“ஊதியமும் உயர வேண்டும்” அறிஞர்கள் கருத்து
பார்சிலோனா, மார்ச் 8- யூரோ மண்டலத்தில் விலைகள் கடுமையாக அதிகரித்து வருவதால் அதற்கு ஈடாக ஊதியமும் உயர வேண்டும் என்று ஐரோப்பிய பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். ஜே.பி.மார்கன் ஆய்வு நிறுவனத்தின் வல்லுநர்கள், கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஊதியம் உயரும் என்று கணித்திருக்கிறார்கள். 2023 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் ஊதிய உயர்வு 4.5 விழுக்காடு அளவுக்கு இருக்கும் என்பது அவர்களின் கருத்தாகும். ஆனால், பெரும்பாலான நாடுகளில் விலை உயர்வுக்கு ஏற்றவாறு ஊதியம் கோரிப் போராட்டங்கள் நடந்து வந்தாலும் நிர்வாகங்களின் தரப்பில் பெரும் ஒத்துழைப்பு இல்லை. 1993 ஆம் ஆண்டில் இத்தகைய ஊதிய உயர்வு தரப்பட்டதாக ஜே.பி.மோர்கன் ஆய்வு நிறுவனம் கூறியுள்ளது. இது குறித்துக் கருத்து தெரிவித்துள்ள சில வல்லுநர்கள், “அந்தக் காலகட்டத்தில் தற்போதுள்ளது போன்ற கடுமையான நெருக்கடியை மக்கள் சந்திக்கவில்லை. அதோடு யூரோ என்ற பொது நாணயத்தைக் கொண்டு வந்த பிறகு, இத்தகைய நெருக்கடியை முதன்முறையாக யூரோ மண்டலம் சந்திக்கிறது” என்று தெரிவிக்கிறார்கள். நிலைமை குறித்துக் கருத்து தெரிவித்த பார்சிலோனா பல்கலைக்கழகப் பொருளாதார பேராசிரியர் ரால் ராமோஸ், “யூரோவை ஏற்றுக் கொண்டபிறகு, நாம் பார்க்காத அளவுக்கு அழுத்தங்கள் தரப்படுகின்றன. அதனால் கடந்த ஆண்டில் தங்கள் வாங்கும் சக்தியை மக்கள் இழந்துள்ளனர். அதிலிருந்து இன்னும் மீளவில்லை. விலைகள் அதிகரித்துக் கொண்டிருக்கும் வரையில், அதற்கேற்ப ஊதியமும் அதிகரிக்க வேண்டும்” என்று வலியுறுத்தியிருக்கிறார்.
நாங்கள் லஞ்சம் வாங்குவதை எப்படி தடுக்கலாம்..?
லோக் ஆயுக்தா போலீசாரையே இடமாற்றியது கர்நாடக பாஜக அரசு!
பாஜக எம்எல்ஏ மதல் விருபாக்சப்பாவின் மகன் பிரசாந்த் மதல் ரூ. 40 லஞ்சம் வாங்கியபோது, அவரைக் கையும் களவுமாக கைது செய்தவர்கள், லோக் ஆயுக்தா துணை போலீஸ் சூப்பிரண்டு பிரமோத் குமார், இன்ஸ்பெக்டர் குமாரசாமி ஆகியோர் தலைமையிலான போலீசார் ஆவார்கள். மேலும், இந்த குழுவினரே பிரசாந்த் மதலின் வீடு, அலுவலகத்தில் சோதனை நடத்தி ரூ. 7.72 கோடி லஞ்சப் பணத்தையும் பறிமுதல் செய்தனர். இந்நிலையில் லோக் ஆயுக்தா துணை போலீஸ் சூப்பிரண்டு பிரமோத் குமார், இன்ஸ்பெக்டர் குமாரசாமி ஆகிய 2 பேரையும் கர்நாடக பாஜக அரசு திடீரென பணி இட மாற்றம் செய்துள்ளது. அவர்களுக்கு பதிலாக புதிய துணை போலீஸ் சூப்பிரண்டாக அந்தோணி ஜான், இன்ஸ்பெக்டராக பாலாஜி பாபு ஆகியோரையும் நியமித்துள்ளது. பாஜக எம்எல்ஏ லஞ்சம் பெற்றதைக் கையும், களவுமாக பிடித்து, தங்களின் கடமையை ஆற்றிய லோக் ஆயுக்தா உயர் போலீஸ் அதிகாரிகளை, அம்மாநில பாஜக அரசே இடமாற்றம் செய்திருப்பது, கர்நாடகத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது, ஊழல் பாஜக எம்எல்ஏ-வை காப்பாற்றும் முயற்சி; திட்டமிட்ட பழிவாங்கல் என்று கண்டனங்கள் எழுந்து வருகின்றன.
