states

img

சூப்பர் ஸ்டாரா மோடி அரசு?

உலகின் பொருளாதார சூப்பர் ஸ்டாராக இந்தி யாவை மாற்றிவிட்டோம் என்று மோடியும், அவரது ஊது குழல்களும் இடைவிடாத பிரச்சாரம் செய்கிறார்கள். ஆனால், சர்வதேச நிதி நிறுவனம், உலக நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) வளர்ச்சியைப் பற்றி வெளியிட்டுள்ள தரவுகள், மோடியின் இந்த பிரச்சாரத்தை நொறுக்குகின்றன.  உலக அளவில் இந்தியா பொருளாதாரத்தில் அமெரிக்காவை விடவும், சீனாவை விடவும் வெகுவிரை விலேயே பிரகாசமாக முன்னேறி விடும் என்று கூறுவது முற்றிலும் மிகைப்படுத்தப்பட்ட ஒன்றே என, சர்வதேச நிதி நிறுவனத்தின் விபரங்களை வெளியிட்டு டெக்கான் ஹெரால்டு செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார். 

2022 இல் ஒட்டுமொத்த உலகின் ஜிடிபி 100 டிரில்லி யன் டாலரை எட்டியுள்ளதாக குறிப்பிட்டுள்ள சர்வதேச நிதி நிறுவனத்தின் அறிக்கை, இதில் 2019 இல் அமெரிக்காவின் ஜிடிபி 21.38 டிரில்லியன் டாலராகவும், சீனாவின் ஜிடிபி 14.34 டிரில்லியன் டாலராகவும் இருந்தது என்பதை குறிப்பிட்டு, இந்தியாவின் ஜிடிபி வெறும் 2.84 டிரில்லியன் டாலராகவே இருந்தது என்பதை சுட்டிக்காட்டியுள்ளது. 2022 இல் கோவிட் பாதிப்புகளுக்கு பிறகும், அமெரிக்க ஜிடிபி 25.46 டிரில்லியன் டாலராகவும், சீனாவின் ஜிடிபி 18.1 டிரில்லி யன் டாலராகவும் அதிகரித்தது என்பதையும் சுட்டிக் காட்டியுள்ள அந்த அறிக்கை, தற்போது அந்த நாடுகளின் ஜிடிபி வளர்ச்சி விகிதத்துடன் ஒப்பிடும் போது, இந்தியா 2022 இல் மிகக் குறைவான வளர்ச்சி யை எட்டி, அதன் ஜிடிபி வெறும் 3.39 டிரில்லியன்  டாலராகவே பதிவாகியுள்ளது எனவும் சுட்டிக்காட்டி யுள்ளது. 

எனவே உலகப் பொருளாதாரத்தில் தற்போதைய நிலையில், அமெரிக்க பொருளாதாரத்தையோ, சீனப் பொருளாதாரத்தையோ எந்த விகிதத்திலும் எட்டிப்பிடிக்கும் நிலையில் இந்தியா இல்லை. ஆனால் இந்த உண்மைக்கு மாறாக, மோடி அரசு வெறும் வாய் ஜாலம் காட்டி வருகிறது. இந்திய மக்களை இப்படி தவறாக வழிநடத்துவது தான் மோடி மற்றும் ஊது குழல்களின் வாடிக்கை.

;