புதுச்சேரி,ஜூலை 30- இந்தியாவின் 75-ஆவது சுதந்திர தின விழாவையொட்டி நாடு முழுவதும் 75 இடங்களில் சுதந்திரப் போராட்ட தியாகிகளை நினைவு கூறும் வகையில் புதுச்சேரி கடற்கரை காந்தி சிலை எதிரில் தியாகப் பெருஞ்சுவர் அமைக்கப்பட்டு வருகிறது. இதில், விடுதலைப் போராட்ட தியாகிகள் பெயர் அடங்கிய பலகை பொறிக்கப்பட்டு வருகிறது. சுதந்திரப் போராட்டத்தில் எவ்வித பங்களிப்பும் இல்லாத சாவர்க்கர் பெயரை பதிக்கும் முயற்சிகள் நடைபெற்றது.இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து சமூக நல அமைப்புகளை சார்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். புதுச்சேரி சின்னமணி கூண்டு, காந்தி வீதி பகுதியிலிருந்து ஊர்வலமாக வந்தவர்களை பொதுப்பணித்துறை அலுவலகம் முன்பு காவல்துறையினர் தடுப்பு வேலிகளை அமைத்து தடுத்ததால் துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன்,சட்டப் பேரவை தலைவர் செல்வம் மற்றும் சாவக்கர் ஆகியோரது உருவப்படங்களை எரிக்க முயன்றனர். இதனையடுத்து காவல்துறையினர் அனைவரையும் கைது செய்தனர்.