போராட்டம் அறிவித்த கவிதாவுக்கு சம்மன்
தெலுங்கானா முதல்வர் கே. சந்திரசேகர ராவின் மகளும், அம்மாநில எம்எல்சி-யுமான கவிதா, ஒன்றிய பாஜக அரசை கடுமையாக விமர்சித்து வந்த நிலையில், தில்லி மதுபான ஊழல் வழக்கில், அவர்மீது குற்றம் சாட்டிய சிபிஐ, கடந்த 2022 டிசம்பர் 12 அன்று அவரிடம் நேரில் விசாரணை நடத்தியது. கவிதாவின் முன்னாள் ஆடிட்டர் புச்சிபாபுவை கைதும் செய்தனர். இந்நிலையில், மதுபான ஊழல் வழக்கில், மார்ச் 9 அன்று விசாரணைக்கு ஆஜராகுமாறு அம லாக்கத்துறையும் சம்மன் அனுப்பியுள்ளது. மகளிர் இடஒதுக்கீடு விவகாரத்தில் ஒன்றிய அரசுக்கு எதிராக மார்ச் 10 அன்று தில்லியில் போராட்டம் நடைபெறும் என்று கவிதா அறிவித்திருந்தார். இந்த பின்னணியிலேயே அமலாக்கத்துறை அவருக்கு சம்மன் அனுப்பியுள்ளது.
மும்பை மின்விநியோகத்திற்கு அதானியால் ஆபத்து?
“அதானி குழுமத்தின் ‘அதானி எலக்ட்ரிசிட்டி’ என்ற மும்பை நிறுவனம், கடந்த 2020-இல் சீன நிறுவனங்கள் உட்பட ஆசிய முதலீட்டாளர்களிடமிருந்து ரூ. 7,200 கோடி வெளிநாட்டு கடனை திரட்டியது. இதற்கு, மகாராஷ்டிரா மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தால் வழங்கப்பட்ட மின் விநியோக உரிமை உள்ளிட்ட முக்கிய பங்கு பத்திரங்களை அதானி குழுமம் அடமானமாக வைத்துள்ளது. மும்பையில் மூன்றில் 2 வீடுகளுக்கு மின்சாரம் வழங்கும் அதானி நிறுவனம், கடனை செலுத்தத் தவறினால் மும்பையின் நிலை என்னவாகும்?” என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கேள்வி எழுப்பியுள்ளார். “இந்திய மின் நுகர்வோரை பலி கொடுத்து அதானி குழுமம் பாஜகவின் தேர்தல் வெற்றிக்கு வழிவகுக்கிறது” என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
‘என் தந்தைக்கு ஏதாவது நடந்தால் விடமாட்டேன்’
உடல்நலம் சரியில்லாத, பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத்தை, மோடி அரசின் சிபிஐ அதிகாரிகள் 5 மணிநேரம் வரை விசாரணைக்கு உள்ளாக்கிய நிலையில், லாலு பிரசாத்தின் இரண்டாவது மகள் ரோகிணி ஆச்சார்யா டுவிட்டரில் கருத்து ஒன்றைப் பதி விட்டுள்ளார். அதில், “எனது அப்பா துன்புறுத்தப்படும் விதம் சரியில்லை. அப்பாவைத் தொடர்ந்து துன்புறுத்துகிறார்கள். அவருக்கு ஏதாவது நடந்தால் நான் யாரையும் விட மாட்டேன். இதெல்லாம் என் நினைவில் இருக்கும். காலம் மிகவும் சக்தி வாய்ந்தது. 74 வயது தலைவரான எனது அப்பா வைத் தொடர்ந்து தொந்தரவு செய்தால் தில்லியின் அதிகாரத்தையும் அசைப்பேன்” என்று குறிப் பிட்டுள்ளார். லாலுவின் 2-ஆவது மகளான ரோகிணிதான், அண்மையில் லாலு பிரசாத்திற்கு, தனது சிறுநீரகங்களில் ஒன்றை அளித்து உயிரைக் காப்பாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
மாணிக் சாஹா 2-வது முறையாக முதல்வராக பதவியேற்பு!
