வானில் ஒரு தீபாவளி
அக்டோபர் 1ஆம் தேதி பெங்களூரு மக்கள் வானில் அற்புதமான இளஞ்சிவப்பு, பச்சை மற்றும் மஞ்சள் வண்ணங்கள் கற்றைகளாக காட்சியளித்ததைக் கண்டனர். புகைப்படக் கலைஞர்களும் வான் ஆர்வலர்களும் இதைப் புகைப்படம் எடுத்து சமூக ஊடகங்களில் பகிர்ந்தனர். இது ஒரு வால் நட்சத்திரம் பூமியின் வானைக் கடப்பதால் உண்டானது. இந்த வால் நட்சத்திரம் 2023ஆம் ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி சீனாவிலுள்ள பர்ப்பிள் மவுண்டன் ஆய்வு நிலையத்தால் கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கு C/2023 A3 எனப் பெயரிடப்பட்டது. இது தற்போது செக்ஸ்டன்ஸ் எனும் கூட்டத்தில் உள்ளது.பூமியிலிருந்து 129.6 மில்லியன் கிலோமீட்டர்கள் தொலைவில் உள்ளது. 80000 ஆண்டுகளுக்கு பின் பூமிக்கு மீண்டும் வருகிறது. பூமிக்கு அருகில் வரும் வால் நட்சத்திரங்களை ஹாலியின் வால் நட்சத்திரம் போன்ற வழக்கமாக வருபவை மற்றும் இது போன்று திடீரென்று தோன்றுபவை என வகைப்படுத்துகின்றனர். அதாவது இவை சூரிய குடும்பதிற்கு வெளியிலிருப்பவை என்கின்றார் பெங்களூருவை சேர்ந்த வானியலாளர் .
கருவின் வளர்ச்சியை தாமதப்படுத்தும் ஏற்பாடு
சில பாலூட்டிகளில், தொடர்ச்சியாக கரு வளரத் தொடங்கும் இயல்பான காலத்தை மாற்ற முடியும் என்று அறிவியலாளர்கள் கண்டுபிடித்திருக்கின்றனர். . இது கருவும் தாயும் பிழைக்கும் வாய்ப்பை அதிகரிக்கிறதாம். ஆண்விந்துவுடன் பெண் சினைமுட்டை இணைந்து கருப்பையில் தங்குவதற்கு முன்பு பிளாஸ்டோஸிஸ்ட் எனும் நிலையில் இது நிகழ்கிறது. இந்த ஏற்பாட்டினால் கருவின் வளர்ச்சி மெதுவாக நடக்கிறது. இதை வாரக்கணக்கிலும் அல்லது மாதக் கணக்கிலும் தக்க வைக்க முடியும். இதற்கான மூலக்கூறு செயல்பாட்டை மனித செல்களிலும் நிகழ்த்த முடியும் என்று தோன்றுகிறது.
விண்வெளியில் இதயம் பாதிக்கப்படுமா?
விண்வெளியில் அதிக காலம் கழிக்கும்போது மனித உடலில் பாதிப்புகள் ஏற்படுகின்றன என்பது அறியப்பட்டதே. பல ஆண்டுகளாக நாசாவும் பிற விண்வெளி முகமைகளும் பன்னாட்டு விண்வெளி நிலையத்தில் உள்ள மனிதர்கள், விலங்குகள் மற்றும் தாவரங்களில் நுண் ஈர்ப்பு விசையின் தாக்கங்கள் குறித்து ஆய்வுகள் செய்து கொண்டிருக்கின்றன. இதுவரை செய்யப்பட்ட ஆய்வுகளில் நீண்ட காலம் விண்வெளியில் இருப்பதால் தசை இறுகுதல், எலும்பு அடர்த்தி குறைதல், பார்வை, மரபணு வெளிப்பாடு ஆகியவற்றில் மாறுதல்களும் உளவியல் பிரச்சனைகளும் தெரிய வந்துள்ளன. எதிர்காலத்தில் நிலவு, செவ்வாய் அதற்கப்பாலும் உள்ள கோள்களுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டம் உள்ளிட்ட விண்வெளி ஆய்வுகள் நடத்த இருப்பதால் இந்த தாக்கங்களையும் அதற்கான தீர்வுகளையும் கண்டறிவது அவசியம் ஆகும். அண்மையில் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகமும் நாசாவின் ஜான்சன் விண்வெளி