புதுதில்லி, பிப். 16 - பிபிசி செய்தி நிறுவனத்தின், தில்லி மற்றும் மும்பை அலுவலகங்களில், மோடி அரசின் வருமான வரித்துறை மூன்றாவது நாளாக சோதனையில் ஈடுபட்டது. பிபிசி நிறுவனம் மீதான இந்தத் தாக்குதலுக்கு கடும் கண்டனங்கள் குவிந்துள்ளன. பத்திரிகை சுதந்திரத்தை மோடி அரசு பறிக்க முயல்வதாகவும், ஜனநாயகத்தின் நான்காவது தூண் எனப்படும் பத்திரிகையின் மீதான இந்த தாக்குதல் மக்களின் குரலை ஒடுக்குவதற்கு ஒப்பாகும் என்றும் ‘இந்திய பத்திரிகை ஆசிரியர்கள் சங்கம்’, சர்வதேச மனித உரிமை அமைப்பான ‘ஆம்னெஸ்டி’, மும்பை செய்தியாளர் சங்கம், காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரிக் கட்சிகள், திமுக, ராஷ்ட்ரிய ஜனதாதளம், சமாஜ்வாதி, திரிணாமுல் காங்கிரஸ், பகுஜன் சமாஜ் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் கண்டித்தன. எனினும், பிப்ரவரி 14 அன்று “இது வருமான சோதனை அல்ல, கணக்கு ஆய்வு மட்டுமே” என்று கூறி பிபிசி அலுவலகங்களுக்குள் புகுந்த மோடி அரசின் வருமான வரித்துறை வியாழனன்று 3-ஆவது நாளாக சோதனையை தொடர்ந்துள்ளது.
ஊடகச் சுதந்திரத்திற்கு எங்களின் ஆதரவு
இந்நிலையில், பிபிசி மீதான வருமான வரித்துறை சோதனைக்கு, அமெரிக்காவும் தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளது. “இந்தியாவில் பிபிசி அலுவலகங்களில் நடந்து வரும் சோதனை குறித்து அறிந்தோம். உலகம் முழுவதும் நாங்கள் ஊடக சுதந்திரத்தை ஆதரிக்கிறோம். கருத்துச் சுதந்திரம், மத சுதந்திரம், மனித உரிமைகள் ஆகியவை உலகம் முழுவதும் ஜனநாயகத்தை வலுப்படுத்தும் என நம்புகிறோம். இந்த உலகளாவிய உரிமைகள்தான் ஜனநாயகத்தின் அடித்தளம்” என்று அமெரிக்க ஜனாதிபதியின் அதிகாரப்பூர்வ இல்ல மான ‘வெள்ளை மாளிகை’யின் செய்தித் தொடர்பாளர் நெட் பிரைஸ் கூறியுள்ளார். பிபிசி அலுவலகத்தில் நடந்து வரும் சோதனை ஜனநாயகத்துக்கு எதிரானது என நினைக்கிறீர்களா? என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “அதைப் பற்றி என்னால் கூற முடியாது. சோதனை நடப்பது குறித்த தகவலை மட்டுமே நாங்கள் அறிவோம். ஆனால், நான் தீர்ப்பு அளிக்கும் அதிகாரத்தில் இல்லை” என்றும் நெட் பிரைஸ் குறிப்பிட்டுள்ளார்.