அண்மையில் நடைபெற்ற மேகாலயா, நாகாலாந்து, திரிபுரா ஆகிய 3 மாநிலத் தேர்தலி லும் பாஜக கூட்டணியே வெற்றிபெற்றது. இதையடுத்து, பாஜக கூட்டணியில் இருக்கும் கான்ராட் சங்மா (தேசிய மக்கள் கட்சி) மேகாலயா முதல்வராகவும், நெய்பியு ரியோ (தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி) நாகாலாந்து முதல்வராகவும் செவ்வாயன்று பதவியேற்றுக் கொண்ட னர். இந்நிலையில், பாஜக-வைச் சேர்ந்த மாணிக் சாஹா, புதனன்று இரண்டாவது முறையாக திரிபுரா முதல்வராக பதவியேற்றுக் கொண்டார். இந்த மூன்று பதவியேற்பு நிகழ்ச்சிகளிலும் பிர தமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கர்நாடகத் தேர்தலில் இந்துத்துவா தந்திரம் எடுபடாது!
“வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவின் இந்துத்துவா தந்திரம் எடுபடாது. ஏனெனில் பாஜகவின் வேலைகள் பற்றி மக்கள் நன்றாகப் புரிந்து கொண்டுள்ளனர். இதைத் தெரிந்து கொண்ட பாஜக ஊழல்கள் மூலம் சம்பாதித்த கோடிக்கணக்கான ரூபாய் பணத்தை செலவ ழித்து வெற்றிபெற முயற்சி செய்கிறது. லஞ்ச விவகாரத்தில் மதல் விருபாக்சப்பா எம்எல்ஏ-வைக் காப்பாற்ற ஆளும் பாஜக அரசு முயற்சி செய்கிறது. அவரை போலீசார் இதுவரை கைது செய்ய வில்லை.ஊழல் பாஜக அரசு அகற்றப்பட வேண்டும்” என்று கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவகுமார் குறிப்பிட்டுள்ளார்.
பாஜக கொள்ளையர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும்!
ரூ. 7.72 கோடி ஊழல் புகாரில் சிக்கிய பாஜக எம்எல்ஏ மதல் விருபாக்சப்பாவுக்கு, பாஜக வினர் மேளதாளம் முழங்க, பட்டாசு வெடித்தும், மலர்களைத் தூவியும் வரவேற்பு அளித்த தற்கு திரைக்கலைஞர் பிரகாஷ் ராஜ் கண்டனம் தெரிவித்துள்ளார். “இந்த கொள்ளையர்களுக்கு மக்களால் மட்டுமே பாடம் புகட்ட முடியும். பலாத்காரம் செய்பவர்கள், கொலை செய்தவர்கள், கொள்ளையடித்தவர்களை வரவேற்பது இந்த மதவெறியர்களுக்கு வழக்கமாகி விட்டது. அன்பான மக்களே, இன்னும் எத்தனைக் காலம்தான் நாம் இதைப் பொறுத்துக் கொள்வோம். இதனை எதிர்த்து எப்போது குரல் எழுப்பி கண்டிப்போம்’’ என்று டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
இனிமேல் ஊழல் பற்றி பிரதமர் மோடி பேசக்கூடாது!
