states

img

மேற்கு வங்க தேர்தல் பிரச்சாரத்தில் குடியுரிமை சட்டத் திருத்தம் குறித்து பாஜக ஏன் அடக்கி வாசிக்கிறது?

2019 மக்களவைத் தேர்தல் மேற்கு வங்காளத்தில் பாரதிய ஜனதாவைப் பொறுத்தவரை முக்கியமான
திருப்புமுனையாகவே அமைந்தது. பல ஆண்டுகளாக மாநிலத்தில் சிறு கட்சியாக இருந்து வந்த பாஜக, அந்த
தேர்தலில் தன்னுடைய செயல்திறனை அற்புதமாகக் கையாண்டது. அந்த தேர்தலில் 18 பாராளுமன்ற
உறுப்பினர்களையும், 41 சதவீத வாக்குகளையும் பெற்றதன் மூலம் தானே வங்காளத்தின் பிரதான எதிர்க்கட்சி
என்பதைத் தெளிவுபடுத்தவும் செய்தது.

இனவாத அடையாளத்தை மையமாகக் கொண்ட தீவிரமான பிரச்சாரத்தைப் பயன்படுத்தி, குறிப்பாக குடிமக்கள்
தேசிய பதிவேடு, குடியுரிமை சட்டத் திருத்தம் ஆகியவற்றைப் பயன்படுத்தி மதம் சார்ந்த இந்தியக் குடியுரிமை
குறித்த தனது சிந்தனையை முன்னிறுத்தியதன் மூலமே பாஜ இந்த நிலையை எட்டியது. அதிகம்
பாதிக்கப்படக்கூடியவர்கள் முஸ்லீம்களே என்று உணரும் வகையிலேயே பாஜக மேற்கொண்ட பிரசாரங்கள்
வடிவமைக்கப்பட்டன. வங்கதேசத்தில் இருந்து ஆவணம் எதுவுமின்றி குடியேறியுள்ள ஹிந்துக்கள்
மிகவிரைவிலே குடியுரிமையைப் பெற்று தங்கள் நிலையை சட்டப்பூர்வமாக்கிக் கொள்வார்கள் என்ற
வாக்குறுதியை பாஜக வழங்கியது.

இப்போது கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற உள்ள மாநிலத் தேர்தல்களில் திரிணாமுல்
காங்கிரஸை அதிகாரத்திலிருந்து வெளியேற்றி வெற்றி பெறுவதற்கான ஒருங்கிணைந்த முயற்சியை பாஜக
மேற்கொண்டு வருகிறது. இப்போது அந்த 2019 விளையாட்டுத் தந்திரத்தை மீண்டும் அந்தக் கட்சி செய்ய
முயற்சிக்கவில்லை. கடந்த ஆண்டு குளிர்காலத்தில் இந்தியா முழுவதிலும் உருவான பெரும் ஆர்ப்பாட்டங்கள்
மூலமாக வரவேற்கப்பட்ட குடியுரிமை சட்டத் திருத்தம் போன்ற மிகவும் சர்ச்சைக்குரிய பிரச்சனைகளை
முன்னுக்கு கொண்டு வருவதற்குப் பதிலாக பாஜக இப்போது தனது பிரச்சாரத்தை நேரடியாகவே
தொடங்கியுள்ளது. எதிர்க்கட்சிகளிடமிருந்து கட்சி தாவல், ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஊழல்,
ஆளும் கட்சியினரின் உறவினர்களுக்கு அளிக்கப்பட்ட சலுகைகள் மீது குற்றம் சாட்டுவது என்று நிலையான
அரசியல் உத்திகளைப் பயன்படுத்துவதிலேயே பாஜக இப்போது கவனம் செலுத்தி வருகிறது.
கட்சித் தாவல் மீது கவனம்
2021ஆம் ஆண்டின் முற்பகுதியில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ள
வேளையில், அமித் ஷா மேற்கொண்டுள்ள மேற்கு வங்கப் பயணம் பாஜக அந்த மாநிலத்தை எவ்வாறு
அணுகுகிறது என்பதைச் சுருக்கமாகக் கூறுகிறது.

2020 டிசம்பர் 19 சனிக்கிழமையன்று நடைபெற்ற பேரணியின் போது திரிணாமுல், இந்திய மார்க்சிஸ்ட்
கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸில் இருந்து பகிரங்கமான கட்சித் தாவலைத் தூண்டியது அமித்ஷாவின் இந்தப்
பயணத்தின் முக்கிய அம்சமாக இருந்தது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏக்கள் ஐவர், இந்திய
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸிலிருந்து தலா ஒரு எம்.எல்.ஏ, திரிணாமுல்
எம்.பி ஒருவர் உள்ளிட்டு மொத்தத்தில் 18 முக்கிய மாற்றுக் கட்சித் தலைவர்கள் பாஜகவிற்கு தாவினர்.
ஒருகாலத்தில் மம்தா பானர்ஜியின் முக்கிய தளகர்த்தகர்களில் ஒருவராக இருந்த திரிணாமுல் காங்கிரஸின்
சுவெந்து அதிகாரி பாஜகவிற்கு தாவியவர்களில் மிக முக்கியமானவராக இருந்தார்.
சுவெந்து அதிகாரி 2007ஆம் ஆண்டில் இடது முன்னணி அரசாங்கத்திற்கு எதிராக நந்திகிராமில் நிலம்
கையகப்படுத்துவதற்கு எதிரான போராட்டத்திற்கு தலைமை தாங்கியவர். அந்த இயக்கம் பெரும்பாலும்
போராட்டக்காரர்களுக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தொண்டர்களுக்கும் இடையே வன்முறை மோதல்களை
உருவாக்கி, திரிணாமுல் காங்கிரஸிற்கு முக்கியத்துவத்தைப் பெற்றுத் தந்தது.

