கொரோனா தொற்று 20 அடி தூரம் வரை பரவும் என்ற அதிர்ச்சித் தகவல் அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.
வரும் குளிர்காலத்தில் கொரோனா வைரஸ் இந்தியாவில் மும்மடங்கு அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் நிபுணர்கள் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்த வண்ணம் உள்ளனர். இருமல், சளி, எச்சில் துப்புதல் போன்றவற்றால் கொரோனா வைரஸ் மற்றவர்களுக்குப் பரவுகிறது. பேசுவதன் மூலமாகவும் தெறிக்கும் துளிகளில் கொரோனா பரவுகிறது. இதன் மூலம் தொற்று உடைய 40 ஆயிரம் துளிகள் வெளியேறுகின்றன. புவி ஈர்ப்பு விசையால் பெரும்பாலும் இவை நிலத்தில் உதிர்ந்து விடுகின்றன. எனினும் சில துளிகள் காற்றில் மிதந்தபடி பல மணி நேரம் நீடிக்கின்றன. இதுவரை ஆறடி வரைதான் பாதிப்பு இருக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர். தற்போது 20 அடி தூரம் வரை நோய் நுண்தொற்று பரவக்கூடும் என்று கலிபோர்னியா பல்கலைக்கழக ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது. விஞ்ஞானிகள் நீர்த்துளிகளின் ஏரோடைனமிக்ஸ் மற்றும் சுற்றுச்சூழலுடன் அவற்றின் வெப்பம் மற்றும் வெகுஜன பரிமாற்ற செயல்முறை ஆகியவை வைரஸ் பரவலின் செயல்திறனை தீர்மானிக்கக்கூடும் என கூறி உள்ளனர்.
இருப்பினும் முகக்கவசம் அணிவதால் ஏரோசல் துகள்கள் வழியாக பரவுவதற்கான வாய்ப்பை திறம்பட குறைக்க முடியும் பெரிய துளிகளால் தொற்றுநோய்க்கான அபாயத்தை தனிமனித இடைவெளியை கடைபிடிப்பதன் மூலம் குறைக்க முடியும் என ஆய்வாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.