தில்லியில், ரயில் விபத்தில் இரண்டு கைகளை இழந்த பெயிண்டர் ஒருவருக்கு மாற்று கைகள் பொருத்தி மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
டெல்லியைச் சேர்ந்த ராஜ்குமார்(45) பெயிண்டராக வேலை பார்த்து வந்தார். கடந்த 2020ம் ஆண்டில் ரயில் விபத்தில் தனது இரண்டு கைகளையும் இழந்தார். பெயிண்டர் தொழிலுக்கு கைகள் தான் மூலதனமானம். ஆனால், கைகளை இழந்த பெயிண்டர் கடந்த நான்கு ஆண்டுகளாக வாழ்வாதாரத்தை இழந்து, வேறு எந்த வேலையும் செய்ய முடியாமல் இருந்து வந்தார்.
இந்நிலையில் , தில்லியில் பள்ளி ஒன்றின் முன்னாள் நிர்வாகத் தலைவரான மீனா மேத்தா என்பவர் மூளைச்சாவு அடைந்துள்ளார். அவர் தனது உடல் உறுப்புகளை தானம் செய்ய ஏற்கெனவே பதிவு செய்திருந்தது தெரிய வந்தது. உறவினர்களின் அனுமதியுடன் மீனா மேத்தாவின் இரு கைகள் அகற்றப்பட்டு, விபத்தில் கைகளை இழந்த பெயிண்டருக்கு பொருத்தி தனியார் மருத்துவமனையின் மருத்துவர்கள் சாதனை புரிந்துள்ளனர்.
அதேபோல் சிறுநீரகம், கல்லீரல் மற்றும் கருவிழிகள் ஆகியவை வெவ்வேறு நோயாளிகளுக்குப் பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் மீனா மேத்தா 4 பேரின் வாழ்க்கையை மாற்றியுள்ளார்.
இந்த உறுப்பு மாற்று அறுவைசிகிச்சையை 11 பேர் கொண்ட மருத்துவ குழுவினர் மேற்கொண்டுள்ளனர். சுமார் 12 மணி நேரத்துக்கும் மேலாக இந்த அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இதில், தமனி, தசை, தசை நாண்கள் மற்றும் நரம்புகளைத் தானமாக அளித்தவருக்கும், அதனைப் பொருத்துபவருக்கும் கைகளில் இணைக்கும் சவாலான சிகிச்சையை மருத்துவர்கள் வெற்றிகரமாக முடித்துள்ளனர்.
இந்த அறுவை சிகிச்சையால் பெயிண்டரின் வாழ்க்கை மீண்டும் ஒளிர்கிறது.