states

12 லட்சம் மக்கள் இருப்பிடமின்றி தவிப்பு

கார்டோம், ஜூன் 5- சூடானில் நடைபெற்று வரும் உள்நாட்டுச் சண்டையால் 12 லட்சம் மக்கள் தங்கள் இருப்பிடங்களில் இருந்து வெளியேற வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகியுள்ளார்கள் என்று ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவுத்திட்டம் கூறியுள்ளது. சூடானில் ராணுவம் மற்றும் துணை ராணுவம் ஆகிய இரு படைகளுக்கும் இடையில் சண்டை நடந்து வருகிறது. மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்குத் தேவையான உணவு மற்றும் தங்குமிடம் ஆகியவற்றை உத்தரவாதப்படுத்துவதில் சிக்கல்கள் இருப்பதாக உலக உணவுத்திட்ட்ம் தெரிவித்துள்ளன. சண்டை நடப்பதால் நிவாரண உதவிகள் முழுமையாக சென்றடையவில்லை. உள்நாட்டுச் சண்டை தொடங்கி ஆறு வாரம் ஆகியுள்ள நிலையில் இதுவரையில் 7 லட்சத்து 82 ஆயிரம் பேருக்கு உணவு மற்றும் ஊட்டச்சத்து கிடைக்க வழி செய்துள்ளதாக உலக உணவுத் திட்ட அமைப்பு தெரிவித்திருக்கிறது. போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டும், அது முழுமையாக நடைமுறைக்கு வரவில்லை. இருப்பினும் கடந்த நான்கு வாரங்களில் இந்த நிவாரணப் பணிகளை மேற்கொள்ள முடிந்தது என்று கூறியிருக்கிறார்கள். இதுவரையில் கிடைத்துள்ள தகவல்களின்படி, 12 லட்சம் பேர் தங்கள் இருப்பிடங்களில் இருந்து வெளியேறியிருக்கிறார்கள். இன்னும் பல பகுதிகளுக்கு நிவாரணப் பணிகளைக் கொண்டு சேர்க்க முடியாத நிலை இருக்கிறது. அந்தப் பகுதிகளுக்குச் சென்றபிறகுதான் இருப்பிடங்களில் இருந்து வெளியேற்றப்பட்டவர்களின் எண்ணிக்கை முழுமையாகத் தெரியும் என்று உலக உணவுத் திட்ட அமைப்பு தெரிவித்துள்ளது.