சென்னை, அக். 29 - விடுதலைப் போராட்ட வீரரும், பார்வர்ட் பிளாக் தலைவருமான பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் பிறந்த நாள், ஜெயந்தி விழாவாக தமிழ்நாடு அரசால் ஆண்டு தோறும் அக்டோபர் 30ஆம் தேதி அன்று கொண்டாடப்படுகிறது. இவ்விழாவில், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பொதுமக்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு இராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் அமைந்துள்ள தேவ ரின் நினைவிடத்தில் மரியாதை செலுத்துவர். அந்த வகையில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 117-வது ஜெயந்தி விழா, பசும்பொன்னில் அக்.30 அன்று தமிழ்நாடு அரசின் சார்பில் நடை பெறுகிறது. இதில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார். அதைத் தொடர்ந்து மதுரை, கோரிப்பாளையத்தில் உள்ள முத்து ராமலிங்கத் தேவர் சிலைக்கும், தெப்பக்குளத்தில் உள்ள மாமன்னர் மருது சகோதரர்கள் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். இந்நிகழ்ச்சிகளில், அமைச்சர் கள், மக்களவை, மாநிலங்களவை, சட்டமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டு, தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகின்றனர்.