states

வங்கிகள் தனியார் மயத்தைக் கண்டித்து வேலைநிறுத்தம்

புதுதில்லி, டிச. 17- பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்குவதற்கு எதிராக தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் ஊழியர்கள் டிசம்பர் 16, 17 தேதிக ளில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள் ளார்கள்.  மக்களவை தன் நிகழ்ச்சிநிரலை ஒதுக்கிவைத்துவிட்டு, இவர்களின் கோரிக்கை குறித்து விவாதித்திட வேண்டும் என்பதற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்களவைக் குழுத் தலைவர் பி.ஆர். நடராஜன், மக்க ளவை சபாநாயகரிடம் ஓர் ஒத்தி வைப்புத் தீர்மானத்திற்கான நோட்டீஸ் கொடுத்துள்ளார். பொதுத்துறை வங்கிகளைத் தனியாரிடம் தாரைவார்ப்பதற்கு வசதி  செய்துதரும் விதத்தில் ஒன்றிய அரசாங்கம் ஒரு சட்டமுன்வடிவைக் கொண்டுவரவிருக்கிறது. இதனை நன்குணர்ந்த வங்கி ஊழியர்கள், வங்கி ஊழியர்களின் ஒன்றுபட்ட அமைப்பின் மூலமாக வியாழன் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் நாடு முழுவதும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.

இத னால் நாட்டிலுள்ள 1 லட்சத்து 18 ஆயிரம் வங்கிகளில் பணியாற்றும் ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டி ருக்கிறார்கள். கடந்த மூன்றாண்டுகளில் மட்டும் மோடி அரசாங்கம் தனியார் கார்ப்ப ரேட்டுகள் வாங்கிய கடன்களை சுமார் 4 லட்சத்து 90 ஆயிரத்து 972 கோடி ரூபாயைத் தள்ளுபடி செய்துவிட்டது. இவ்வாறு தள்ளுபடி செய்த கார்ப்பரேட்டுகளிடமே ஒட்டுமொத்த வங்கிகளையும் ஒப்படைத்திட இப்போது சட்டமுன்வடிவினைக் கொண்டுவந்து நிறைவேற்றத் துடித்துக் கொண்டிருக்கிறது. அதனால்தான் வங்கி ஊழியர்கள் இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளார்கள். எனவே இது குறித்து விவாதித்திட வேண்டும் என்று பி.ஆர். நடராஜன் ஒத்திவைப்புத் தீர்மானம் கொடுத்தி ருக்கிறார்.  (ந.நி.)

;