ஜம்மு காஷ்மீரில், உள்ளூர் அல்லாதவர்களும் வாக்காளர் பட்டியலில் பதிவு செய்ய அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அம்மாநில முன்னாள் முதல்வர்கள் உமர் அப்துல்லா மற்றும் மெகபூபா முஃப்தி ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தான 370 பிரிவை, கடந்த 2019-ஆம் ஆண்டு ஒன்றிய பாஜக அரசு ரத்து செய்து, அம்மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாக பிளவுபடுத்தியது. அம்மாநிலத்தின் முன்னாள் முதல்வர்கள் சிறையில் வைக்கப்பட்டு இருந்தனர். அதன்பிறகு பல்வேறு மாற்றங்கள், திருத்தங்களை கொண்டு வந்த வண்ணம் இருக்கிறது. மேலும், கடந்த 4 ஆண்டுகளாக தேர்தல் நடைபெறாமல் இருந்த நிலையில், 2023-ல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில் உள்ளூர் அல்லாத வெளி மாநிலத்தவர்களும் வாக்காளர் பட்டியலில் பதிவு செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து, தலைமை தேர்தல் அதிகாரி ஹிர்தேஷ் குமார் பத்திரிக்கையாளர்களுக்கு அளித்த பேட்டியில், ஜம்மு காஷ்மீரில் 370 பிரிவை ரத்து செய்த பிறகு, 20-25 லட்சம் புதிய வாக்காளர்கள் வாக்கு பட்டியலில் சேர்க்கப்பட உள்ளதாகவும், ஜம்மு காஷ்மீரில் குடியிருக்கும் உள்ளூர் அல்லாத வெளி மாநிலத்தவர்களும் வாக்காளர் பட்டியலில் பதிவு செய்யலாம் என்று தெரிவித்துள்ளார்.
இதற்கு, முன்னாள் முதல்வர்களான உமர் அப்துல்லா மற்றும் மெகபூபா முஃப்தி ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.