ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் கடலோரப் பகுதியில் இன்று (வியாழக்கிழமை) நிழல் இல்லாத நாளாகக் கணிக்கப்பட்டுள்ளது.
சூரியன் தலைக்கு மேல் நேராக இருக்கும்போது நிழலின் நீளம் பூஜ்ஜியமாக இருக்கும். அப்போது, நிழல் சரியாக காலுக்குக் கீழே இருக்கும். அதாவது செங்குத்தாக நிற்கும் பொருட்களின் நிழல் அதன் அடியிலேயே விழுந்து விடுவதால் நம் கண்களுக்கு தெரியாது. இதனை வானியல் ஆய்வாளர்கள் நிழல் பூஜ்ஜியம் (Zero shadow) என குறிப்பிடுகின்றனர். இதேபோல், சூரியன் சரியாக தலைக்கு மேல் ஆண்டுக்கு இருமுறை மட்டுமே வரும். இந்த நிகழ்வானது அனைத்து இடங்களிலும் ஒரே நாளில் நிகழ்வதில்லை. அந்த இடத்தின் தீர்க்க ரேகைக்கு ஏற்ப வெவ்வேறு நாள்களில் நிகழும். சூரியனின் வட நகர்வு நாள்களில், ஒரு நாளும், தென் நகர்வு நாள்களில் ஒரு நாளும் என ஆண்டுக்கு இருமுறை இது நிகழும். அதன்படி இன்று (ஆகஸ்ட் 29), ராமேசுவரம் கடலோரப் பகுதிகளில் நிழல் இல்லாத நாள் தோன்றுகிறது. சரியாக நண்பகல் 12.14 மணிக்கு சூரியன் நடு உச்சத்தில் இருக்கும் போது நிழல் இல்லாத நேரம் ஏற்படுகிறது.
அதே போல், தமிழகத்தில் சில இடங்களில் நிழல் இல்லாத நிகழும் தகவல் கணிக்கப்பட்டுள்ளது. வரும் ஆகஸ்ட் 30-ஆம் தேதி தூத்துக்குடியில் பகல் 12.18 மணியளவிலும், திருநெல்வேலியில் 12.20 மணியளவிலும், ஆகஸ்ட் 31-ஆம் தேதி திருச்செந்தூரில் பகல் 12.18 மணியளவிலும், நாங்குநேரியில் 12.20 மணியளவிலும், செப்டம்பர் 1-ஆம் தேதி கன்னியாகுமரி மற்றும் நாகர்கோவிலிலுல் பகல் 12.20 மணியளவிலும் ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது.