அசோகா பல்கலை. பேராசிரியருக்கு இடைக்கால ஜாமீன்
வேறு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யாமல் இருக்க உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்
அசோகா பல்கலைக்கழகப் பேராசிரியர் அலி கான் மஹ்முதாபாத்துக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தர விட்டுள்ளது உச்ச நீதிமன்றம். மேலும் இந்த வழக்கு தொடர்பாக விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழுவை மே 22 க்குள் அமைக்க ஹரியானா காவல்துறை இயக்குநர் ஜெனரலுக்கும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அலி கானுக்கு எதிராக வேறு யாரும் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்யாமல் இருக்க வேண்டும் என்றும், இது தொடர்பாக காவல்துறைக்கு அறிவுறுத்தலை வழங்குமாறும் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவிடம் நீதிபதி காந்த் கேட்டுக்கொண்டுள்ளார். ஆபரேசன் சிந்தூர் தொடர்பாக அசோகா பல்கலைக்கழக பேராசிரி யர் அலி கான் மஹ்முதாபாத் வெளி யிட்ட சமூக ஊடக பதிவு வகுப்பு வாதத்தை தூண்டுவதாக ஹரியானா மாநிலத்தின் மகளிர் ஆணையத் தலை வர் ரேணு பாட்டியா புகார் அளித்தி ருந்தார். புகாரின் பேரில் பதிவு செய் யப்பட்ட முதல் தகவல் அறிக்கையின் (எஃப்.ஐ.ஆரின்) அடிப்படையில் அலி கான் மஹ்முதாபாத் கைது செய்யப்பட்டார். பாஜக யுவ மோர்ச்சா பொதுச் செயலாளர் யோகேஷ் ஜாதேதியும் இதே போன்ற குற்றச்சாட்டுகளை கூறி மே 17 அன்று அலி கான் மீது தனியாக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்தார். இரண்டு வழக்குகளில் ஒன்றில் அலி கான் இரண்டு நாட்கள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டார். யோகேஷ் ஜாதேதி தாக்கல் செய்த இரண்டா வது வழக்கில், அலி கான் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் தான் சோனிபட் ராய் காவல் நிலையத்தில் தனக்கு எதி ராகப் பதிவு செய்யப்பட்ட முதல் தக வல் அறிக்கைகளை ரத்து செய்யக் கோரி மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் மூலமாக பேராசிரியர் அலி கான் மனு தாக்கல் செய்தார். இவர் சார்பில் ஆஜரான கபில் சிபல், “முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதைப் போல அலி கானின் சமூக ஊடகப் பதிவுகள் எந்த வகுப்புவாத பதற்றங்களையும் உருவாக்கவில்லை. அவரது சமூக ஊடகப் பதிவு நாட்டின் மீதான பற்றின் வெளிப்பாடு தான்” என வாதிட்டார். அலி கான் போரின் கொடூரங்களை மையமாகக் கொண்டு கருத்து தெரிவித்திருந்தார். மேலும் போர் மூலமாக வகுப்புவாதத்தை தூண்டு வதை விமர்சிக்கும் வகையிலும் பயங்கரவாதத்திற்கு எதிராகவும் ராணுவ வீரர்களின் தியாகத்தைப் போற்றியும் அவர் பதிவுகளை வெளியிட்டிருந்தார். எனினும் பாஜக ஆதரவாளர்கள் இதனை விரும்பாததால் அவரது பதிவுகள் இந்தியாவிற்கே எதிரானது போல சித்தரித்துள்ளனர். அசோகா பல்கலைக்கழக பேரா சிரியர் அலி கான் மஹ்முதாபாத்திற்கு இடைக்கால ஜாமீன் வழங்கிய உச்ச நீதிமன்றம், விசாரணையை நிறுத்த மறுத்தது.