states

எடப்பாடிக்கு அதிமுக அலுவலக சாவி: ஓ.பன்னீர்செல்வம் மனு தள்ளுபடி!

புதுதில்லி, செப்.12- அதிமுக அலுவலக சாவியை எடப்பாடி தரப்புக்கு வழங்கியதற்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கு, உச்சநீதிமன்றத்தில் தள்ளு படி செய்யப்பட்டுள்ளது. அதிமுக அலுவலக சாவியை எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்க உயர்நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார் கடந்த ஜூலை 20-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல் வம் தரப்பினர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தனர். இது தொடர்பான வழக்கு விசார ணை கடந்த மாதம் 18-ஆம் தேதி நடைபெற்றது. அப்போது எடப்பாடி பழனிசாமியிடம் அதிமுக அலுவலக சாவியை ஒப்படைத்தது தவறு என்று ஓபிஎஸ் தரப்பில், வாதிடப்பட்டது. உயர் நீதிமன்றத் தனி நீதிபதியின் தீர்ப்பு க்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம், சாவி விவகாரத்தில் இடைக் காலத் தடை எதையும் விதிக்க மறுத்து விட்டது. அதேநேரம், ஓபிஎஸ் மனு தொடர்பாக, எடப்பாடி பழனிசாமி மற்றும் வருவாய் துறையினர் பதில்  அளிக்க உத்தரவு பிறப்பித்து வழக்கை  ஒத்தி வைத்தது.

இந்நிலையில், 3 வார இடை வெளிக்கு பிறகு அதிமுக அலுவலக சாவி தொடர்பான வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வில் திங்களன்று (செப்.12) பிற்பகல் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, பண விவகாரங்களில் ஓபிஎஸ் கையாடல் செய்துள்ளதால் அவரிடம் அதிமுக அலுவலக சாவியை  ஒப்படைக்கக் கூடாது. மேலும், அவர் அதிமுகவின் அடிப்படை உறுப்பினராக இல்லாத போது சாவியை ஒப்படைக்குமாறு உரிமை கோரவும் முடியாது என்று எடப்பாடி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் அதிமுக அலுவலகத்திற்கு செல்ல தமக்கு உரிமை உண்டு என்றும் ஓபிஎஸ் தரப்பில் வாதம் முன்வைக்கப் பட்டது. விசாரணை முடிவில், அதிமுக அலுவலக சாவி வழக்கில் ஓபிஎஸ் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், சாவி யை எடப்பாடி தரப்புக்கு வழங்கியதை தவறு என்று சொல்ல முடியாது என்றும் தீர்ப்பளித்தனர். முன்னதாக அதிமுக அலுவல கத்தில் நடந்த மோதலுக்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், இபிஎஸ் - ஓபிஎஸ் தரப்பு இடையிலான சண்டை, அண்டை வீட்டுக்காரர்களின் இடையே யான பிரச்சனையல்ல; அவ்வாறிருக்க இருவரும் அடித்துக் கொள்வதா? என்றும் கேள்வி எழுப்பினர்.