states

தீக்கதிர் விரைவு செய்திகள்

தமிழக - கேரள  குடிமைப் பொருள்  வழங்கல்  அதிகாரிகள் கூட்டம்

தென்காசி, நவ.26- தமிழகத்திலிருந்து அண்டை மாநிலங் களுக்கு பொது விநியோகத் திட்டப் பொருள்கள் கடத்தப்படுவது தொடர்பாக தமிழ்நாடு- கேரள மாநில எல்லையில் அமைந்துள்ள தென்காசி மாவட்டத்தில் இரு மாநில அதிகாரிகள் ஒருங்கிணைப்புக் கூட்டம்  நடைபெற்றது. ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற கூட்டத்துக்கு தென்காசி மாவட்ட வருவாய் அலுவலர் இரா.ஜெய்னுலாப்தீன் தலைமை வகித்தார். தென்காசி மாவட்ட வழங்கல் அலுவலர் இரா. சுதா, திருநெல் வேலி உள்கோட்ட குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை உதவி ஆய்வாளர் ஜெயக்குமார், புளியரை காவல் நிலைய உதவி ஆய்வாளர் முத்துக்கிருஷ்ணன், தமிழ்நாடு ரயில்வே காவல் உதவி ஆய்வாளர் மாரி யப்பன், கேரள மாநிலம் புனலூர் வட்ட வழங்கல் அலுவலர் பைசல் ஆகியோர் பங்கேற்றனர். இரு மாநில அதிகாரிகளும் ஒருங்கி ணைந்து செயல்பட்டு பொது விநியோகத் திட்டப் பொருள்கள் கடத்தப்படுவதைத் தடுக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

மற்ற மாநிலங்களை போல் விலை உயர்வு கேரளாவில் இல்லை: கே.என்.பாலகோபால்

திருவனந்தபுரம், நவ.26- மற்ற மாநிலங்களைப் போல் கேரளாவில் விலை உயர்வு இல்லை என்றும், ஜிஎஸ்டி இழப்பை ஈடுசெய்யாதது சிரமத்தை ஏற்படுத்துகிறது என்றும் நிதி அமைச்சர் கே.என்.பாலகோபால் கூறினார்.  ஒன்றிய அரசு கேரளத்தின் கடன் வரம்பை குறைப்பது மற்றொரு பிரச்சனை என்றும் அவர் சுட்டிக்காட்டினார். அகில இந்திய வளர்ச்சி 8 சதவிகிதமாக உள்ளது. கேரளாவில் இது 12 சதவிகிதமாக உள்ளது.  ஜிஎஸ்டி பங்கீட்டில் மாற்றம் வேண்டும் என்றும், அது ஒன்றிய அரசுக்கு 40 சதவிகிதம், மாநிலங்களுக்கு 60 சதவிகிதம் என்ற அளவில் இருக்க வேண்டும் என்றும் அமைச்சர்  கூறினார். செஸ் மற்றும் கூடுதல் கட்டணத்தை தள்ளுபடி செய்து வந்தே பாரத் ரயிலை அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் அமைச்சர் எழுப்பினார். பாரம்பரிய தொழில் துறை, தோட்டத் துறை மற்றும் புலம்பெயர்தோருக்கான திட்டங்கள் அறிவிக்கப்பட வேண்டும் என்றும், ஊதிய திருத்தத்தை யுஜிசி இன்னும் அனுமதிக்கவில்லை என்றும் அமைச்சர் கூறினார்.

ஜி20 அமைப்புக்குத் தலைமை; அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு அழைப்பு 

டிசம்பர் 1-ஆம் தேதி முதல் ‘ஜி20’ நாடுகளின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்க உள்ளதை யொட்டி, ஒன்றிய அரசு அனைத்துக்கட்சிக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. டிசம்பர் 5-ஆம் தேதி குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறும் இந்த கூட்டத்திற்கு, நாடு முழுவதும் மொத்தம் 40 அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி, வெளியுற வுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உள்பட பல்வேறு தலைவர்கள் பங்கேற்கும் இந்த கூட்டத்தில், அடுத்த ஓராண்டுக்கு இந்தியாவில் நடத்தப்படும் ஜி20 அமைப்பின் மாநாடுகள் தொடர்பாக விவாதிக்கப்பட உள்ளது.

