திருவனந்தபுரம்:
எல்டிஎப் அரசு பொறுப்பேற்றதிலிருந்து 27,000 நிரந்தர பணியிடங்கள் உட்பட 44,000 புதிய பதவிகள் உருவாக்கப்பட்டுள்ளன. 2021 ஜனவரி 31 வரை பிஎஸ்சி மூலம் 1,57,911 பேர் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறினார்.
பணியாளர் தேர்வு எழுதி (பிஎஸ்சி) காத்திருப்போர் அனைவருக்கும் வேலை கிடைப்பதில்லை. காலிப் பணியிடங்களில் மட்டுமே நியமனம் கிடைக்கும் என்கிற உண்மை நிலையை மறைத்து எல்டிஎப் அரசுக்கு எதிராக போராட்டம் தூண்டி விடப்படுகிறது.
இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பின்போது விளக்கமளித்து முதல்வர் பினராயி விஜயன் கூறியதாவது:
தேர்வு எழுதியவர்களில் தேர்வு செய்யப்பட்ட முறை, தேர்வை துல்லியமாக நடத்துவதும், தரவரிசைப் பட்டியலை வெளியிடுவதும், காலியிடத்தை சரியான நேத்தில் தெரிவிப்பதும், நியமனம் செய்வதும் ஆகும். தரவரிசைப் பட்டியலை காலவரையின்றி நீட்டித்து, புதிய தலைமுறையினர் தேர்வுக்கு வருவதற்கான வாய்ப்பு இல்லாமல் செய்யும் போக்கைமுடிவுக்கு கொண்டு வரவும், பட்டியலில் உள்ள காலியிடங்களை நிரப்புவதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஏற்கனவே 4012 தரவரிசை பட்டியல்கள் வெளியிடப்பட்டுள்ளன.கடந்த ஆட்சியின் போது வெளியிடப்பட்ட பட்டியல் 3113 மட்டுமே. 4012 தரவரிசைப் பட்டியலில் சுமார் நான்கு லட்சம் பேர் இருப்பார்கள். இதில் அனைவருக்கும் வேலை கிடைக்காது. ஐந்தில் ஒரு பகுதியினர் மட்டுமே பொதுவாக ஆட்சேர்ப்பு செய்யப்படுகிறார்கள். மாநிலம் முழுவதும் தற்போதைய ஊழியர்களின் எண்ணிக்கை 5,28,231. மாநிலத்தில் ஒரு வருடத்தில் அரசு சேவைக்கு மொத்த நியமனங்கள் 25,000 வரையாகும். அரசாங்கம் முடிந்தவரை அதிக நியமனங்கள் செய்துஉள்ளது.
முந்தைய யுடிஎப் அரசாங்கம் ஏற்கனவே உள்ள பதவிகளில் கூட நாள்கூலித் தொழிலாளர்களை நியமிக்கும் நிலையை ஏற்றுக்கொண்டபோது அதில் மாற்றம் ஏற்படுத்தியது எல்டிஎப் அரசு. வரைமுறை இல்லாமல் விருப்பமானவர்களை நிரந்தரப்படுத்தும் கொள்கையை பின்பற்றியுள்ளது. அந்த அரசாங்கத்தின் போது நிர்ணயிக்கப்பட்ட நிரந்தர ஊழியர்களின் எண்ணிக்கை 5910 ஆகும். ஆனால், தெளிவான விதிமுறைகளுடன் தகுதியுள்ளவர்களை நிரந்தரம் செய்ய எல்டிஎப் அரசு முடிவு செய்தது.முன்னர் குறிப்பிட்டபடி, பிஎஸ்சி தரவரிசை பட்டியலில் குறைந்தது 5மடங்கு காலியிடங்கள் உள்ளன. பட்டியலில் உள்ள முழு பட்டியலுக்கும் நியமனம் என்பது நடைமுறை சாத்தியமற்றது. கேரளாவில் உள்ள பிரச்சனை என்னவென்றால், படித்தவர்களுக்கு அவர்களின் தகுதிக்கு ஏற்ப வேலைவாய்ப்பு கிடைக்கவில்லை. இந்தச் சூழலில்தான் இந்த அரசு பல்வேறு துறைகளில் அதிக வேலைவாய்ப்பு மற்றும் மூலதன முதலீட்டை உருவாக்க முற்படுகிறது. மத்திய அரசு மற்றும் மத்திய பொதுத்துறை நிறு
வனங்களில் நிரப்பப்பட வேண்டிய லட்சக்கணக்கான காலியிடங்கள் உள்ளன. பல நியமனங்கள் ஸ்தம்பித்துள்ளன.
பொதுவாக இதுபோன்ற வேலைவாய்ப்புகளை பெறும் பகுதியினர்கூட அத்துறைகளில் வாய்ப்புகள் இல்லாமல் கேரளாவில் உள்ள பிஎஸ்சியை நம்பியிருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அதன் அழுத்தமும் இப்போது உள்ளது. கடைசி தரவரிசைப் பட்டியலில் உள்ள பட்டதாரிகள் தற்போது தேர்வு எழுத முடியாது. இதற்கு முன்பு இதுபோன்றவர்கள் தேர்வு எழுத வாய்ப்பளிக்கப்பட்டிருந்தது. அத்தகைய நபர்கள் பெரும்பாலும் மற்ற தரவரிசை பட்டியல்களிலும் இடம்பெறுவார்கள். மிகவும் கவர்ச்சிகரமான வேலைகளுக்கு அவர்கள் செல்லும்போது உருவாகும் காலியிடங்கள் பட்டியலில் பின்தங்கிய பிரிவினருக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கியிருக்கும். இதனால்தான் முந்தைய தரவரிசைப் பட்டியலில் மிகக் குறைந்த தரவரிசையில் உள்ளவர்கள் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டார்கள் என்றும், இப்போது இல்லை என்றும் புகார்கள் எழுகின்றன.இந்த உண்மைகள் அனைத்தையும் மூடிமறைத்து, வேலை தேடுவோர்களிடையே தவறான எண்ணங்களை பரப்புவதற்கும், தரவரிசைப் பட்டியலில் கடைசி நபர்களுக்கு கூட வேலை வாய்ப்புகள் இருப்பதாக பொய்யாக பிரச்சாரம் செய்வதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதன்படி நிரபராதிகளான இளைஞர்களை வீதிகளில் இறக்க சிலர் முயற்சிக்கின்றனர்.
ஆபத்தான சில விளையாட்டுகளையும் அண்மையில் நாம் பார்த்தோம். எந்தவொரு பட்டியலிலும் இல்லாதவர்கள் கூட உணர்ச்சிப்பூர்வமான வெளிப்பாடுகளை காட்டினர் (தீக்குளிப்பு முயற்சி). சிலர் அதை வேண்டுமென்றே ஊக்குவித்தனர். மக்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் சில நகர்வுகளும் இருந்தன. அரசியல் நலன்கள் பல இருக்கலாம். மனித உயிருக்கு ஆபத்து ஏற்படுத்துவது மனிதச் செயல் அல்ல.இவ்வாறு முதல்வர் பினராயி விஜயன் கூறினார்.