புதுதில்லி, அக். 12 - இந்தியா பொருளாதார வளர்ச்சி 2022 மற்றும் 2023 ஆகிய ஆண்டுகளில் எதிர்பார்த்ததை விடக் குறை வாகவே இருக்கும் என சர்வதேச நாணய நிதியம் (International Monetary Fund - IMF) கணித்துள்ளது. உலகின் 5-ஆவது மிகப்பெரிய பொருளாதார நாடாக திகழும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 2021-22 நிதியாண்டில் (ஏப்ரல் 2021 முதல் மார்ச் 2022 வரை) 8.7 சதவிகிதமாக இருந்தது. இந்நிலையில், அது நடப்பு 2022ஆம் ஆண்டில் 6.8 சதவிகிதமாக குறையும்; 2023-ஆம் ஆண்டில் இது 6.1 சதவிகிதமாக மேலும் சரியும் என சர்வதேச நாணய நிதியம் கணித்துள்ளது. 2022-ஆம் ஆண்டில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி (Gross Domestic Product - GDP) விகிதம் 7.4 சதவிகிதமாக இருக்கும் என்று கடந்த ஜூலை மாதத்தில் ஐஎம்எப் கணித்திருந்தது.
தற்போது அதனை 6.8 சதவிகிதமாக குறைத்துள்ள ஐஎம்எப், 2-ஆவது காலாண்டில் வளர்ச்சி விகிதம் எதிர்பார்த்ததை விட குறைந்ததே இதற்கு காரணம் என தெரிவித்துள்ளது. முன்னதாக 2022 ஜனவரியில் வெளியிட்ட கணிப்பில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 8.2 சதவிகித மாக இருக்கும் என ஐஎம்எப் கூறியிருந்தது குறிப்பிடத் தக்கது. இந்தியா மட்டுமன்றி உலக நாடுகள் பலவும் இந்தாண்டு வளர்ச்சியில் சரிவைச் சந்திக்கும் என்று குறிப்பிட்டுள்ள ஐஎம்எப், இந்தாண்டு உலக ஜிடிபி 3.2 சதவிகிதமாகவே இருக்கும்; இதுவும், அடுத்த 2023-ஆம் ஆண்டில் 2.7 சதவிகிதமாக குறையும் என்று தெரிவித்துள்ளது. இது கடந்த ஜூலை மாதம் வெளியிட்ட கணிப்பைக் காட்டிலும் 0.2 சதவிகிதம் குறைவாகும். கடந்த 2001ஆம் ஆண்டிற்குப் பின்னர் உலகப் பொருளாதாரம் இந்தளவுக்குப் பலவீனமாக இருப்பது இதுவே முதல்முறையாகும். அதேபோல சர்வதேச பணவீக்கமும், இந்த ஆண்டு அதிகபட்சமாக 9.5 சதவிகிதத்தை எட்டும் என்று ஐஎம்எப் கணித்துள்ளது. இது 2024-ஆம் ஆண்டு வாக்கி லேயே, 4.1 சதவிகிதம் என்ற அளவிற்கு குறைய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.