கோயில்களை புதுப்பிக்க ரூ.1000 கோடி: குஜராத் பாஜக வாக்குறுதி

குஜராத் மாநிலத் தேர்தல் அறிக்கையை பாஜக வெளியிட்டுள்ளது. அதில், கோவில்களை புதுப்பிக்கவும், மேம்படுத்தவும் ரூ.1,000 கோடியில் திட்டம் செயல்படுத்தப்படும். மாநிலத்தில்  பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும். குஜராத்தை பொருளாதாரம் 1 டிரில்லியன் டாலராக  மாற்றப்படும். குஜராத்தில் முதிய பெண்களுக்கு இலவச பேருந்து பயண திட்டம் அறிமுகம் செய்யப்  படும். பொருளாதாரத்தில் நலிவடைந்த குடும்பங்களை சேர்ந்த கல்லூரி மாணவிகளுக்கு இல வச மின்சார ஸ்கூட்டரும், 9 முதல் 12-ஆம் வகுப்பு வரை படிக்கும் அனைத்து மாணவிகளுக்கும் இலவச சைக்கிள்களும் வழங்கப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு இலவச வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன.

வாக்காளர் பட்டியலில் முறைகேடு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் சஸ்பெண்ட்

கர்நாடக மாநிலத்தில், காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவான வாக்காளர்களின் பெயர்களை நீக்கி யதாக எழுந்த புகாரில், பிபிஎம்பி (பெங்களூர் மாநகரப் பேரவை)-யின் சிறப்பு ஆணையர் எஸ். ரங்கப்பா மற்றும் நகர்புற மாவட்ட துணை ஆணையரான கே. ஸ்ரீனிவாஸ் ஆகிய 2 ஐஏஎஸ் அதிகாரிகளையும் தேர்தல் ஆணையம் இடைநீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த அதிகாரிகளுக்கு எதிராக துறை ரீதியிலான நடவடிக்கைக்கும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதேபோல், சிவாஜிநகர், சிக்பேட்டை, மகாதேவபுரா ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்காளர் பட்டியலில் 100 சதவிகிதம் சரிபார்க்கும் பணியை நடத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ள தேர்தல் ஆணையம், வாக்காளர் பட்டியலில் ஒவ்வொரு நிலையிலும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளை ஈடுபடுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

அரசியலமைப்பின் விழுமியங்களை உயர்த்திப் பிடிப்போம்: முதல்வர்

சென்னை,நவ.26- அரசியலமைப்பின் விழுமியங்களை உயர்த்திப் பிடித்து நாட்டை முன்னோக்கி எடுத்துச் செல்வோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அரசியலமைப்பு நாளையொட்டி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது  சமூக வலைதள பக்கங்களில் வெளி யிட்டுள்ள பதிவில், “சமத்துவம், சகோத ரத்துவம், மதச்சார்பின்மை உள்ளிட்ட உயரிய விழுமியங்களைக் கொண்ட நமது  அரசியலமைப்புச் சட்டத்தை உயர்த்திப் பிடித்து, அதனை வடித்துத் தந்த அண்ணல் அம்பேத்கர் உள்ளிட்ட அறிஞர்  பெருமக்கள் விரும்பியபடி நமது நாட்டை முன்னோக்கி எடுத்துச் செல்ல அரசிய லமைப்பு நாளில் உறுதிகொள்வோம்” இவ்வாறு அந்த பதிவில் கூறியுள்ளார்.

அமைச்சர் நேருவின் ட்விட்டர் பக்கத்தில் ஹேக்கர்கள் கைவரிசை

சென்னை,நவ.26- தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு ட்விட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளது. மேலும்  ஹேக் கர்களால் முடக்கப்பட்டு, நாசா பற்றிய பதிவுகள் பகிரப்பட்டது. இது தொடர்பாக தனது கருத்தை  தெரிவித்துள்ள அமைச்சர், “எனது  ட்விட்டர் பக்கம் தற்போது முடக்கப் பட்டுள்ளது. தொழில்நுட்ப குழு எனது  ட்விட்டர் பக்கத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. ட்விட்டர்  பக்கம் மீண்டும் மீட்டெடுக்கப்பட்டவுடன் அது குறித்து விரைவில் தெரியப்படுத்து கிறேன்”. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

