science

img

சைபீரியாவில் 40,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஓநாயின் தலை கண்டெடுப்பு!

சைபீரியாவில் உள்ள ஒரு நதிக்கரை ஓரம் சுமார் 40,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஓநாயின் தலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.

கிழக்கு சைபீரியாவில் உருகிவரும் பனிக்கிடையே, அழிந்த மாமோத் வகை யானைகளின் தந்தம் கிடைக்கிறதா என அப்பகுதியினர் தேடியபோது, திரெக்டியாக் நதிக்கரை ஓரம் ஒருவர் பனி ஓநாயின் தலை ஒன்றினை கண்டெடுத்தார். இந்த ஓநாயின் தலை மிகவும் வித்தியாசமான உருவ அமைப்பினை கொண்டிருந்ததால் அதனை யாகுடாவில் உள்ள அறிவியல் ஆராய்ச்சி மையத்திற்கு அப்பகுதி மக்கள் அனுப்பி வைத்தனர்.

அந்த ஓநாயின் தலையினை ஆய்வு செய்த யாகுடாவில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் அதன் வாழ்நாள் காலம் குறித்த அடுத்தகட்ட ஆய்வுக்காக ஜப்பான் மற்றும் சுவீடன் நாட்டில் உள்ள சக ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு ஓநாய் தலையின் மாதிரிகளை அனுப்பி வைத்தனர்.

ஜப்பான் மற்றும் சுவீடன் நாட்டின் ஆராய்ச்சியாளர்கள் ஓநாயின் தலையின் உரோமம், பல், மூளை, முக தசைகள் போன்ற மாதிரிகளை ஆராய்ந்ததில், அது சுமார் 40,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த பனி ஓநாயின் தலை என கண்டுபிடித்துள்ளனர். அக்காலக்கட்டத்தில் ஏற்பட்ட பேரழிவில் சிக்கி இந்த ஓநாய் உயிரிழந்திருக்கலாம் எனவும், பனியில் இருந்ததால் அதன் தலை பகுதி அழுகாமல் உறைந்து உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். மேலும், இது குறித்து பல்வேறு ஆராய்ச்சிகளை ஆய்வாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

;