நாடு முழுவதும் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வரும் நிலையில், ஒடிசாவில் வெப்ப அலை காரணமாக கடந்த 3 நாட்களில் 8 பேர் உயிரிழந்ததாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மாநில பேரிடர் நிவாரண மையம் தெரிவித்த தகவல்களில், ஒடிசாவில் இந்த ஆண்டு கோடையில் 159 பேரின் உயிரிழப்புக்கு வெப்ப அலை காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. 41 பேர் இறப்புக்கு கோடை வெப்பமே காரணமே என உறுதி செய்யப்பட்டுள்ளது.72 பேரின் மரணத்திற்கு வெப்ப அலைதான் காரணமா என மாவட்ட அளவில் விசாரணையில் உள்ளது என்று தெரிவித்தது.
ஒடிசா தலைவர் புவனேஸ்வரில் நேற்று முன்தினம் அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி செல்சியஸ் ஆக பதிவானது. இந்த வாரம்முழுவதும் ஒடிசாவில் வெப்பநிலை வழக்கத்தை விட 4.5 டிகிரி செல்சியஸ் முதல் 6.4 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இந்த ஆண்டு கோடையில் இந்தியாவிலும் ஆசியாவின் பல்வேறு பகுதிகளிலும் வழக்கத்துக்கு மாறான அதிக வெப்பத்தை மக்கள் எதிர்கொண்டு வருகின்றனர். பருவநிலை மாற்றமே இதற்கு காரணம் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
நாட்டின் வடக்கு மற்றும் வடகிழக்கு பகுதிகளில் வரும் நாட்களில் தொடர்ந்து அனல் காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.