நாட்டுப்படகை சேதப்படுத்திய  இலங்கை கடற்படை

ராமேசுவரம், நவ.26- ராமேசுவரத்தை அடுத்துள்ள தங்கச்சி மடம் மாந்தோப்பு பகுதியைச் சேர்ந்த  மீனவர்கள் அந்தோணி அடிமை என்பவ ருக்கு சொந்தமான நாட்டுப்படகில் மண்ட பம் கடலோர பகுதியில் மீன்பிடிக்க சென்ற னர். அந்த படகில் ஒரே குடும்பத்தை சேர்ந்த அந்தோணி அடிமை, லிவிங்ஸ்டன், திருமன், சபரி உள்ளிட்ட 4 மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். அவர்கள்  நள்ளிரவு 12 மணி அளவில் தனுஷ்கோடிக் கும் கச்சத்தீவுக்கும் இடையே இந்திய கடல் பகுதியில் நாட்டுப்படகில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.  அப்போது அந்த வழியாக ரோந்து படகில் வந்த இலங்கை கடற்படையினர், மீனவர்கள் எல்லைதாண்டி மீன் பிடித்த தாக கூறி இலங்கை ரோந்து படகு மூலம்  நாட்டுப்படகு மீது மோதி உள்ளனர். இதில்  நாட்டுப் படகின் முன்பகுதி இரண்டாகப் பிளந்தது.  மீனவர்கள் இலங்கை கடற்படையினர் தங்களை கைது செய்து விடுவார்கள் என்ற  அச்சத்தில் 4 மீனவர்களும் நடுக்கடலில் குதித்து தப்பி உள்ளனர். மேலும் இலங்கை  கடற்படையினர் இனி இந்த பகுதியில் மீன் பிடிக்க வரக்கூடாது என தெரிவித்து சென்றதாக பாதிக்கப்பட்ட மீனவர்கள் கூறினர்.  இதனை தொடர்ந்து உயிருக்கு போரா டிய மீனவர்கள் தாங்கள் அணிந்திருந்த கைலிகள், சட்டை, பனியன் உள்ளிட்டவை களை வைத்து படகின் உடைந்த பகுதியை அடைத்து தண்ணீரை வெளி யேற்ற முயற்சித்து உயிருக்கு போராடி வந்த நிலையில், இதுபற்றி அறிந்த சக  மீனவர்கள் ஒரு விசைப்படகில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆபத்தான நிலையில் இருந்த 4 மீனவர்களை மீட்டு கரைக்கு அழைத்து வந்தனர். இலங்கை கடற்படை மோதியதால் ரூ.2 லட்சம் மதிப்பிலான நாட்டு படகு  மற்றும் மீன் பிடி சாதனங்கள் சேதமடைந்து  இழப்பு ஏற்பட்டதாகவும், இந்திய கடல்  பகுதியில் இந்திய கடலோர காவல்  படையினர் போதிய பாதுகாப்பு அளிக்க வில்லை என்றும் குற்றம்சாட்டினர்.

மருத்துவக் கவுன்சில் தேர்தல்:  அரசு பதில் அளிக்க உத்தரவு

சென்னை,நவ.26- தமிழ்நாடு மருத்துவக் கவுன்சில் தேர்தல் நேர்மையாக நடைபெற, ஒருமுறை பயன் படுத்தும் பாஸ்வேர்ட்(கடவு சொல்)  மூலம் மின்னணு வாக்குப் பதிவு முறையை அமல்படுத்தக் கோரி தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு, தமிழ்நாடு மருத்துவ  கவுன்சில் மற்றும் தேசியமருத்துவ ஆணையம் பதில்அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு மருத்துவ கவுன் சிலுக்கு டிச.19-இல் தேர்தல் நடை பெறவுள்ளது. இந்த தேர்தலை வழக்கம்போல நடத்தாமல், ஒரு முறை பயன்படுத்தும் பாஸ்வேர்டு  மூலம் மின்னணு முறையில் நடத்தக் கோரி காஞ்சிபுரத்தைச் சேர்ந்த மருத்துவர் கார்த்திகேயன், உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், ‘தொழில்நுட்ப வளர்ச் சிக்குப் பிறகும் தபால் வாக்கு முறையை பின்பற்றுவது என்பது முறைகேடுகளுக்கே வழிவகுத் துள்ளது. எனவே, ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்படும் பாஸ்வேர்டு மூலமாக மின்னணு வாக்குப்பதிவு முறையை அமல் படுத்த உத்தரவிட வேண்டும். அப்போதுதான் தேர்தல் நியாய மாகவும், நேர்மையாகவும் நடை பெறும்’ என கோரியிருந்தார். இந்த மனு நீதிபதி ஆர்.சுரேஷ் குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது,தமிழக அரசு, தமிழ்நாடு மருத்துவக் கவுன்சில் மற்றும் தேசிய மருத்துவ ஆணை யம் பதிலளிக்க நீதிபதி உத்தர விட்டுள்ளார். மேலும், இந்த வழக்கை இதே கோரிக்கைக்காக தொடரப்பட்டு நிலுவையில் உள்ள மற்ற வழக்கு களுடன் சேர்த்து, விசாரணையை டிச.5 ஆம் தேதிக்கு தள்ளி வைத் துள்ளார்.

