science

img

அறிவியல் கதிர்

நெடுநல் கோடை

ஜூன் 21ஆம் தேதியன்று பூமியின் வட கோளத்தில் கோடை காலம் தொடங்குகிறது. இதை ‘கோடை கதிர் திருப்பம்’(summer solstice) என்கிறார்கள். மிக நீண்ட பகலும் மிகக் குறைவான இரவும் கொண்ட தினம் இது. பூமியின் அச்சு சூரியனை நோக்கி அதிக பட்சம் சாய்ந்திருக்கும் ஒரு விண்வெளி நிகழ்வு இது. இதற்குப் பிறகு பகல் நேரம் குறையத் தொடங்கி குளிர் கால கதிர் திருப்பமான(Winter solstice) டிசம்பர் 21ஆம் தேதியன்று மிகக் குறைந்த பகல் தினமாக ஆகிறது. 

இதேபோல் நில நடுக்கோட்டின் தளம் சூரியனின் மய்யத்தின் மேலாக இருக்கும் நாளை சம பகலிரவு நாள் (equinox) என்கிறோம். இது ஆண்டில் இரண்டுமுறை நிகழ்கிறது. மார்ச் 2௦-21 மற்றும் செப்டம்பர் 22-23 நாட்களில் வரும் இவற்றை முறையே வசந்த கால சம பகலிரவு மற்றும் இலையுதிர்கால சம பகலிரவு என்கிறார்கள். கதிர் திருப்பத்திற்கும் சம பகலிரவு  நாளுக்கும் உள்ள முக்கிய வேறுபாடு என்னவென்றால் முன்னதில் பூமி சூரியனை சுற்றி வரும் பாதையில் நில நடுக்கோட்டிலிருந்து சூரியன் அதிக தொலைவில் இருக்கிறது. பின்னதில் மிகக் குறைந்த தொலைவில் இருக்கிறது.

கிங் பென்குவின் பேரழிவு காரணம் என்ன?

நமது பூமியிலுள்ள கிங் பென்குவின் பறவைகளின் மிகப் பெரிய காலனி அழிந்துவிட்டது.1980இலிருந்து தொடங்கிய இந்த அழிவினால் 90ரூ அந்தப் பறவைக் கூட்டம் மறைந்துவிட்டது. இதன் காரணம் மர்மமாக இருந்தாலும் பருவ நிலை மாற்றங்களும் நோய்களும் காரணமாக இருக்கலாம் என்று அறிவியலாளர்கள் ஊகிக்கிறார்கள். 1997ஆம் ஆண்டு ஏற்பட்ட வலிமையான எல் நினோ பருவ நிலை, பறவைகளின் இரைகளான மீன்களையும் ஈர்க்குக் கணவாய்களையும்(squid) அதன் இரை தேடும் பரப்பிற்கு அப்பால் தெற்கு நோக்கி தள்ளிவிட்டது. 

இந்தப் பறவைக் காலனி முதலில் 6௦களில் தெற்கு இந்தியக் கடலில் மடகாஸ்கருக்கும் அண்டார்டிக்காவிற்கும் இடையிலுள்ள பிக் தீவில் கண்டுபிடிக்கப்பட்டது. அதன் வளர்ச்சியின் உச்சகட்டத்தில் 2௦ இலட்சம் பறவைகளும் ஐந்து இலட்சம் இனப்பெருக்க ஜோடிகளும் இருந்தன. இப்பொழுது வானிலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படத்தில் அந்த நிலப் பரப்பு வெறுமையாகக் காணப்படுகிறது. 1982ஆம் ஆண்டிலிருந்து யாருமே அங்கு காலடி எடுத்து வைக்கவில்லை என்றாலும் இப்பொழுது சுமார் 60000 இனப்பெருக்க ஜோடிகளே இருக்கலாம். இந்த அழிவு தொடரும் என அறிவியலாளர்கள் கருதுகின்றனர்.

கிங் பென்குவின் கூடு கட்டாது. ஒரு நேரத்தில் ஒரே ஒரு முட்டை இட்டு அதை தன் கால்களுக்கிடையில் எடுத்து செல்லும். தாய் தந்தைப் பறவைகள் ஓரிரு வாரத்திற்கு ஒரு முறை மாறி மாறி அடைகாக்கும். இப்போதைக்கு அழிந்துவரும் இனங்களின் சிவப்புப் பட்டியலில் ‘மிகக் குறைந்த அக்கறை காட்ட வேண்டிய இனம்’ என்று குறிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்தப் பேரழிவிற்குப் பிறகு இது திருத்தப்படவேண்டி வரலாம். ஆய்வாளர்கள் இந்தத் தீவில் மேலும் ஆய்வுகளை மேற்கொண்டு பறவைகளுக்கு தொற்று நோய் வந்துள்ளதா என்று சோதனை செய்து அதுதான் அழிவிற்கு காரணமா என்று அறிய உள்ளார்கள். இந்த ஆய்வு அண்டார்டிக் சயின்ஸ் என்ற இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

மாயமாய் மறையும் ஸ்பூன்

காலியம்(Gallium) என்கிற உலோகம் ஆச்சரியமான ஒன்று. அது உலோகம் என்றாலும் 85.58 டிகிரி - ‘எப்’ கு(29.76 டிகிரி சி) வெப்பத்தில் திரவ நிலையில் இருக்கிறது. 1871ஆம் ஆண்டு வேதியியல் அட்டவணையை தயாரித்த ரஷ்ய அறிவியலாளர் டிமிட்டிரி மெண்டலீவ் தனது அட்டவணையில் சில கட்டங்களை காலியாக விட்டிருந்தார். அந்த மூலகங்கள் இருக்கிறதென்றும் ஆனால் அறிவியலாளர்கள் இன்னும் அவைகளை கண்டுபிடிக்கவில்லை என்றும் கூறினார். அப்போதிருந்த பெரும்பாலான விஞ்ஞானிகள் அவர் சொல்வது பைத்தியக்காரத்தனமானது என்றனர். ஆனால் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு காலியம் கண்டுபிடிக்கப்பட்டது. அது அவர் விட்டிருந்த காலி கட்டம் ஒன்றில் மிகச் சரியாக பொருந்தியது. காலியம் அதிக அளவில் தாதுக்களிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட பின் விஞ்ஞானிகள் அதில் பல சோதனைகளை நடத்தினர். அதில் ஒன்று ‘வரவேற்பறை தந்திரம்’ என்றழைக்கப்படுகிறது. திரவ காலியத்தை திடப் பொருளாக்கி ஸ்பூனாக செய்து விருந்தினரிடம் தேநீரைக் கலக்குவதற்காக கொடுப்பார்களாம்.சூடான தேநீரில் அது உருகி கரைந்துவிடுமாம். ஆகவே மாயமாக மறைந்துவிடும். இந்தக் கதை எவ்வளவு தூரம் உண்மை என்று சொல்லமுடியாது. ஆனால் இது காலியத்தின் விசேச குணத்தையும் விஞ்ஞானிகளின் விசேச நகைச்சுவை உணர்வையும் காட்டுகிறது என்கிறார் கிரேக் பீல்ஸ்.

 

;