இயற்கையினை பாடலாம் என- நான்
காடு ஏகினேன்!
மரநிழலை மூட்டைகட்டிவர -ஒரு
பையை வாங்கினேன்!
காதம்பல கடந்தேன்என் கால்கள் கடுக்கும்.
காடுகாண் காதை கேள் என் கவிதை விளக்கும்!
(இயற்கையினை)
பாறைமேல் அமர்ந்திருந்தது ஒரு பறவை.
பக்கம் சென்று தெரிவித்தேன் என் வரவை!
காடு எங்கே சொல்வாய்?
கானகத்தின் பிள்ளாய்!
கேட்டேன் செவிமடுத்தது குருவி
கண்ணில் வடித்தது நீர்அருவி!
உடனே அதுபறந்து,
சிறகால் என்னை அறைந்து போனது மறைந்து!
(இயற்கையினை)
மனிதர்கள் வெட்டுண்டு இடுப்புவரை
மட்டுமே நிற்பதுபோல் மரங்கள் நிலை
காணுகின்ற கோரம்
அறிந்ததுண்டோ யாரும்?
காட்டினை காணும் எனது பயணம்
கடைசி யில் கண்டதந்த துயரம்!
காடா இடுகாடா?
மரங்களின் புதைமேடா? கண்டேன் தோழா!
(இயற்கையினை)
கல்லறை மேடைகூட நிழல் கொடுக்கும்!
காட்டிலந்த நிழலுமேது வெயில் எரிக்கும்!
மரங்களின்ம யானம்
எனதுகண்கள் காணும்.
கன்னத்தில்என் கண்ணீர் வழியும் முன்னே
காட்டின்சூட்டில் ஆவி ஆச்சு அண்ணே!
இதுவா மரவனமே?
இ (ல்)லைஇது திரிபுரமே!மடிந்ததென் மனமே!
இயற்கையினை பாடலாம் என -நான்
காடு ஏகினேன்!
மரநிழலை மூட்டை கட்டிவர- ஒரு
பையை வாங்கினேன்!- வெறும்
கையாய் திரும்பினேன்!
காலநிலை மாற்ற மாநாடு (துபாய் நவ.30 - டிச.12 )நிகழ்வையொட்டி...