states

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல்

புதுதில்லி, ஏப்.22- ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ராணுவ வாகனம் ஒன்றை பயங்கரவாதிகள் தாக்கி அதில் வந்த ராணுவத்தினர் ஐந்து பேர் கொல்லப்பட்டிருக்கின்றனர். இந்த சம்பவத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடுமையாகக் கண்டித்துள்ளது. இது தொடர்பாக கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ராஜௌரி பகுதியில் பீம்பர் காலி மற்றும் பூஞ்ச் ஆகிய பகுதிகளுக்கு இடையே சென்று கொண்டிருந்த ராணுவ வாகனம் ஒன்றின் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் தொடுத்து, அதன் காரணமாக வாகனத்தில் சென்ற ராணுவத்தினர் ஐந்து பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு கடும் கண்டனம் தெரிவித்துக்கொள்கிறது. பயங்கரவாதம் எந்த ரூபத்திலிருந்தாலும் அதனை எதிர்த்து முறியடிக்க வேண்டும் என்பதில் எவ்விதமான சமரசமும் செய்து கொள்ள முடியாது. எதிர்காலத்தில் பயங்கரவாதத்தை சிறந்தமுறையில் கட்டுப்படுத்திட நடவடிக்கைகள் எடுப்பதற்கு உதவிடும் விதத்தில், இப்போது ஏற்பட்டுள்ள பயங்கரவாதிகளின் இந்தக் கொடூரமான தாக்குதல் ஏற்பட்ட சூழ்நிலையை அடையாளம் கண்டிட முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும். இவ்வாறு அரசியல் தலைமைக்குழு அறிக்கையில் கோரியுள்ளது. (ந.நி.)