கொழும்பு,மே.12- சவூதி அரசர் சல்மானின் மனிதாபிமான உதவி மற்றும் நிவாரண மையத்தின் மூலம் இலங்கையில் உள்ள 1,000 பேருக்கு பார்வை திறனை மீட்டெடுக்க சவூதி நாட்டின் கண் அறுவை சிகிச்சை நிபுணர் குழு உதவி வருகிறது. மக்களின் பார்வைத்திறன் பாதிப்பை எதிர்த்துப் போராடுவதற்கான சவூதி மன்னரின் இந்த தன்னார்வத் திட்டம் மே 5 அன்று இலங்கையின் கிழக்குக் கடற்கரையில் உள்ள காத்தான்குடி நகரில் துவங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. கண்புரை நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு பார்வைத் திறன் பறி போவதை தடுக்கும் சிறப்புத் திட்டமாக இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது என இந்த திட்டத்தின் பங்குதாரராக உள்ள முஸ்லிம் இளைஞர் அமைப்பின் தலைமை இயக்குனர் தாசிம் அரபு தெரிவித்துள்ளார். இந்த திட்டத்தின் மூலம் 1,000 நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை அளிக்க திட்டமிடப்பட்டு 500 நபர்களுக்கான அறுவை சிகிச்சை முடிவடைந்துள்ளது. இன்னும் 500 நபர்களுக்கான அறுவை சிகிச்சை மே 16 க்குள் செய்து முடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் அதிகளவு மக்கள் பார்வை இழப்பதற்கு கண்புரை பிரச்சனை பொதுவான காரணமாக உள்ளது. எனவே கண்புரையை அகற்ற அறுவை சிகிச்சை பொதுவான மருத்துவ சேவையாக உருவெடுத்துள்ளது. எனினும் அரசு சேவைத் திட்டங்களுக்கு பல ஆண்டுகள் காத்திருக்க வேண்டிய சூழல் இருப்பதோடு தனியார் மருத்துவமனைகளில் குறைந்த பட்சம் 300 அமெரிக்க டாலர்கள் வரை செலவாகிறது. ஏழை மக்கள் அதிகமாக இருக்கும் நாடாகவும் மோசமான பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ள நாடாகவும் இருக்கும் சூழலில் இலங்கை குடிமக்களுக்கு கண்புரை அறுவை சிகிச்சை விலை உயர்ந்த மருத்துவ சேவையாகவே உள்ளது. குறிப்பாக 40 வயதிற்கு மேற்பட்ட ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரிடையே கண்புரை ஒரு பிரச்சனையாகி வரும் சூழலில் அந்நாட்டில் இது பெரிய பிரச்சனையாக உருவாகியுள்ளது. இந்நிலையில் தான் சவூதி அரசரின் நிவாரண மையத்தின் உதவியுடன் இலவசமாக கண்புரை அறுவை சிகிச்சை செய்வதுடன், அறுவை சிகிச்சைக்குப் பிறகான சிகிச்சையையும் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்குகிறது இலங்கை. சவுதி தன்னார்வலர்களில் ஒருவரான கிங் சவுத் பல்கலைக் கழக மருத்துவ கண் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் இஹாப் அல்-சிர்ஹி, இந்த சிகிச்சைக்கு தலைமை வகித்து செய்து வருகிகிறார். அவர் செய்தியாளர் சந்திப்பில் பேசும் போது, மிக குறுகிய காலத்தில் இவ்வளவு எண்ணிக்கையில் கண்புரை அறுவை சிகிச்சை செய்வது பாராட்டத்தக்க ஒன்றுதான். மேலும் இந்த அறுவை சிகிச்சைக்காக உள்ளூர் மருத்துவர்களின் ஒத்துழைப்பு பெரிதும் கைகொடுத்தது என்றார்.