்றம் : பாஜகவிற்கு உயர்நீதிமன்றம் குட்டு
‘‘கட்டாயப்படுத்தப்படாத பட்சத்தில் மதம் மாறுவதற்கு சட்டப்படி தடையில்லை. ஒருவர் விரும்பியபடி எந்தவொரு மதத்தையும் பின்பற்ற அரசியலமைப்புச் சட்டத்தில் உரிமை அளிக்கப்பட்டுள்ளது. கட்டாய மதமாற்றத்தால் பாதிக்கப்பட்டவர்கள் யாரேனும் வழக்குத் தொடர்ந்துள்ளனரா? கட்டாய மதமாற்றம் நடப்பதாக மனுவில் கூறப்பட்டிருப்பதற்கான தரவுகள் எங்கே? சமூக வலைதளங்களில் கூறப்பட்டுள்ளவற்றை ஆதாரமாக கொள்ள முடியாது’’ என பாஜகவைச் சேர்ந்த வழக்கறிஞர் அஸ்வினி குமார், மதம் மாற்றத்திற்கு எதிராக தாக்கல் செய்த வழக்கில் குட்டு வைத்துள்ளது தில்லி உயர்நீதிமன்றம்.
அமித்ஷா ஆலோசனை
காஷ்மீரில் அடுத்தடுத்து பொதுமக்கள் படுகொலைகள் நடந்துள்ள நிலையில், புதுதில்லி வடக்கு பிளாக்கில் உள்ள உள்துறை அமைச்சகத்தில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், ராணுவத் தளபதி மனோஜ் பாண்டே, ஒன்றிய உள்துறை செயலாளர் அஜய் குமார் பல்லா, எல்லை பாதுகாப்புப் படை தலைவர் பங்கஜ் சிங், ஜம்மு காஷ்மீர் காவல்துறை தலைவர் தில்பாக் சிங் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை
கொரோனா பரவலை கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கக் கோரி மாநிலங்களுக்கு ஒன்றிய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷன் தெரிவித்துள்ளார்.
200 பெண்கள் பாதிப்பு
ஆந்திர மாநிலம் அனகாபல்லே மாவட்டத்தில் இயங்கி வரும் கால்நடை மருந்து தயாரிப்பு நிறுவனத்தில் ஏற்பட்ட வாயுக் கசிவால் 200க்கும் மேற்பட்ட பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஒன்றிய அரசு மறுப்பு
மத சுதந்திரம் குறித்து அமெரிக்க நாடாளுமன்றத் தில் தாக்கல் செய்யப் பட்டுள்ள அறிக்கையில் இந்தியாவில் கொலை, தாக்குதல், மிரட்டல் என சிறுபான்மை சமூகத்தினர் மீது ஆண்டு முழுவதும் தாக்குதல்கள் தொடர்ந் துள்ளதாகக் குறிப்பிடப் பட்டுள்ளது. இந்த அறிக்கைக்கு ஒன்றிய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.
கடுமையான வறட்சியால் சோமாலியாவில் லட்சக்கணக் கான மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர் என்று ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான ரீதியான உதவிகளைச் செய்யும் அமைப்பு கூறியுள்ளது. “ஜனவரி மாதத்தில் இருந்து ஏப்ரல் மாதம் வரையில் 24 லட்சம் பேருக்கு எங்களால் முடிந்த அளவுக்கு உதவிகளைச் செய்தோம். ஆனால் தற்போது உதவிகளைச் செய்வதற்கான நிலையில் நாங்கள் இல்லை” என்று அந்த அமைப்பின் சோமாலிய ஒருங்கிணைப்பாளர் அப்டெல்மூலா தெரிவித்துள்ளார்.
இடதுசாரிக் கட்சிகளின் ஆதரவுடன் அமைக்கப்பட்டுள்ள ஸ்லோவேனியா அரசுக்கு அந்நாட்டின் நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் ராபர்ட் கோலோப் தலைமை யிலான அமைச்சரவைக்கு ஆதரவாக 53 வாக்குகளும், எதிராக 28 வாக்குகளும் விழுந்தன. நம்பிக்கை வாக்கு பெற்ற பின், “பொது சுகாதாரத் திட்டத்தை மேம்படுத்துவது, எரிபொருள் விலை சுமையைக் குறைப்பது உள்ளிட்ட வற்றிற்கு முக்கியத்துவம் தருவோம்” என்று பிரதமர் ராபர்ட் கோலோப் தெரிவித்தார்.
அமெரிக்காவில் சமையல் எரிவாயுவின் விலை கடுமையாக அதிகரித்துள்ளது. வரும் மாதங்களில் அது மேலும் உயரும் என்று எதிர்பார்க்கிறார்கள். கலிபோர்னியா, ஓரேகான், வாஷிங்டன், நெவேதா, அரிசோனா, அலாஸ்கா மற்றும் இல்லினாய்ஸ் ஆகிய ஏழு மாகாணங்கள் தேசிய சராசரியை விட அதிகமான விலைக்கு விற்றுக் கொண்டிருக் கின்றன. கலிபோர்னியாவில்தான் மிகவும் கடுமையான விலை உயர்வு ஏற்பட்டிருக்கிறது.