science

img

அறிவியல் கதிர்

குளிர் அரசன்


வடகிழக்கு சைபீரியாவிலுள்ள யாகுஷியா பிரதேசம் குளிர் அரசன் என்றழைக்கப்படுகிறது. அது நிரந்தரமான உறைபனியால்(Perma Frost) மூடப்பட்டிருக்கும். ஆனால் சைபீரியாவை உள்ளடக்கிய ஆர்டிக் பிரதேசம் உலகின் மற்ற பகுதிகளைவிட இரண்டு மடங்கு வெப்பமாகிவருகிறது. எனவே யாகுஷியா பகுதியும் உருகிவருகிறது. அதன் அடிப்பரப்பில் புதைந்துபோயிருந்த ஓநாய்களின் தலைகள் வெளிவரும் விநோதக் காட்சி அடிக்கடி தென்படுகிறது. ஏற்கனவேஅங்குஉலி மாமூத்ஸ்(woolly mammoths) எனப்படும் அழிந்துபோய்விட்டபிரம்மாண்ட விலங்குகளின் உடல்கள் பூமியின் அடியிலிருந்து வெளி வந்துகொண்டிருக்கின்றன. புவிவெப்பமயமாதலினால் ஏற்படும் மற்ற விளைவுகளும் உறைபனி உருகுவதும் இந்தப் பிரதேசத்தில் பல மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. நிரந்தர உறைபனி இழப்பானது நில அமைப்பையே சிதைத்து வீடுகளையும் பண்ணைகளையும் தரைமட்டமாக்கி வருகின்றன. நூற்றாண்டுகளாக வேட்டையாடப்பட்டு வந்த விலங்குகளின் இடம் பெயர்வது மாற்றமடைந்துள்ளது. ஒவ்வொரு வசந்த காலத்திலும் ஏற்படும் கடுமையான வெள்ளப்பெருக்கு  பெரும் அழிவை ஏற்படுத்துகின்றது.

‘ஒலி’மயமான எதிர்காலம்
 

ஒலியின் தனித் துகள்கள் (particles) போனான்ஸ் எனப்படும்.இவற்றைஅளவிடும் குவாண்டம் மைக்ரோபோன் ஒன்றை ஸ்டான்போர்ட் இயற்பியலாளர்கள் வடிவமைத்திருக்கிறார்கள். இது மிக மிக நுண்ணிய தன்மை கொண்டது. எதிர்கால குவாண்டம் இயந்திரங்களில் தேவைப்படும்புதுவகை உணர்விகள், சேமிப்புக் கலங்கள், டிரான்ஸ்டியுசெர்ஸ் போன்றவைகளை கட்டமைக்க இந்தக் கருவி பயன்படும் என்கின்றனர் அந்த ஆய்வாளர்கள். இந்தக் கண்டுபிடிப்பின் மூலம் ஒளியைப் பயன்படுத்தாமல் ஒலியை அடிப்படையாகக்கொண்டு இயங்கும் எதிர்கால கணினிகள்வரலாம்.

தங்கமே தங்கம்...

இங்கிலாந்து நாட்டிலுள்ள லீட்ஸ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் மிக மெல்லிய தங்க இழையை உண்டாக்கி யிருக்கிறார்கள். எந்தவிததாங்குபொருளு மில்லாத இதன் கனம் இரண்டு அணுக்களின் அளவும். மனித நகத்தின் அளவில் பத்து லட்சத்தில் ஒரு பங்குமே உள்ளது. ஆய்வாளர்கள்இதன் கனத்தை 0.47 நானோ மீட்டர் என அளவிட்டுள்ளார்கள். மின்னணுதொழில்களிலும் மருத்துவக் கருவிகளிலும் இது பரவலாகப் பயன்படும்.

