புதுச்சேரி,மார்ச்.14- அனைவருக்கும் முன்னுதாரணமாக திகழும் வகையில் புதுச்சேரி கல்வித்துறை இயக்குநர் தனது மகனை அரசுப் பள்ளியில் சேர்த்துள்ளார். புதுச்சேரியில் கொரோனா பெருந்தொற்று காரணமாக இரண்டு ஆண்டுகளாக மழலையர் பள்ளிகள் மூடப்பட்டிருந்தது. தற்போது கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருவதால் ஒன்றாம் வகுப்பு முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு தேர்வுகளும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மழலையர் பள்ளிகள் மட்டும் திறக்கப்படவில்லை. மழலையர் பள்ளிகளை திறக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்த நிலையில், மார்ச் 14 முதல் மழலையர் பள்ளிகள் செயல்பட கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டது. புதுச்சேரி பள்ளி கல்வித்துறை இயக்குநர் ருத்ரகவுடு தனது மகன் அசுகோஷ்வை லாஸ்பேட்டை தொகுதிக்கு உட்பட்ட புதுப்பேட்டையிலுள்ள ஓலக்கார அரங்கசாமி நாயக்கர் அரசு நடுநிலைப் பள்ளியில் எல்கேஜி வகுப்பில் சேர்த்தார். புதுச்சேரியில் அரசுப் பள்ளிகளைவிட தனியார் பள்ளிகளே அதிகமாக உள்ளது. கொரோனா பெருந்தொற்றுக்கு முன்பு பெரும்பாலான பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் சேர்த்து வந்த நிலை இருந்தது. எனவே அரசுப் பள்ளிகளின் தரத்தை உயர்த்த வேண்டும், உட்கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு, புதுச்சேரி பள்ளிக்கல்வி பாதுகாப்பு இயக்கம், இந்திய மாணவர் சங்கம் சார்பில் புதுச்சேரி அரசிடம் வலியுறுத்தி வந்தது. கொரோனா தொற்றுக்கு பின்னர், அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை அதிகரித்து வரும் நிலையில், புதுச்சேரி பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் ருத்ரகவுடு தனது மகனை அரசுப் பள்ளியில் சேர்த்து அனைவருக்கும் முன் உதாரணமாகத் திகழ்ந்துள்ளார். இயக்குநரின் செயலை தமிழ்நாடு, புதுச்சேரி பள்ளி கல்வி பாதுகாப்பு செயலாளர் கல்வியாளர் ஜே.கிருஷ்ணமூர்த்தி பாராட்டு தெரிவித்துள்ளார்.
மாணவர் சங்கம்
ஒரு வகுப்பறையில் 20 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற நிலையை உருவாக்க வேண்டும், அதற்கான உள்கட்டமைப்புகளை பலப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை இந்திய மாணவர் சங்கம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. கல்வித்துறை இயக்குநரின் நடவடிக்கையை இந்திய மாணவர் சங்கம் பாராட்டுவதோடு, மற்ற துறை அதிகாரிகளும் தங்களது பிள்ளைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்க வேண்டும் என்று இந்திய மாணவர் சங்க பிரதேச செயலாளர் பிரவீன் கேட்டுக் கொண்டார்.