புதுதில்லி, பிப். 3 - மகா கும்பமேளாவில் கூட்ட நெரிசலில் 30 பேர் மட்டுமே பலியானதாக கூறி, உண்மை யை மூடிமறைக்க முயல்வதாகவும், அப்பாவி பொதுமக்களின் உயிர்ப்பலிக்கு காரணமான கும்பமேளா நிர்வாக குளறுபடிகள் குறித்து விவாதம் நடத்த வேண்டும் என்றும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. ஆனால், ஒன்றிய பாஜக அரசு அதற்கு அனுமதி அளிக்காத நிலையில், தங்களின் கோரிக்கைகளை முன்வைத்து முழக்கங் களை எழுப்பினர். இதனால் நாடாளு மன்றத்தின் இரண்டு அவைகளிலும் கடும் அமளி ஏற்பட்டது. பட்ஜெட் கூட்டத்தொடரின் மூன்றாவது நாளான திங்களன்று (பிப்.3) காலை 11 மணிக்கு மக்களவை கூடியது. கடந்த வாரம் மவுனி அமாவாசை நாளன்று மகா கும்பமேளா கூட்ட நெரிசலில் சிக்கி 30 பேர் உயிரிழந்தது குறித்து எதிர்க்கட்சிகள் முழக்கம் எழுப்பினர். ‘கும்பா பே ஜவாப் தோ’ (கும்ப மேளா சம்பவம் குறித்து பதில் சொல்லுங்கள்) என்று முழக்கம் எழுப்பிய எதிர்க்கட்சிகள், ஜனவரி 29 அன்று உயிரிழந்தவர்களின் பட்டியலை அதிகாரிகள் வெளியிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தன. மேலும், அரசு தெரிவித்த எண்ணிக்கையை விட உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகம் என்றும் குற்றம்சாட்டின. அப்போது, நாடாளுமன்ற நடவடிக்கை களை சீர்குலைக்க வேண்டாம் என்று நாடாளு மன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ, திசைத்திருப்பும் முயற்சியில் இறங்கினார். மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவும், “இந்திய மக்கள் உங்களை முழக்கங்கள் எழுப்புவதற்காகவும், அவை நடவடிக்கை களைத் தொந்தரவு செய்வதற்காகவும் தேர்ந்தெடுத்து அனுப்பினார்களா?” என்று ஆத்திரப்பட்டார்.
எனினும், பிரதமர் மோடி, உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு எதிராக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் முழக்கங்களை எழுப்பினர். மறுபுறத்தில், மாநிலங்களவையிலும் கும்பமேளா விவகாரம் எதிரொலித்தது. இங்கும் விவாதம் நடத்த வலியுறுத்தி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கங்கள் எழுப்பினர். அப்போது, அவைத்தலைவர் ஜகதீப் தன்கர், “விதி 267-இன் கீழ் எனக்கு 9 நோட்டீஸ்கள் வந்துள்ளன” என்றார். மேலும், “கும்பமேளாவின் தவறான நிர்வா கம், அரசியலமைப்பு மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கரை தொடர்த்து அவமதிக்கும் சம்ப வங்கள் அதிகரிப்பது குறித்து நோட்டீஸில் கேள்வி எழுப்பப்பட்டு இருக்கின்றன” என்றார். ஆனால், கடந்த 2022 டிசம்ர் 8 மற்றும் டிசம்பர் 19 தேதிகளில் விதி 267-ஐ எப்படி கையாளவேண்டும் என்று நான் அளித்த விரிவான உத்தரவுகளின் படி நோட்டீஸ்கள் இல்லாததால், அவற்றை ரத்து செய்வதாகவும் அறிவித்தார். இதனால், ஆவேசமடைந்த எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், அவைத் தலைவர் இருக்கையை சுற்றி நின்று முழக்கங்களை எழுப்பினர். அத்துடன், திமுக, காங்கிரஸ், சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள் வெளி நடப்பு செய்தனர்.