மய்யமும் இணைந்து நடத்திய ஆய்வில் இதயமும் பாதிக்கப்படுவது தெரிய வந்துள்ளது. உயிரிப் பொறியியல் ரீதியாக கட்டமைக்கப்பட்ட மனித இதய தசைகள், விண்வெளி நிலையத்தில் 30 நாட்கள் வைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது. நுண் ஈர்ப்பு விசையில் இயங்கிய இதயத் தசைகள் பலவீனமடைவதாகவும் சீராக துடிக்கும் திறன் குறைவதாகவும் அந்த ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். “இந்த சோதனையில் வியக்கதக்க வகையான ஸ்டெம் செல், தசை பொறியியல், உயிரி உணர்வி, உயிரி எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் நுண் கட்டமைப்பு ஆகியவை மூலம் விண்வெளியில் தசைகளை இயக்குவது சாத்தியப்பட்டது” என்கிறார் இதன் தலைவர் கிம். இந்த ஆய்வு Proceedings of the National Academy of Sciences என்கிற இதழில் செப்டம்பர் 23ஆம் தேதி வெளிவந்துள்ளது. விண்வெளியில் நுண் ஈர்ப்பு விசையால் இதய தசைகள் மீது ஏற்படும் தாக்கம் மட்டுமல்ல, பூமியிலும் இதய தசைகள் மூப்படைவதும் அதற்கான சிகிச்சைக்கும் இது உதவும் என்கிறார்கள் இந்த ஆய்வுக் குழுவினர்.
மன அழுத்தமும் அறிதல் திறனும்
மன அழுத்தம் மற்றும் மன உணர்வுக் கோளாறுகள் ஆகியவற்றிற்கு தரப்படும் மருந்துகள் எவ்வாறு வேலை செய்கின்றன என்பது குறித்து ஒரு ஆய்வு செய்யப்பட்டுள்ளது. கோபன்ஹேகன் பல்கலைக்கழகத்தை சேர்ந்த உளவியலாளர் வைபெக் டேம் குழுவினர் மிதமான மற்றும் தீவிரமான மன அழுத்தம் உள்ள 90 நபர்கள் மீது இந்த மருந்துகளின் தாக்கத்தை ஆய்வு செய்தனர். மருந்து எடுத்துக் கொள்ளும் முன்னும் பின்னும் எட்டு முதல் 12 வாரங்கள் அவர்களது மூளை ஸ்கேன் ,அறிதல் மற்றும் உணர்வு நிலைகளை ஆழமாக பரிசீலித்தனர். சிகிச்சைக்குப் பின், நினைவாற்றல் மற்றும் அறிதல் நிலைகள் மேம்படுவது காணப்பட்டது. ஆனால் மன உணர்வு நிலைகளில் முன்னேற்றம் காணப்படவில்லை. இந்த சிகிச்சையினால் சில நரம்பு இடைவெளிகள்/ ஏற்பிகள் தூண்டப்படுகின்றன. தீவிர மன அழுத்த கோளாறு உள்ளவர்கள் மற்றும் குடும்ப பின்னணி உள்ளவர்கள் உடலில் இந்த ஏற்பிகள் குறைவாக காணப்படுகின்றன. எனவே மனஅழுத்தக் கோளாறு உள்ளவர்களுக்கு நினைவாற்றல் குறைபாடும் இருப்பது இதன் மூலம் விளக்கப்படுகிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள். குறிப்பிட்ட ஏற்பிகளை தூண்டுவதன் மூலம் மன அழுத்தத்தை குணப்படுத்துகிறதோ இல்லையோ அறிதல் சிக்கல்களை குணப்படுத்தும் சாத்தியத்தை இந்த ஆய்வு காட்டுகிறது என்கிறார் அதே பல்கலைக்கழகத்தை சேர்ந்த நரம்பியலாளர் வைப் ஃப்ரோக்ஜேர். தீவிர மன அழுத்தக் கோளாறுகளுக்கு இப்போதுள்ள மருந்துகளும் மாற்று முறைகளும் எவ்வாறு செயல்படுகின்றன என்பதற்கு மேற்கொண்டு ஆய்வுகள் தேவைப்படுகின்றன என்கின்றனர் இந்த ஆய்வாளர்கள். இது ‘பயாலாஜிக்கல் சைக்கியாட்டிரி’ என்கிற இதழில் வெளிவந்துள்ளது.