திருவனந்தபுரம், ஆக. 8- கேரளாவில் நாலெட்ஜ் எகானமி மிஷனின் வாழ்க்கைப் பாதை திட்டத்தின் இரண்டாம் கட்டத்தில் ஒரு வருடத்திற்குள் 60,000 பெண்கள் அறிவுசார் பணிகளில் ஈடுபடுவதை இலக்காகக் கொண்டு தொடங்குகிறது. இத்திட்டம் 398 உள்ளாட்சி அமைப்புகளில் செயல்படுத்தப்படும். தற்போது, 14 மாவட்டங்களில் 2,77,750 வேலை தேடும் பெண்கள் இத்திட்டத்தில் பதிவு செய்துள்ளனர். பெரும்பாலான வேலை தேடுபவர்கள் திருச்சூர் மாவட்டத்தில் (38,355 பேர்) உள்ளனர். இத்திட்டத்தின் இரண்டாம் கட்ட பணிகள் 2023 மார்ச் 31ஆம் தேதிக்குள் நிறைவடையும். அறிவுசார் இயக்கத்தின் டிஜிட்டல் தளமான டிஜிட்டல் பணியாளர் மேலாண்மை அமைப்பு (DWMS) மூலம் பதிவு செய்யப்பட்ட அனைத்து நபர்களுக்கும் பணித் தயாரிப்பு ஆதரவை மிஷன் வழங்கும். ஒரு லட்சம் பேருக்கு திறன் பயிற்சி அளிப்பதன் மூலம் 60,000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். பயனாளிகள் 18 முதல் 59 வயதுக்கு உட்பட்ட பெண் வேலை தேடுபவர்கள் மற்றும் பிளஸ் டூ அடிப்படைத் தகுதி உடையவர்கள். இத்திட்டத்தின் முதற்கட்டமாக இரண்டு மாத தீவிர திட்டத்தின் மூலம் 1189 பேருக்கு பரிந்துரை கடிதம் வழங்கப்பட்டது. மாநில அளவில் முதல்வர் பினராயி விஜயன் நேரடியாக பணி நியமன ஆணையை வழங்கினார். இந்த திட்டத்தின் இரண்டாம் கட்டம் தற்போது தொடங்கியுள்ளது.
அறிவுசார் வேலை அலகுகள்
வேலை தேடுபவர்களை அவர்களின் கல்வித் தகுதியின் அடிப்படை யில் வெவ்வேறு குழுக்களாகப் பிரித்து அறிவுசார் வேலைப் பிரிவுகளை உருவாக்குவதன் மூலம் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. முதல் கட்டத்தில் உருவாக்கப்பட்டவை உட்பட அறிவுசார் வேலை பிரிவுகள் செயல்படுத்தப்பட்டு மேலும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். விண்ணப்பதாரர்களின் திறமை மற்றும் விருப்பத்தைப் புரிந்துகொண்டு, தொழில் ஆலோசனை, ஆளுமை மேம்பாட்டுப் பயிற்சி, பணித் தயார்நிலைத் திட்டம், ரோபோட்டிக் நேர்காணல், ஆங்கில மொழித் திறனை அளவிடுவதற்கான ஆங்கில மதிப்பெண் தேர்வு, வேலைக்குத் தயார் செய்தல், வேலைவாய்ப்பு கண்காட்சிகள் மற்றும் நேர்காணல்களில் பங்கேற்பது மற்றும் பரிந்துரை கடிதம் அளிக்கும் பணிகளை இவ்வியக் கம் (மிஷன்) மேற்கொள்ளும்.