நிபா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த அதிகாரிகள் அடங்கிய 19 குழுவினர் தீவிரப் பணியில் ஈடுபட்டுள்ளதாக கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.
கேரளத்தில் கோழிக்கோடு மாவட்டத்தில் காய்ச்சல் காரணமாக இருவர் உயிரிழந்ததையடுத்து சோதனையில் அது நிபா தொற்றுதான் என உறுதி செய்யப்பட்டது.
கேரளத்தில் நிபா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 6 ஆக உள்ளது. இருவர் உயிரிழந்த நிலையில் 4 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இறந்த இருவருடன் தொடர்பில் இருந்தவர்கள், அவர்களுக்கு சிகிச்சையளித்த மருத்துவமனை ஊழியர்கள் என நூற்றுக்கணக்கானோர் தனிமையில் வைக்கப்பட்டுள்ளனர்.
கோழிக்கோடு மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் வருகிற செப்டம்பர் 24 வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நிபா பாதிப்பு குறித்து கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில்,
11 பேரின் மாதிரிகள் புனேவுக்கு அனுப்பப்பட்ட நிலையில், அவர்களுக்கு தொற்று இல்லை என முடிவுகள் வந்துள்ளன. தற்போது வரை 6 பேருக்கு நிபா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் இருவர் மரணமடைந்துள்ளனர்.
பேப்பூர் துறைமுகத்தில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட பகுதிகள் அனைத்தும் கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. அதிகாரிகள் அடங்கிய 19 குழுவினர் நிபா வைரஸை கட்டுப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர் என்றார்.