மணீஷ் சிசோடியா இல்லத்தில் நடத்தப்பட்ட சோதனையில் எதுவும் கிடைக்கவில்லை என்றா லும் சிபிஐ, அமலாக்கத்துறை என அனைத்து அமைப்புகளையும் ஏவி, மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டார். ஆனால் உங்கள் (பாஜக) கட்சி எம்எல்ஏ-விடம் (மதல் விருபாக்சப்பாவிடம்) இருந்து இவ்வளவு தொகை (ரூ. 7.72 கோடி) கண்டறியப்பட்டுள்ளது. அவர் ஏன் இன்னும் கைது செய்யப்படவில்லை? இனி ஊழலை எதிர்த்து போராடுவது பற்றி நீங்கள் (பிரதமர் மோடி) ஒருபோதும் பேச வேண்டாம். ஏனெனில் அந்த தவற்றை செய்பவர்களே உங்களிடம் இருந்துதான் வருகிறார்கள்” என்று தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
நடிகை ரம்யாவை ‘கனவுக்கன்னி’ என்ற பாஜக எம்.பி.
அண்மையில் பிறந்த நாள் விழா ஒன்றில், நடிகையும் காங்கிரஸ் முன்னாள் எம்.பி.யுமான ரம்யாவுடன் பாஜக எம்.பி. பிரதாப் சிம்ஹா புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார். பின்னர் இந்த புகைப்படத்தை டுவிட்டரிலும் வெளியிட்ட அவர், ‘என் கனவுக்கன்னியுடன் எடுக்கப்பட்ட புகைப்படம்’ என்று கருத்தையும் பதிவிட்டுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், இவ்வாறு ஒரு நடிகையை ‘கனவுக்கன்னி’ எனக் குறிப்பிட்டது தற்போது கண்டனங்களுக்கு உள்ளாகி யுள்ளது. எனினும், “அரசியல் வேறு, கலை வேறு, இரண்டையும் சேர்த்து பார்க்காதீர்கள்” என்று பிரதாப் சிம்ஹா, தனது செயலை நியாயப்படுத்தியுள்ளார்.
பாஜகவில் மோதல்: பாதியில் முடிந்த யாத்திரை
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி பாஜக சார்பில் ‘விஜய சங்கல்ப’ யாத்திரை தொடங்கி நடத்தப்பட்டு வருகிறது. இந்த யாத்திரையை பெங்களூரு அருகே தேவனஹள்ளியில் அமித்ஷா கடந்த மார்ச் 3 அன்று தொடங்கி வைத்தார். மொத்தம் 4 குழுக்கள் ‘விஜய சங்கல்ப யாத்தி ரை’யை மேற்கொண்டு வருகின்றன. அமைச்சர்கள் ஆர். அசோக், சோமண்ணா ஆகியோர் இடம்பெற்ற குழுவும் அதிலொன்றாகும். இதனிடையே, யாத்திரையை எதுவரை நடத்துவது? என்பது தொடர்பாக எழுந்த கருத்து வேறுபாட்டால், ஆர். அசோக், சோமண்ணா ஆகிய 2 அமைச்சர்களும் யாத்திரையை விட்டு கிளம்பிச் சென்றனர். இதனால், திங்களன்று ‘விஜய சங்கல்ப’ யாத்திரை பாதியிலேயே முடித்துக் கொள்ளப்பட்டுள்ளது.
‘ஸ்விக்கி’ நிறுவனத்திற்கு எதிராக கலகத்தை துவங்கிய இந்துத்துவா கூட்டம்
புதுதில்லி, மார்ச் 8 - “முட்டைகளைச் சாப்பிடுங்கள், அடுத்தவரின் தலையில் அடித்து உடைத்து வீணடிக்காதீர்கள்” என்று ஸ்விக்கி (Swiggy) நிறுவனம் வெளியிட்ட விளம்பரம், இந்துக்களின் மனத்தைப் புண்படுத்தி விட்டதாகக் கூறி, மதவெறியர்கள் கூச்சல் எழுப்பியுள்ளனர். இந்தியாவின் முன்னணி உணவு விநியோக நிறுவனங்களில் ‘ஸ்விக்கி’யும் ஒன்றாகும். அதிகமான பயனர்களை கொண்ட இந்நிறுவ னம், அண்மையில் தனது டுவிட்டர் பக்கத்தில் விளம்பரம் ஒன்றை வெளி யிட்டிருந்தது. அதில், “முட்டையில் ஆம்லேட் சமைக்கலாம்.. ஆப்பாயில் போடலாம்.. மொத்தத்தில் முட்டைகளை உண்பதற்காகப் பயன்படுத்த வேண்டும்.. ஒருவரின் தலையில் அடித்து நொறுக்கி வீணாக்கக் கூடாது” என்று கூறப்பட்டிருந்தது. முட்டைகளின் படமும் விளம்பரத்தில் இடம்பெற்றி