நல்ல அமைச்சர் என பெயர் எடுக்க வேண்டும்: டி.ஆர்.பாலு
சென்னை, மே 11- முன்னாள் ஒன்றிய அமைச்சரும் திமுக பொருளாளருமான டி.ஆர்.பாலு வின் மகன் டி.ஆர்.பி.ராஜா தமிழ்நாடு அமைச்சராக பதவி ஏற்றுக் கொண்டார். இது குறித்து டி.ஆர்.பாலு கூறுகையில், “முதலமைச்சரின் எதிர் பார்ப்புகளை மிக சிறப்பாக நிறை வேற்ற வேண்டும் என்ற வகையில் நல்ல அமைச்சர் என்ற பெயரை டி.ஆர்.பி.ராஜா எடுக்க வேண்டும் என்பது தான் எனது வேண்டுகோள்” என்றார். அவரிடம் பூண்டி கலைவாணன் உள்ளிட்ட சிலர் அதிருப்தியில் இருப்ப தாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த டி.ஆர்.்பாலு அவர் எங்கள் மாவட்டச் செயலாளர். டி.ஆர்.பி. ராஜா அமைச்சர் ஆவதற்கு அவரும் ஒரு காரணம்”என்றார்.
வேலைக்காக 66 லட்சம் பேர் காத்திருப்பு
சென்னை, மே 11- தமிழ்நாடு அரசு வெளியிடப் பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப் பதாவது:- கடந்த ஏப்ரல் 30 ஆம் தேதி நில வரப்படி, தமிழ்நாட்டில் வேலை வாய்ப்பு அலுவலகப் பதிவுதாரர்களின் ஒட்டு மொத்த எண்ணிக்கை 66 லட்சத்து 85 ஆயிரத்து 537 ஆகும். இதில், ஆண்கள் 31 லட்சத்து 7 ஆயிரத்து 600 பேர், பெண்கள் 35 லட்சத்து 77 ஆயிரத்து 671 பேர் மாற்றுப் பாலினத்தவர் 266 பேர். வயது வாரியாகவும் வேலை வாய்ப்பு அலுவலகப் பதிவுதாரர்கள் பிரிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 18 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள் 17 லட்சத்து 65 ஆயிரத்து 888 பேர். 19 முதல் 30 வயதுக்கு உட்பட்ட கல்லூரி மாணவர் கள் 28 லட்சத்து 43 ஆயிரத்து 792 பேராகும். 31 முதல் 45 வயது வரை உள்ளவர்கள் 18 லட்சத்து 32 ஆயிரத்து 990 பேர். 46 வயது முதல் 60 வயது வரை உள்ளவர்கள் 2 லட்சத்து 36 ஆயிரத்து 756 பேர். 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 6 ஆயிரத்து 111 பேர் உள்ளனர். இந்நிலையில், 12 மற்றும் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் காரணமாக வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்வோர் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட் டுள்ளது.
மாற்றுத் திறனாளிக்கு பணி ஆணை
சென்னை, மே 11- பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, வரகுபாடி கிராமத்தைச் சேர்ந்தவர் பாப்பாத்தி. பார்வையற்ற மாற்றுத் திறனாளியான இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. இவர்மாற்றுத் திறனாளிகளுக்கான சர்வதேச மற்றும் தேசிய அளவிலான பாரா விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை வென்றுள்ளார். இந்நிலையில், விளையாட்டுத் துறைஅமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்த பாப்பாத்தி, தனது குடும்பம் மிகவும் வறுமை நிலையில் இருப்பதாகவும், தனக்கு வேலை வாய்ப்பு வழங்கும்படியும் கோரிக்கை விடுத்தார். இந்த கோரிக்கையைப் பரி சீலித்து பாப்பாத்திக்கு பணி ஆணையை வழங்கினார்.
‘வீட்டு வேலையில் ஈடுபடும் பெண்களுக்கு தனிச் சட்டம் இயற்ற வேண்டும்’
சென்னை, மே 11- வீட்டுவேலை செய்யும் பெண் தொழிலாளர்களுக்கு தமிழ்நாட்டில் தனிச் சட்டம் வேண்டும் என்று மாநில மகளிர் ஆணைய தலைவர் எஸ்.ஏ. குமாரி தெரிவித்தார். தமிழ்நாடு மாநில மகளிர் ஆணை யம் மற்றும் தமிழ்நாடு வீட்டுவேலை தொழிலாளர் நல அறக்கட்டளை இணைந்து, வீட்டு வேலை செய்யும் பெண் தொழிலாளர்களுக்கான மாநில அளவிலான மாநாடு சென்னை தி.நகரில் நடத்தியது. இதில் உரையாற்றிய மாநில மகளிர் ஆணைய தலைவர் எஸ்.ஏ. குமாரி, “வீட்டு வேலை செய்கிற பெண் தொழிலாளிக்கு பல மணி நேரம் வேலை செய்தாலும், நியாயமான ஊதியம் கிடைப்பதில்லை. உயர்ந்து வரும் விலைவாசியில் அன்றாடத் தேவைகளை நிறைவேற்ற முடி யாமல் தவிக்கின்றனர். இதனால் பலர் குழந்தைகளின் கல்வி மற்றும் மருத்துவ தேவைகளுக்காக கந்து வட்டிக்கு கடன் வாங்கி கடனாளியாகி விட்டனர். நாட்டில் இவர் களைப் பாதுகாக்க சரியான சட்டங்கள் இல்லை. பலவிதமான துன்புறுத்தல்களுக்கு ஆளாக்கப் படுகிறார்கள். இவர்களுக்கென தனி சட்டங்கள் இருந்தால், இவர்களைப் பாதுகாக்க முடியும்”என்றார். தமிழ்நாட்டில் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட பெண்கள் வீட்டு வேலை செய்து வருகிறார்கள். 2007 ஆம் ஆண்டு தனி வாரியம் அமைக்கப் பட்டது. இதுவரைக்கும் வார விடு முறை, ஊதிய உயர்வு கிடையாது. வீட்டு வேலை தொழிலாளர் நல வாரியத்துக்கென தனிகுழு அமைக் கப்படவில்லை. ஒரு மணிநேரத்துக்கு தற்போது இருக்கும் குறைந்தபட்ச ஊதியத்தை ரூ.100 என உயர்த்த வேண்டும். வீட்டுவேலை தொழி லாளர் நலவாரியம் சிறப்பாக செயல் பட, வீட்டுவரியில் இருந்து ஒரு விழுக்காடு நிதியை தமிழ்நாடு அரசு ஒதுக்கீடு செய்ய வேண்டும். தொழி லாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வழிவகை செய்ய வேண்டும் என்றும் இம் மாநாட்டில் கோரிக்கை விடுத்தனர்.
