ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீரில் உள்ள நிலைமையை ஆராய்ந்து அறிந்துகொள்வதற்காக வந்துள்ள 24 நாடுகளின் தூதர்கள், புதன்கிழமையன்று அந்த மக்களுடன் கலந்துரையாடினர்.
ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து,அந்த மாநிலத்தை இரண்டாகப் பிரித்து சிதைத்தது மத்திய பாஜக அரசு. இதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. கொரோனாவுக்கு முந்தைய காலத்திலிருந்தே பாஜக அரசால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் அம்மாநில மக்கள் பல்வேறு வகையில் அவதிப்பட்டனர்.
இந்நிலையில் ஜம்மு காஷ்மீரில் அமைதியான சூழலையும் இயல்பு நியையும் கொண்டுவர எடுக்கப்பட்ட முயற்சிகளை வெளிநாடுகளுக்கு காட்டுவதற்காக வெளிநாடுகளின் தூதர்கள் ஜம்மு- காஷ்மீரில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்படுகிறார்கள். அவ்வகையில், ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட 24 நாடுகளின் தூதர்கள் 2 நாள் பயணமாக ஜம்மு- காஷ்மீர் வந்துள்ளனர்.பிப்ரவரி 17 புதன்கிழமையன்று ஸ்ரீநகர் வந்த வெளிநாட்டுத்தூதர்கள், அங்கிருந்து பத்காம் மாவட்டம் மகாம்பகுதிக்கு சென்றனர். அங்கு பஞ்சாயத்துஅமைப்பு செயல்முறை மற்றும் பொதுமக்களின் குறைகளைத் தீர்ப்பதுகுறித்து அவர்களுக்கு விளக்கம்அளிக்கப்பட்டது. கிராம மக்களின்வீடுகளுக்கும் அழைத்துச் செல்லப்பட்டனர். அப்போது தூதர்கள், உள்ளூர் மக்களுடன் கலந்துரையாடினர். வெளிநாட்டு தூதர்கள் வருகையையொட்டி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. வெநாட்டு தூதர்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்வது இது மூன்றாவது முறையாகும்.