நடப்பு நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை 7.8 சதவீதத்திலிருந்து 7.2 சதவீதமாக குறைத்து கணிப்பை, மும்பையில் இன்று நடந்த 10ஆவது நிதிக்கொள்கை கூட்டத்தில் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
இதுகுறித்து இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் செய்தியாளர்களிடம் கூறுகையில், கடனுக்கான வட்டிவிகிதத்தில் எந்த மாற்றமும் இன்றி 4 சதவீதமாகவே நீடிக்கும்.
முன்னதாக நாட்டின் பொருளாதார வளர்ச்சி நடப்பு நிதியாண்டில் 7.8 சதவீதம் வளர்ச்சி அடையும் என்று தெரிவித்திருந்தோம். ஆனால், சர்வதேச காரணிகள், கச்சா எண்ணெய் விலை உயர்வு ஆகியவற்றால் பொருளாதார வளர்ச்சி 7.2 சதவீதமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
2022-23 ஆம் நிதியாண்டுக்கான சில்லறை பணவீக்கம் ஏற்கனவே கணிக்கப்பட்டு இருந்த 4.5 சதவீதம், 5.7 சதவீதமாக அதிகரிக்கப்பட்டு கணிக்கப்பட்டுள்ளது.
மேலும் வங்கிகளின் வைப்புத் தொகைக்கு ரிசர்வ் வழங்கும் வட்டி விகிதமும் மாற்றமின்றி, ரிவர்ஸ் ரெப்போ 3.5 சதவீதமாகவே இருக்கும்.
கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 100 டாலராக இருந்தால், 2022-23 ஆம் நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி, முதல் காலாண்டில் 16.2 சதவீதமாகவும், 2ஆவது காலாண்டில் 6.2 சதவீதமாகவும், 3ஆவது காலாண்டில் 4.1 சதவீதமாகவும், 4ஆவது காலாண்டில் 4 சதவீதமாகவும் இருக்கும்.
இனி வரும் காலங்களிலும் பணவீக்கம் ஏறுமுகத்தில் இருக்க வாய்ப்பு இருந்தாலும் அதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
2 மாதங்களுக்கு ஒருமுறை ரிசர்வ் வங்கி நிதிக்கொள்கை அறிவிப்புகளை வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.