கட்சி தாவுபவர்கள் மீது பாஜக கவனம் செலுத்துவது புதியதல்ல. ஒரு காலத்தில் மம்தா பானர்ஜியின்
வலதுகரமாக இருந்த முகுல் ராயை 2017ஆம் ஆண்டு பாஜக தன்னுடன் இணைத்துக் கொண்டது. பாஜகவின்
துணைத் தலைவராக அக்டோபரில் முகுல்ராய் நியமிக்கப்பட்டது, கட்சியின் உயர்மட்டத்தில் இருக்கின்ற
மோடி-ஷா தலைமை கட்சித் தாவலை ஊக்குவிப்பதையே குறிக்கிறது.
கட்சித் தாவலைத் தவிர, ​​ தனது இரண்டு நாள் பயணத்தின்போது திரிணாமுல் காங்கிரஸின் ஊழல், மாநிலத்தின்
வளர்ச்சியில் உள்ள போதாமை, கட்சியில் உண்மையான #2 ஆக தனது மருமகன் அபிஷேக்கையே மம்தா
பானர்ஜி ஆதரிப்பார் என்று ஆளும் கட்சியில் உறவினர்களுக்குத் தரப்படுகின்ற சலுகைகள் ஆகியவற்றின் மீது
அமித்ஷா கவனம் செலுத்தினார்.

காணாமல் போன குடியுரிமை சட்டத் திருத்தம்

இவை இந்திய அரசியலில் எப்போதும் இருந்து வருகின்ற உத்தியாகவே இருந்தாலும், பாஜகவின் அதிகார
பலத்தால் அவை இப்போது அதிகரித்துள்ளன. ஆயினும் தன்னுடைய பிரச்சாரத்தில் குடியுரிமை சட்டத்
திருத்தத்தைப் பற்றி குறிப்பிடாததன் மூலம், தன்னுடைய 2019 மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தில் பெரிய
அளவிலான மாற்றத்தை அமித்ஷா இப்போது கொண்டு வந்துள்ளார்.

மிகுந்த பரபரப்புக்கு மத்தியில் ஓராண்டிற்கு முன்னரே குடியுரிமை சட்டத் திருத்தம் நிறைவேற்றப்பட்டு விட்ட
போதிலும், மோடி அரசாங்கம் இதுவரையிலும் அதைச் செயல்படுத்த வேண்டாம் என்றே முடிவு
செய்திருக்கிறது. மத்திய அரசால் இன்னும் அந்தச் சட்டத்திற்கான விதிகள் - சட்டம் எவ்வாறு
செயல்படுத்தப்படும் என்பதற்கான வழிகாட்டுதல்கள் - வெளியிடப்படவில்லை.

