கர்நாடகாவில் ஹிஜாப் விவகாரம் தொடர்பாக உடுப்பி மாவட்டத்தில் நாளை காலை முதல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கா்நாடகா மாநிலம் உடுப்பி மாவட்டம், குந்தாபுராவில் உள்ள அரசு பி.யூ. கல்லூரியில் ஹிஜாப் அணிய பள்ளி நிா்வாகம் தடை விதித்தது. அதனை மீறி ஹிஜாப் அணிந்து வந்த இஸ்லாமிய மாணவிகள் 6 பேரை கல்லூரியிலிருந்து கல்லூரி முதல்வா் வெளியேற்றினாா். இதனால் கல்லூரி வளாகத்துக்கு வெளியே இஸ்லாமிய மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதனைதொடர்ந்து இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வந்தால் நாங்களும் காவித்துண்டு அணிந்து வருவோம் என சங்-பரிவார மாணவர் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதற்கான விசாரணை கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
மேலும் மாணவ-மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெங்களூருவில் பள்ளி, கல்லூரிகளை சுற்றி 144 தடை உத்தரவு வருகிற 22 ஆம் தேதிவரை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்தொடர்ச்சியாக உடுப்பி மாவட்டத்தில் உள்ள உயர்நிலைப் பள்ளிகளை சுற்றி பிப்.14 ஆம் தேதி காலை 6 மணிமுதல் பிப்,19 ஆம் தேதி மாலை 6 மணிவரை 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. இந்த உத்தரவை உடுப்பி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிறப்பித்துள்ளார்.
மேலும் தடை உத்தரவு உள்ள பள்ளி, கல்லூரிகளை சுற்றிய 200 மீட்டர் தூரத்தில் கூட்டம் கூட, ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்தவும் கூடாது. மீறினால் போலீசார் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.