இஸ்ரேல் அட்டூழியம் ஐ.நா.கண்டனம்
நியூயார்க், மே 11- பாலஸ்தீனப்பகுதிகள் மீது சட்டவிரோதமான தாக்குதல்களைத் தொடர்ந்து நடத்தி அப்பாவிகளை கொன்று வரும் இஸ்ரேலின் நடவடிக்கைகளுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இரண்டு நாட்களுக்கு முன்பாக, காசாத் திட்டுப் பகுதிக்குள் நுழைந்த இஸ்ரேலிய போர் விமானங்கள் 48 மணி நேரம் தாக்குதல்கள் நடத்தின. இதில் குறைந்தது 21 பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டார்கள். 64க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். மேற்குக் கரைப்பகுதியில் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளையும், கொலை வெறித் தாக்குதல்களையும் நடத்தி வரும் இஸ்ரேல் தற்போது தனது கவனத்தை ஹமாஸ் கட்டுப்பாட்டில் இருக்கும் காசாத்திட்டுப் பகுதிக்குத் திருப்பியுள்ளது. இந்தத் தாக்குதல்களை ஐ.நா.பொதுச் செயலாளர் குட்டெரெஸ் கடுமையாகக் கண்டித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “குழந்தைகள் மற்றும் பெண்கள் உள்ளிட்ட அப்பாவி மக்களின் உயிரிழப்பு கடும் கண்டனத்துக்குரியது. எந்தவகையிலும் இத்தகைய கொலைகளை ஏற்றுக் கொள்ள முடியாது. இத்தகைய கொலைகளுக்குக் காரணமான தாக்குதல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்” என்று கோரியிருக்கிறார். ராணுவ நடவடிக்கைகளின்போது பொது மக்களின் பாதுகாப்புக்காக உச்சபட்ச எச்சரிக்கைகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும், சர்வதேச மனிதாபிமானச் சட்டத்தின் அம்சங்களைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் ஐக்கிய நாடுகள் சபை இஸ்ரேலை வலியுறுத்தியிருக்கிறது. தற்போது எழுந்துள்ள மோதலில் தொடர்புடைய அனைவரும் பொறுமையைக் கடைப்பிடித்து, மோதல்களை நிறுத்துவதற்கான முயற்சிகளில் ஈடுபட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.
உலகச் செய்திகள்
சீனாவில் இருந்து அத்தியாவசிய மருந்துப் பொருட்கள் பஹாமாஸ் நாட்டிற்கு நன்கொடையாக அனுப்பப்பட்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக, மருத்துவ வசதிகள் மிகவும் குறைவாக இருக்கக்கூடிய வடகோடி பஹாமாத் தீவு ஒன்றிற்கு இதை வழங்கியுள்ளனர். சீனாவின் ஹுனான் மாகாணத்திற்கும், இந்தத் தீவுக்கும் இடையிலான உறவு பல்வேறு துறைகளுக்கும் விரிவடைந்துள்ளது என்று மருந்துகளை வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற பஹாமாசுக்கான சீனத் தூதர் டாய் கிங்லி தெரிவித்தார்.
கனடாவின் மேற்குப் பகுதி மாகாணமான ஆல்பெர்ட்டாவில் பெரும் அளவில் பரவிய காட்டுத்தீயால் பத்து லட்சம் ஏக்கருக்கும் மேற்பட்ட பகுதிகள் தீக்கிரையாகின. 30 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டிருக் கிறார்கள். அவசர நிலை பிறப்பிக்கப்பட்டதால் கச்சா எண்ணெய் உற்பத்தியை நிறுத்திவிட்டனர். கிட்டத்தட்ட 1 லட்சத்து 45 ஆயிரம் பீப்பாய்கள் எண்ணெய் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
வரலாறு காணாத அளவிலான விற்பனை என்றாலும், தங்களின் நிகர லாபத்தில் 14 விழுக்காடு சரிவு ஏற்பட்டுள்ளது என்று ஜப்பானின் முன்னணி நிறுவனமான டொயோட்டா மோட்டார்ஸ் அறிவித்திருக்கிறது. ஏப்ரல் 2022 முதல் மார்ச் 2022 வரையிலான காலகட்டத்தில் 37 லட்சத்து 15 ஆயிரம் யென் மதிப்பிலான விற்பனை இருந்தது. இது முந்தைய ஆண்டை விட 18.4 விழுக்காடு அதிக விற்பனையாகும். ஆனால், மூலப் பொருட்கள் விலை உயர்வால் லாபம் சரிந்துள்ளது என்று நிறுவனம் கூறியிருக்கிறது.