ருந்தது. மேலும், ஹோலியையொட்டி, “ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட்டில் ஹோலி அத்தியாவசிய பொருட்களைப் பெறுங்கள்” என்றும் விளம்பரப்படுத்தப்பட்டு இருந்தது. இந்த விளம்பரத்தைத்தான் இந்துத்துவா கூட்டம் சர்ச்சை ஆக்கி யுள்ளது. ஸ்விக்கி இந்துக்களுக்கு எதிரான நிறுவனம் என்றும், இந்துக்க ளுக்கு எதிரான மனநிலையை (Hinduphobia) ஸ்விக்கி கொண்டிருப்ப தாகவும் பிரச்சாரம் செய்ய ஆரம்பித்துள்ளனர். “ஸ்விக்கி நிறுவனத்தின் விளம்பரத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. அது, ஹோலி கொண்டாடும் மில்லியன் கணக்கான மக்களின் உணர்வுகளை புண்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. ஸ்விக்கி இந்த விளம்பரத்தை அகற்றி, இந்துக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்” என்றும் கூறியுள்ளனர். மறுபுறத்தில், ஸ்விக்கி விளம்பரத்தில் என்ன புண்படுத்துதல் இருக்கி றது..? என்று ஸ்விக்கி-க்கு ஆதரவாகவும் சமூகவலைதளங்களில் பலர் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். “ஹோலிக்காக ஒருவரின் தலை யில் முட்டைகளை உடைக்க வேண்டாம் என்று ஸ்விக்கி மக்களைக் கேட்டுக் கொள்வது போல் தெரிகிறது. இது நல்லது தானே, இதில் என்ன தவறு இருக்கிறது? ஒருவரின் தலையில் முட்டையை உடைப்பது ஹோலி பண்டி கையின் அங்கமா என்ன?” என்று பலர் கேள்விகளை எழுப்பியுள்ளனர். “இது ஸ்விக்கியின் அழகான விளம்பரம். முட்டை என்பது ஒருவரின் தலை யில் வீசப்படுவதை விட, சாப்பிட வேண்டிய ஒரு பொருளாகும். ஹோலி விளையாட வேண்டாம் என்று அவர்கள் அந்த விளம்பரத்தில் கூற வில்லை, வண்ணங்களுடன் விளையாடுங்கள், உணவுப் பொருட்களை வீணடிக்காதீர்கள் என்றே கூறுகிறார்கள். எனவே, இது வரவேற்க வேண்டிய விளம்பரம்தான்” எனவும் ஆதரவுக் குரல்கள் எழுந்துள்ளன.
கோடையில் 18,500 மெகாவாட் மின்சாரம் தேவை
சென்னை,மார்ச் 8- தமிழ்நாட்டில் வரும் கோடை காலத்தில் பொதுமக்களின் மின்சார தேவையை பூர்த்தி செய்வதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, சென்னை அண்ணாசாலையிலுள்ள மின்சார வாரிய தலைமை அலுவல கத்தில் ஆய்வு கூட்டம் நடந்தது. துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமை தாங்கினார். கடந்த 4 ஆம் தேதி அதிகபட்ச மின்சார நுகர்வு 17,584 மெகாவாட் டாக இருந்தது. இந்த அளவு கடந்த ஆண்டு ஏப்ரல் 29 ஆம் தேதி அன்று பதிவான 17,563 மெகாவாட்டை விட 21 மெகாவாட் கூடுதலாகும். இந்த கூடுதலான மின் நுகர்வு எவ்வித தடங்கலுமின்றி எதிர்கொள்ளப்பட்டது. வரக்கூடிய நாட்களில் மின்சார நுகர்வு இன்னும் அதிகரிக்கக்கூடிய வாய்ப்புகள் அதிகம் உள்ளது. பொதுமக்களுக்கு 24 மணி நேரமும் தடையில்லா மின்சாரத்தை வழங்குவது குறித்து ஆய்வுக்கூட்டத்தில் விவா திக்கப்பட்டது. இதுகுறித்து அமைச்சர் வி.செந்தில் பாலாஜி கூறுகையில், “தமிழ்நாட்டின் தற்போதைய மின்சார தேவை 16,500 மெகாவாட்டிலிருந்து 17,500 மெகாவாட் வரை உள்ளது. இது வரும் ஏப்ரல் மாதத்தில் மேலும் அதிகரித்து 17 ஆயிரம் மெகாவாட்டிலிருந்து 18,500 மெகாவாட்டாக அதிகரிக்க லாம்” என்றார்.