வங்கதேசத்தைச் சேர்ந்த ஹிந்துக்களுக்கான மாமருந்தாக இந்தச் சட்டத் திருத்தத்தை உருவாக்கிய பின்னர்,
பாஜகவிடம் இருந்து வருகின்ற நீண்ட தாமதம் மேற்குவங்கத்தில் அவர்களுடைய கட்சியின் சொந்த
அணிகளுக்குள்ளேயே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பாஜக எம்.பி.யும், வங்கதேச வம்சாவளியைச் சேர்ந்த
தலித்துகள் பின்பற்றி வருகின்ற மதப்பிரிவான மதுவா பிரிவைச் சார்ந்தவருமான சாந்தனு தாக்கூர், ஏற்கனவே
இந்த தாமதம் குறித்த தனது அதிருப்தியை பகிரங்கமாக வெளிப்படுத்தியுள்ளார்.
திருத்தங்களை அமல்படுத்துவதற்குப் பதிலாக, குடியுரிமை சட்டத் திருத்தப் பிரச்சனையை புறக்கணிக்கவே
அமித்ஷா முடிவு செய்திருக்கிறார். மதுவா பிரிவினரின் கோட்டையாக விளங்குகின்ற தாகூர்நகருக்கு அவரது
வருகை ரத்து செய்யப்பட்டது. தனது உரைகளில் இந்த சட்டத்தை உள்துறை அமைச்சர் குறிப்பிடவே இல்லை.
ஆயினும் ஞாயிற்றுக்கிழமை நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் அதுகுறித்து கேட்கப்பட்டபோது, ‘தடுப்பூசிகள்
கிடைக்கத் தொடங்கி, நம்மால் கொரோனாவை எதிர்கொள்ள முடிந்த பிறகே குடியுரிமைச் சட்டத் திருத்த
விதிகளைப் பற்றி சிந்திப்போம்’ என்று அமித்ஷா கூறியதிலிருந்து குடுயிரிமை சட்டத் திருத்த விதிகள்
வருவதற்கு இன்னும் சில காலம் ஆகலாம் என்பது தெரிய வருகிறது. 2019ஆம் ஆண்டில் மேற்குவங்கத்தில்
பிரச்சாரம் செய்யும் போது அமித்ஷா அடிக்கடி குறிப்பிட்ட தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி) எப்போது
நடைமுறைப்படுத்தப்படும் என்ற கேள்விக்கு அமித்ஷா பதிலளிக்க மறுத்து விட்டார்.
திரிணாமுல் காங்கிரஸின் கவனம்
குடியுரிமை சட்டத் திருத்தம் - தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றை பாஜக தன்னுடைய பிரச்சாரத்தில்
தவிர்த்தற்கு மாறாக, திரிணாமுல் காங்கிரஸ் அந்தப் பிரச்சனையை முன்னுக்குக் கொண்டு வருவதிலே ஆர்வம்
காட்டி வருகிறது. அரசியல் பேரணிகளில் மம்தா பானர்ஜி அந்தப் பிரச்சினையை முன்வைத்துப் பேசி வருகிறார்.
குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கான தேவையை அவர் மறுக்கிறார். ஏற்கனவே இந்தியக் குடியுரிமையைப்
பெற்றிருக்கின்ற வங்கதேச வம்சாவளியைச் சேர்ந்த ஹிந்துக்கள் பெரும்பாலானோர் மீண்டும் புதிதாக
குடியுரிமைக்காக விண்ணப்பிக்க வேண்டியிருக்கும் என்று மேற்குவங்க முதல்வர் குற்றம் சுமத்துகிறார்.

பாஜகவிடம் இருக்கின்ற இந்த சஞ்சலம், பாஜகவை நோக்கி வலுவான ஹிந்து அடையாளத்துடன் நகர்ந்திருந்த
பெரும்பாலான மதுவா வாக்குகளை வென்றெடுப்பதற்கான வாய்ப்பை திரிணாமூலுக்கு வழங்கியுள்ளது.

குடியுரிமை சட்டத் திருத்தத்தை நடைமுறைக்கு கொண்டு வருவதற்கான பாஜகவின் திட்டங்கள் சிக்கலுக்குள்
சிக்கியிருப்பது இது முதல் முறை அல்ல. ஆவணங்கள் எதுவுமின்றி புலம்பெயர்ந்து வந்தவர்களுக்கு குடியுரிமை
வழங்குவதற்கான இந்தச் சட்டத் திருத்தம் அமல்படுத்தப்பட்டால், சில ஆண்டுகளுக்குள் ஏற்படப் போகின்ற பல
சிக்கல்களை பார்வையாளர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். ஆனால் அதே சமயத்தில் மதம் அல்லது
பிறப்பிடத்திற்கான சான்றுகளை அளித்தல் போன்று எந்தவொரு நிபந்தனையுமின்றி குடியுரிமைக்கான
செயல்முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று மதுவாக்கள் போன்ற வங்கதேச வம்சாவளியைச் சேர்ந்த
ஹிந்துக்கள் தொடர்ந்து கோரி வருகின்றனர்.
சட்டமன்றத் தேர்தல்களுக்கு முன்னதாக, இறுதி நிமிடத்தில் குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கான விதிகளை
வெளியிடுவதன் மூலம், குடியுரிமை சட்டத் திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கான வாக்குறுதியை தாங்கள்
நிறைவேற்றி விட்டதாகக் கூறி பாஜக தன்னுடைய நிலைமையை காப்பாற்றிக் கொள்ளக்கூடும். ஆயினும்,
மேற்குவங்க பாஜகவின் நிலைப்பாடை ஒட்டியதாக அமித்ஷாவின் டிசம்பர் பயணம் இருந்திருக்கும் என்றால்,
மிகவும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள அவர்களுடைய குடியுரிமை சட்டத் திருத்த உத்தி ஹிந்துத்துவாவை
நோக்கிச் சென்றிருந்த சில குழுக்களை மீண்டும் திரும்பப் பெறுவதற்கு திரிணாமுலுக்கு நல்லதொரு வாய்ப்பை
ஏற்படுத்திக் கொடுப்பதாகவே இருக்கப் போவது உண்மை.

-சோயிப் டானியல்

https://scroll.in/article/981844/why-is-bjp-downplaying-caa-as-election-campaigning-kicks-off-in-bengal
நன்றி: ஸ்க்ரோல் இணைய இதழ்
தமிழில்:தா. சந்திரகுரு

;