திருவனந்தபுரம்:
கேரள வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயம் துவங்கியுள்ளது. பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணிஅரசு திருவனந்தபுரத்தில் வியாழனன்று மாலை தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக பதவியேற்றுக் கொண்டது. பினராயி விஜயன் உட்பட 21 பேர் கொண்ட அமைச்சரவை, 17 புது முகங்களுடன் பொறுப்பேற்றுக்கொண்டது. 17 பேர் புதுமுகங்கள் என்ற போதிலும் அவர்களும் மற்றவர்களும் மிகவும் திறமைவாய்ந்த அரசியல் அனுபவம்கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அமைச்சரவையில் 3 பேர் பெண்கள், அமைச்சரவையின் சராசரி வயது 54.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடது ஜனநாயக முன்னணியின் அரசு இரண்டாவது முறையாக பதவியேற்ற இந்த விழாவில் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கொடியேரி பாலகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் (பொறுப்பு) ஏ.விஜயராகவன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.திருவனந்தபுரம் தலைமைச் செயலகத்தையொட்டியுள்ள அரங்கில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக பந்தலில் சுமார் 400 பேர் மட்டுமே பங்கேற்ற - கோவிட்நெறிமுறைகள் முழுமையாக பின்பற்றப் பட்ட நிலையில் - பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. முதலமைச்சராக பினராயி விஜயனுக்கு ஆளுநர் ஆரிப் முகமதுகான் பதவி பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். பினராயி விஜயனை தொடர்ந்து அமைச்சர்களாக கே.ராஜன், ரோஸி அகஸ்டின், கே. கிருஷ்ணன் குட்டி, ஏ.கே.சசீந்திரன், அகமது தேவர்கோவில், ஆண்டனி ராஜூ, வி.அப்துர் ரகுமான், ஜி.ஆர்.அனில், கே.என்.பாலகோபால், ஆர்.பிந்து, ஜெ.சின்சு ராணி, எம்.வி.கோவிந்தன், பி.ஏ.முகமது ரியாஸ், பி.பிரசாத், கே.ராதாகிருஷ்ணன், பி.ராஜீவ், சஜி செரியன், வி.சிவன்குட்டி, வி.என்.வாசவன் மற்றும் வீணா ஜார்ஜ் ஆகியோர் வரிசையாக பதவியேற்றுக் கொண்டனர்.
அமைச்சரவையில் பினராயி விஜயன் உட்பட 16 பேர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்கள். இவர்களில் எம்.வி.கோவிந்தன், கே.ராதாகிருஷ்ணன் ஆகியோர் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் கள் ஆவர். கே.என்.பாலகோபால், பி.ராஜீவ்ஆகியோர் மாநில செயற்குழு உறுப்பினர்கள் ஆவர். சஜி செரியன், வி.என்.வாசவன், வி.சிவன்குட்டி, முகமது ரியாஸ் ஆகியோர் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர்கள் ஆவர். அப்துர் ரகுமான் கட்சி ஆதரவு பெற்ற சுயேட்சை ஆவார். அமைச்சர்களில் கே.ராஜன், ஜி.ஆர்.அனில், சின்சு ராணி, பிரசாத் ஆகியோர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்கள். அமைச்சர்களில் ரோஸி அகஸ்டின் (கேரள காங்கிரஸ் மாணி), அகமது தேவர் கோவில் (இந்திய தேசிய லீக்), கே.கிருஷ்ணன் குட்டி (மதச்சார்பற்ற ஜனதா தளம்), ஏ.கே.சசீந்திரன் (தேசியவாத காங்கிரஸ்), ஆண்டனி ராஜூ (கேரள ஜனநாயக காங்கிரஸ்) ஆகியோர் இடது ஜனநாயக முன்னணியின் உறுப்புக் கட்சிகளை சேர்ந்தவர்கள் ஆவர். பதவியேற்பு விழாவில் தமிழக அரசின் சார்பில் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பங்கேற்று, முதலமைச்சர்பினராயி விஜயன் மற்றும் அமைச்சர்களுக்கு நேரில் வாழ்த்து தெரிவித்தார். விழாவில், திருவனந்தபுரம் நகரில் அமலில் உள்ள ஊரடங்கை மீறி விட்டதாக கூறி ஐக்கிய ஜனநாயக முன்னணி தலைவர்கள் பங்கேற்காமல் புறக்கணித்த னர். பதவியேற்புக்கு முன்னதாக பினராயி விஜயன் உள்ளிட்ட தலைவர்கள் புன்னப்புரா மற்றும் வயலார் தியாகிகளுக்கு நேரில் சென்று செவ்வணக்கம் செலுத்தினர்.