நிலம் கையகப்படுத்தல் தொடர்பான தொகுப்புகள் வெளியீடு
சென்னை,மார்ச் 8- அரசாணை, வழிகாட்டுமுறைகள் உட்பட நிலம் கையகப்படுத்தல் தொடர்பான 4 தொகுப்புகளை தலை மைச் செயலர் வெ.இறையன்பு வெளி யிட்டார். இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப் பில் கூறப்பட்டுள்ளதாவது: நில எடுப்பு பணிகளின் முக்கியத்து வத்தை உணர்ந்து வருவாய்த்துறை களப் பணியாளர்களுக்கு அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரி மூலமாக நிலஎடுப்பு தொடர்பான பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, மாநில நில எடுப்பு சட்டங்கள், ஒன்றிய அரசின் நில எடுப்பு சட்டம், தேசிய நெடுஞ்சாலைகள் சட்டம் மற்றும் தனிநபர் பேச்சு வார்த்தை முறை ஆகியவற்றின் கீழ் நில எடுப்பு நடைமுறைகளின் உயர் இழப்பீட்டுத் தொகை கோரும் மனுக்களை கையாள்வது குறித்த நடை முறைகளையும் நிலம் கையகப்படுத் தல் தொடர்பாக இதுவரை நடை முறையில் இருந்து வரும் அனைத்து சட்டங்கள், விதிகள், அரசாணைகள், அரசுவழிகாட்டுமுறைகள் ஆகிய வற்றை உள்ளடக்கிய 4 தொகுப்புகள் தயாரிக்கப்பட்டுள்ளன. இத்தொகுப்புகளை சென்னையி லுள்ள அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் தலைமைச் செயலரும், பயிற்சித் துறை யின் தலைவருமான வெ.இறையன்பு வெளியிட்டார். முதல் பிரதிகளை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண் மைத்துறை செயலர் குமார் ஜெயந்த் பெற்றுக்கொண்டார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தங்கம் விலை ரூ.560 குறைந்தது
தங்கத்தின் விலை கடந்த சில தினங்களாக ஏற்றமும் இறக்கமுமாக காணப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆபரணத்தங்கத்தின் விலை புதனன்று(மார்ச் 8) சவரனுக்கு ரூ.560 குறைந்து ஒரு சவரன் ரூ.41,320-க்கு விற்பனையானது. 22 கேரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.5,165. வெள்ளி விலையும் குறைந்துள்ளது. ஒரு கிராம் ரூ.67.50-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.67,500-க்கும் விற்பனையாகிறது.
ஓட்டுநர்களுக்கு ரூ.1000 என்பது வதந்திதான்
சென்னை,மார்ச் 8- தமிழ்நாடு ஓட்டுநர், தொழி லாளர் நலச் சங்கம், சென்னை-34 என்ற பெயரில் வெளியிடப்பட்ட விளம்பரத்தில் தமிழ்நாடு அரசு அனைத்து வாகன ஓட்டுநர்களுக்கும் நிவார ணத் தொகை ரூ. 1000 வழங்கப்பட இருப்பதாகவும், அதனை பெறு வதற்கு உரிய ஆவணங்களை அருகிலுள்ள கிராம நிர்வாக அலுவலகத்தில் சமர்ப்பித்தால் அவர்களது வங்கி கணக்கில் நிவா ரணத் தொகை செலுத்தப்படும் என அரசு அறிவித்துள்ளதாக உண்மைக்கு புறம்பான செய்தி சமூக வலைதளங்களில் பகிரப் பட்டு வருகிறது என்று போக்கு வரத்துத்துறை அறிவித்துள்ளது.