சென்னை,நவ.21- இந்தியாவின் பிஎஸ்எல்வி -சி47 ராக்கெட் நவம்பர் 25 ஆம் தேதி விண்ணில் ஏவப்பட இருந்த நிலையில், அதனை இஸ்ரோ ஒத்தி வைத்துள்ளது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து பிஎஸ்எல்வி சி-47 ராக்கெட் மூலம் இந்தியாவின் கார்ட்டோசாட்-3 செயற்கைக்கோள் வரும் 25ஆம் தேதி காலை 9.28 மணியளவில் விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ அறிவித்திருந்தது. அதனுடன் சேர்த்து அமெரிக்காவின் 13 நானோ செயற்கைக்கோள்களும் விண்ணில் செலுத்தப்பட இருந்தன. இந்நிலையில் பிஎஸ்எல்வி -சி47 ஏவப்படுவதை நவம்பர் 27ஆம் தேதிக்கு இஸ்ரோ ஒத்திவைத்துள்ளது. காரணம் குறித்த தகவல் ஏதும் வெளியாகவில்லை.