ராஜஸ்தானில் பறவைக்காய்ச்சல் தீவிரமடைந்து வரும் சூழலில் உயிரியல் பூங்கா மூடப்பட்டுள்ளது.
ராஜஸ்தானில் 33 மாவட்டங்களில் 15 மாவட்டங்களில் பறவைக் காய்ச்சல் தீவிரமடைந்துள்ளது. இதுவரை மாநிலத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பறவைகள் இறந்துள்ளதாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர்.
இதுதொடர்பாக வனவிலங்கு காப்பாளர் மோகன்லால் மீனா கூறுகையில்:- ஜெய்ப்பூர் உயிரியல் பூங்காவில் நான்கு பறவைகள் மற்றும் சில வாத்துக்கள் இறந்து கிடந்துள்ளது. ஒரு சில பறவைகள் நோய்வாய்ப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து உயிரியல் பூங்கா சுத்திகரிக்கப்பட்டு மூடப்பட்டது. அவற்றின் மாதிரிகள் சேகரித்து போபாலில் உள்ள ஆய்வகத்திற்குச் சோதனைகளுக்காக அனுப்பப்பட்டுள்ளன. ஜெய்ப்பூர் தௌசா, சவாய் மாதோபூர், ஹனுமன்கர், ஜெய்சால்மர், பிகானேர், சித்தோர்கர், பாலி, பரன், கோட்ட, பன்ஸ்வாரா, சிரோஹி மற்றும் பிரதாப்கர் மாவட்டங்களில் பறவைக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டது. திங்களன்று டோங்க் மற்றும் கரௌலி மாவட்டங்களில் பறவைக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டது. கடந்த 24 மணி நேரத்தில், மேலும் 264 காகங்கள் இறந்துள்ளது இதுவரை மாநிலத்தில் மொத்தம் 2,500 காகங்கள் இறந்துள்ளன. மேலும் 180 மயில்கள், 190 புறாக்கள் இறந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.