states

தீபாவளிக்கு 14 ஆயிரத்து 086 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

சென்னை, அக். 21 -  “தீபாவளியை முன்னிட்டு, அக்டோபர் 28 முதல் 30-ஆம் தேதி வரை, சென்னையில் இருந்து தினசரி இயக்கக் கூடிய 2092 பேருந்துகளுடன், 4 ஆயிரத்து 900 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்றும், அதன்படி மூன்று நாட்களுக்கும் சேர்த்து ஒட்டு மொத்தமாக, 11 ஆயிரத்து 176 பேருந்துகளும், பிற ஊர்களில் இருந்து மூன்று நாட்களுக்கு 2 ஆயிரத்து 910 சிறப்புப் பேருந்துகள் என மொத்தமாக 14 ஆயிரத்து 086 பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர் தெரிவித்துள்ளார். மேலும், தீபாவளி பண்டிகை முடிந்த பின்னர், பிற ஊர்களில் இருந்து சென்னைக்கு, நவம்பர் 2 முதல்  நவம்பர் 4-ஆம் தேதி வரையில், தினசரி இயக்கக்கூடிய 2 ஆயிரத்து 092 பேருந்துகளுடன் 3 ஆயிரத்து 165 சிறப்புப்  பேருந்துகள் என்று மூன்று நாட்களும் சேர்த்து ஒட்டுமொத்த மாக 9 ஆயிரத்து 441 பேருந்துகள் இயக்கப்படும். இவை  தவிர, பிற முக்கிய ஊர்களிலிருந்தும், பல்வேறு ஊர்களுக்கு  3 ஆயிரத்து 165 சிறப்பு பேருந்துகள் என மொத்தமாக 12 ஆயிரத்து 606 பேருந்துகள் இயக்கப்பட உள்ளனதாக தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டால் 18004256151, 044-26280445 என்ற எண்களில் புகார் அளிக்கலாம் என்றார். தீபாவளியையொட்டி மொத்தம் 9 முன்பதிவு மையங்கள் செயல்பட்டு வருகின்றன. பயணிகளின் வசதிக்காக 24 மணி நேரமும் கட்டுப்பாட்டு அறை திறந்திருக்கும். தமிழ்நாடு போக்குவரத்துக் கழக பேருந்துகளின் இயக்கம் குறித்து அறிந்து கொள்வதற்கும் மற்றும் இயக்கம் குறித்து புகார்  தெரிவிப்பதற்கும் எதுவாக, 9445014436 என்ற தொலைபேசி எண்ணையும் 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம்.