states

img

புதுச்சேரி போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் முடிவுக்கு வந்தது

புதுச்சேரி, ஜூன் 29- புதுவை அரசு போக்குவரத்துக் கழகமான பி.ஆர்.டி.சி. ஓட்டுநர்கள், நடத்துனர்கள் தாக்கப்படுவதைக் கண்டித்தும், பணி பாதுகாப்புக் கோரியும் கடந்த 23ஆம் தேதி முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். நிர்வாகம் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் போராட்டம் தொடர்ந்தது. போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர செவ்வாய்கிழமை அமைச்சர் சந்திர பிரியங்கா தலைமையில் போராட்டக் குழுவினருடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தையின் போது ஊழியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும், பணி பாதுகாப்பு வழங்க வேண்டும், பணி நீக்கம் செய்யப்பட்ட 12 பேருக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதுகுறித்து முதலமைச்சருடன் பேசி முடிவெடுப்பதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என தொழிலாளர்கள் அறிவித்தனர். இந்நிலையில் புதனன்று (ஜூன் 29) முதலமைச்சர் ரங்கசாமியுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் எதிர்கட்சித் தலைவர் சிவா, சம்பத் எம்.எல்.ஏ. உள்ளிட்ட போராட்டக் குழுவினர் பங்கேற்றனர்.  பேச்சுவார்த்தையில் கோரிக் கைகளை பரிசீலித்து நிறைவேற்றுவதாக முதலமைச்சர் உறுதியளித்தார். இதையடுத்து போராட்டம் முடிவுக்கு வந்தது.