லண்டன், ஜூன் 14- உலகம் முழுவதும் ஏறபட்டுள்ள பல்வேறு நெருக்கடிகளால் லட்சக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம் பெயர்ந்துள்ளனர் என்று ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் முகமை தெரிவித்துள்ளது. 2022 ஆம் ஆண்டில் பெரும் அளவில் அப்பாவி மக்கள் தங்கள் சொந்த மண்ணை விட்டு, பாதுகாப்பைத் தேடி அகதிகளாகப் பல இடங்களுக்கு சென்றிருக்கிறார்கள். கடந்த ஆண்டில் மட்டும் 1 கோடியே 90 லட்சம் பேர் அகதிகளாக வெளியேறியிருக்கிறார்கள். ஆப்கானிஸ்தானில் நிலவும் நெருக்கடி மற்றும் உக்ரைன், சூடான் சண்டைகளே இந்த இடம் பெயர்வுக்குக் காரணங்களாகக் கூறப்படுகிறது. இது குறித்துக் கருத்து தெரிவித்த அகதிகள் முகமையின் தலைவர் பிலிப்போ கிராண்டி, “நம்முடைய உலகம் எத்தகைய நிலையில் உள்ளது என்பதை இந்தப் புள்ளி விபரங்கள் அம்பலப்படுத்துகின்றன. அகதிகளாகத் தங்கள் இருப்பிடங்களில் இருந்து வெளியேறுபவர்களின் எண்ணிக்கையானது, உள்நாட்டிலேயே புகலிடம் தேடிக் கொண்டிருப்பவர்களையும் சேர்த்தே கணக்கிடப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டார். இது குறித்து மேலும் பேசிய அவர், “சர்வதேச ரீதியான சிக்கல்கள் அனைத்துமே மனிதாபிமான ரீதியிலான நெருக்கடிகளாக மாறுகின்றன. கடந்த 20 ஆண்டுகளாக அகதிகளின் எண்ணிக்கை மாறாமல் இருக்கிறது. புதிய, புதிய மோதல்களால் அகதிகள் உருவாகிக் கொண்டே உள்ளனர். பாரபட்சம், வன்முறை மற்றும் சுற்றுச்சூழல் பிரச்சனைகளும் மக்கள் மீது பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன” என்று தெரிவித்திருக்கிறார்.