ரஷ்யாவின் வரலாற்றில்  சோயாபீன்ஸ் அறுவடை உச்சம்

ரஷ்ய வேளாண்மை அமைச்சகம் கடந்த 24ஆம் நாள் வெளியிட்ட தகவலின்படி, இவ்வாண்டு ரஷ்யாவின் சோயாபீன்ஸ் உற்பத்தியளவு 60லட்சம் டன்னை எட்டி வரலாற்றில் காணாத உச்சம் அடைந்தது. கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட, 22.6விழுக்காடு அதிகமாகும். கடந்த 10 ஆண்டுகளில் அந்நாட்டின் சோயாபீன்ஸ் சாகுபடி நிலப்பரப்பு 15லட்சம் ஹெக்டர்களிலிருந்து 35லட்சம் ஹெக்டர்களாக அதிகரித்துள்ளது. இதனால் ஏற்றுமதிச் சந்தையில் பரந்த வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது. மேலும், உலகளவில் சோயாபீன் மற்றும் அதன் தயாரிப்புப் பொருட்கள் மீதான தேவை தொடர்ந்து அதிகரித்துள்ளது அதற்கான காரணிகளாகும். இவ்வாண்டு முதல் ரஷ்யாவிலிருந்த சோயாபீன் ஏற்றுமதியளவு கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட, 44விழுக்காடு அதிகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

நேபாளத் தேர்தல் தொகுதி முடிவுகள் இன்று தெரியலாம்

காத்மண்டு, நவ.26- நேபாள நாடாளுமன்றத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கையில் நேரடித் தொகுதிகளின் முடிவுகள் ஞாயிறன்று(நவ.27) தெரிய வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது. மொத்தமுள்ள 275 தொகுதிகளில் 165 தொகுதிகளில் நேரடியாக பிரதிநிதிகளை மக்கள் தேர்வு செய்வார்கள். எஞ்சியுள்ள 110 தொகுதிகள் விகிதாச்சார அடிப்படையில் ஒதுக்கப்படும். இதில் நவம்பர் 26 ஆம் தேதி மாலை வரையில் 148 நேரடித் தொகுதிகளுக்கான முடிவுகள் வந்துவிட்டன. இதில் ஆளும் நேபாள காங்கிரஸ் 51 தொகுதிகளிலும், நேபாள கம்யூனிஸ்ட் கட்சி(ஒன்றுபட்ட மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) 38 தொகுதிகளிலும், மாவோயிஸ்டு மையம் 16 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. எஞ்சியுள்ள 17 தொகுதிகளுக்கான முடிவுகள் நவ.27 அன்று வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விகிதாச்சார முறைப்படி கட்சிப் பட்டியலில் இருந்து தேர்வு செய்வதற்கான வாக்கு எண்ணிக்கை ஆமை வேகத்தில் நடக்கிறது. மொத்தம்  1 கோடியே 79 லட்சத்து 88 ஆயிரத்து 570 வாக்குகள் பதிவானதில் 41 விழுக்காடு வாக்குகள்தான் எண்ணப்பட்டுள்ளன. இதில் நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (ஒன்றுபட்ட மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) 20 லட்சத்து 38 ஆயிரத்து 957 வாக்குகளும், நேபாள காங்கிரஸ் 19 லட்சத்து 69 ஆயிரத்து 267 வாக்குகளும் பெற்றுள்ளன. மூன்றாவது இடத்தில் மாவோயிஸ்ட் மையமும், நான்காவது இடத்தில் ராஷ்டிரிய சுதந்திரக் கட்சியும் உள்ளன. விகிதாச்சார முறைப்படி நாடாளுமன்றத்தில் இடங்களைப் பெற குறைந்தபட்ச 3 விழுக்காடு வாக்குகளைப் பெற வேண்டும்.


 

 

 

 

;