states

img

கேரளாவில் 10 அணைகளுக்கு அபாய எச்சரிக்கை

கேரளாவில்  அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் 10 அணைகளின் அருகில் உள்ள பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  

அரபிக் கடலில் ஏற்பட்ட காற்றழுத்தத் தாழ்வுநிலை காரணமாக கேரளாவில் பலத்த மழை பெய்து வருகிறது. இந்நிலையில், மழை வெள்ள நிலவரம் குறித்து பத்தனம்திட்டாவில் ஆலோசனை கூட்டம் நடத்திய பின், மாநில வருவாய்த் துறை அமைச்சர் கே.ராஜன், சுகாதாரத் துறை அமைச்சர் வீணா வர்கீஸ் மற்றும் மாநில நீர்வளத் துறை அமைச்சர் ரோஸி அகஸ்டீன் ஆகியோர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:  

பத்தனம்திட்டா, இடுக்கி, திருச்சூர் மாவட்டங்களில் அமைந்துள்ள காக்கி, சோலையாறு, மாட்டுப்பட்டி, மூழியாறு, குண்டாலா, பீச்சி உள்ளிட்ட 10 அணைகள் அமைந்துள்ள பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. மேலும் 8 அணைகள் அமைந்துள்ள பகுதிகளுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.    

இதனை தொடந்து சோலையாறு, பம்பை, காக்கி, இடமலையாறு உள்ளிட்ட அணைகளில் நீர்மட்டமும் முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் அணைகளில் உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது.

இதனால், தெற்கு மற்றும் மத்திய கேரளத்தில் உள்ள நதிகளில் நீர்மட்டம் அதிகரிக்கும். மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று இவ்வாறு தெரிவித்து உள்ளனர்.