ஐம்பதாண்டு கால ‘செம்மலர்’ மாத இதழ்கள் அனைத்தும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு, அனைவரும் எளிதில் பதிவிறக்கம் செய்து, பயன்படுத்தக்
கூடிய வகையில் தெற்காசிய திறந்த மின்னணு ஆவணக்காப்பகத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்த மாபெரும் பணியை சென்னையில் உள்ள ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் மேற்கொண்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில கருவூலம் இந்தப் பணிகளை ஒருங்கிணைத்தது.
1970 மே முதல் 2022 வரையிலான 587 செம்மலர் இதழ்கள், இனி டிஜிட்டல்
வடிவில் இணையத்தில் படிக்கவும், ஆய்வுகளுக்காகவும் கிடைக்கும்.
https://www.jstor.org/site/south-asia-open-archives/saoa/cemmalar-34788153/ என்ற இணைய சுட்டியில் செம்மலர் இதழ்களைக் காணலாம்; பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்.
ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம், தமிழகத்தின் பல்வேறு துறைகளில் ஆவணங்களை டிஜிட்டல் வடிவத்திற்கு மாற்றிப் பாதுகாத்து, ஆய்வுப் பயன்பாட்டிற்குக் கொண்டுவரும் மகத்தான பணியை கடந்த 30 ஆண்டு காலமாக
மேற்கொண்டு வருகிறது. ஏற்கெனவே இந்த நூலகத்தின் உதவியுடன் தீக்கதிர் நாளிதழின் முதல் இதழான 1963 ஜூன் 29 இதழ் தொடங்கி 1977 வரையிலான இதழ்கள் டிஜிட்டல்மயமாக்கப்பட்டுள்ளன.
சமீபத்தில் சி.பி.ஐ(எம்) கருவூலம் முயற்சியில், ரோஜா முத்தையா நூலகத்துடன் இணைந்து ‘மார்க்சிஸ்ட்’ தத்துவ மாத இதழ்கள் ஆவணப்படுத்தப்பட்டு, தெற்காசிய திறந்த மின்னணு காப்பகத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
இந்த விபரங்களை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு அலுவலக செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.