விண்வெளியில் நிஜ கற்பகத் தரு

விண்வெளியில் நிஜ கற்பகத் தரு ஐக்கிய அரபுக் குடியரசு(UAE)விண்வெளிப் பயணத்தில் சாதனை படைக்கும் தருவாயில் உள்ளது.செவ்வாய் கிரகத்திற்கு விண்கலம் ஒன்றை அனுப்பும் கனவை நனவாக்கும் முதல் இஸ்லாமிய நாடாக அது மாற இருக்கிறது. ஹோப்(Hope Probe) என்று பெயரிடப்பட்ட இந்த விண்வெளி திட்டமானது 2020ஆம் ஆண்டில் ஏவப்பட்டு 2021ஆம் ஆண்டு செவ்வாயில் இறங்கும். 2021 ஆம்ஆண்டு ஐக்கிய அரபுக் குடியரசு அமைக்கப்பட்ட ஐம்பதாவது ஆண்டு என்பது குறிப்பிடத்தக்கது. சிறிய காரின் அளவே இருக்கும் அந்த விண்கலம் 1.5 டன் எடைகொண்டது. செவ்வாய் கிரகத்தின் வளி மண்டலத்தை முழுமையாகப் புரிந்துகொள்வது, அதன் மேற்பரப்பிலிருந்து திரவ நிலை நீர் மறைந்ததற்கான காரணம். பருவ நிலை மாற்றத்திற்கும் வளி மண்டலத்தின் சிதைவிற்கும் உள்ள தொடர்பு ஆகியவற்றை ஆராய்வதே இதன் நோக்கமாகும். வண்ணப் படங்களை அனுப்பும் உயர் பகுப்பு டிஜிட்டல் காமிரா, அகசிகப்பு பிரிமானி, புற ஊதா பிரிமானி ஆகியவை இதில் பொருத்தப்பட்டிருக்கும்.  அங்கு ஈச்சைமரங்கள்(palm)வளர ஏதுவான சுற்றுச் சூழல் இருப்பதால் அவற்றை வளர்க்க முடியுமா என்றும் ஆராயப்படும். பூமியிலும் விண்வெளியிலும் உணவுப் பாதுகாப்பை ஏற்படுத்தும் தேசிய மற்றும் சர்வ தேசிய முயற்சிகளை அது ஆதரிக்கும் என்கிறார் ‘விண்வெளியில்ஈச்சை மர சோதனை’ திட்டத்தின் இயக்குநர் ரஷித்அல் ஸாபி. (Gulf News-MSN NEWS)

 

ஆலைகள் சுத்தமாகுமா?

நிலக்கரியை பயன்படுத்தும் நமதுமின் உற்பத்தி நிலையங்களில் மாசு படுத்தாத தொழில்நுட்பத்தை ஏற்படுத்த 73000/ கோடி ரூபாய்கள் தேவைப்படும்என்று ஒரு ஆய்வு கூறுகிறது. இதனால் மின் கட்டணங்கள் குறைந்தபட்சம் 10 சதவீதம் உயரலாம் என்கின்றனர் அந்த ஆய்வாளர்கள். பொருத்தமான தொழில்நுட்பத்தை அமல்படுத்தி தாங்கள் வெளிவிடும் புகையில் சல்பர் டை ஆக்சைடும் நைட்ரஸ் ஆக்சைடும் குறைக்கப்படுவதைமின் உற்பத்தி நிலையங்கள் உறுதி செய்யவேண்டும் என்று விதிகள் இயற்றப்பட்டுள்ளன. இவை 2017க்கு முன்னால் அமுல்படுத்தப்பட்டிருக்க வேண்டும். இப்பொழுது இந்த காலக் கேடு 2022 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. காலவதியாகப் போகும் ஆலைகளைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாவிட்டால் இதற்காகும் செலவு ரூ73176/ கோடியும்எல்லா ஆலைகளையும் எடுத்துக் கொண்டால் செலவு ரூ.86135/ கோடியும் தேவைப்படுமாம். இந்த அறிக்கையை எரிசக்தி, சுற்றுச் சூழல் மற்றும் நீர் ஆதார வளர்ச்சிக்கான சர்வதேசிய கவுன்சில் தயாரித்துள்ளது. சல்பர் மாசைக் குறைக்கும் சாதனங்கள் 166 கிகாவாட் உற்பத்தி நிலையங்களிலும் துகள் மாசைக் குறைக்கும் சாதனங்கள்  66 கிகாவாட் உற்பத்தி நிலையங்களிலும் பொருத்தப்பட வேண்டும் என்று மத்திய மின் வாரியம் கூறுகிறது.

 

;